லக்னோ: கொழுந்தனிடம் சண்டைக்கு போய் அவரது அந்தரங்க உறுப்பை கட அண்ணி கடித்து காயப்படுத்தி 55 தையல்கள் போட வைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் பின்வருமாறு:
உத்தர பிரதேச மாநிலம் சஜிதி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராம்ஸ்வர்ரூப். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன்பெயர் புஷ்பராஜ். இளையமகன் பெயர் ரஜ்னேஷ் (வயது 37). இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. புஷ்பராஜ் மனைவி பெயர் காயத்ரி. ரஜ்னேஷ் மனைவி பெயர் சுமன். இவர்கள் அனைவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் புஷ்பராஜ் - காயத்ரி தம்பதியின் மகன் தனது சித்தப்பா ரஜ்னேஷ் வீட்டிற்கு சென்றார். அப்போது ரஜ்னேஷ் மற்றும் அண்ணன் மகனுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ரஜ்னேஷ் தனது அண்ணன் மகனை அடித்துள்ளார். இதனால் அழுத அந்த சிறுவன் தனது தாய் காயத்ரியிடம் சென்று சித்தப்பா ரஜ்னேஷ் தன்னை தாக்கியதாக கூறினார். இதனால் காயத்ரி டென்ஷனின் உச்சத்துக்கு போனார். தனது மகனை கையோடு அழைத்து கொண்டு கொழுந்தன் ரஜ்னேஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை பார்த்து ''என் மகனை எப்படி அடிக்கலாம்?'' என்று கேள்வி கேட்டார். இது அண்ணி காயத்ரி மற்றும் கொழுந்தன் ரஜ்னேஷ் இடையே வாக்குவாதமாக மாறியது. இந்த வாக்குவாதம் முற்றவே கோபமான ரஜ்னேஷ் தனது லுங்கியை மடித்து கட்டி கொண்டு காயத்ரியை தாக்க முயன்றார். அப்போது காயத்ரி அவரது காலை பிடித்து கீழே இழுத்தார். இதில் இடறி கீழே விழுந்தார் ரஜ்னேஷ். அப்போது காயத்ரி அவரது அந்தரங்க உறுப்பை கடித்தார். இதில் வலி தாங்க முடியாமல் ரஜ்னேஷ் அலறி துடித்தார். உடனடியாக அவரது தந்தை ராம்ஸ்வர்ரூப் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரஜ்னேசை மீட்டனர். உடனடியாக காதம்பூர் சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் கான்பூரில் உள்ள உர்சூலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 55 தையல்கள் போடப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இதுதொடர்பாக ரஜ்னேஷ் மனைவி சுமன் சாஜிதி போலீசில் காயத்ரி மீது புகாரளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.