"என் அப்பா வாரிசு அரசியலில் வரவில்லை".. சுயசரிதையால் சோனியாவிடம் சண்டையிடும் பிரணாப் முகர்ஜி மகள்! ஆத்திரம்
டெல்லி: மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 2010ல் பிரதமர் பதவி மீது ஆசை வந்தது. இதனால் தலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று சோனியா காந்தி தனது சுயசரிதையில் கூறியுள்ளார். இந்நிலையில் தான் சோனியா காந்தியை பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் 'Belonging: A Journey of Love' இன்று வெளியானது. இந்த புத்தகம் நவம்பர் 16ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த புத்தகத்தில் சோனியா காந்தி தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங்கிற்கு பதில் தன்னை பிரதமராக்க வேண்டும் என்று பேசியதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை சோனியா காந்தி உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக சோனியா காந்தி தனது சுயசரிதையில் கூறியுள்ளதாவது: ''பிரதமராக மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அரசும், என்னுடைய தலைமையில் கட்சியும் செயல்பட்டு வந்த சமயம் அது. கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக பிரதமருடன் ஒரு முக்கிய குழு வாரந்தோறும் கூடி ஆலோசனை நடத்தும். இந்த குழுவில் பிரணாப் முகர்ஜி, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அர்ஜுன் சிங், கேரள முன்னாள் முதலமைச்சர் ஏகே அந்தோணி மற்றும் அகமது படேல் உறுப்பினர்களாக இருந்தனர்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க அமைக்கப்பட்ட 'யுத்தி குழு' (Strategy Group) உறுப்பினர்களாகவும் நாங்கள் அவ்வப்போதும் பங்கேற்போம். நிதி அமைச்சர் ப சிதம்பரத்துடன், பிரணாப் முகர்ஜிக்கு தீவிரமாக கருத்து வேறுபாடுகள் இருந்தன. 2010ல் ஒருமுறை பிரணாப் முகர்ஜி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அப்போது 'தலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று அவர் கூறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரணாப் முகர்ஜி நீண்டகாலமாக பிரதமராக வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார். அதன் வெளிப்பாடாக தான் இப்படி கூறினார் என்பதை உணர்ந்து கொண்டேன். இதனால் நான் மெல்ல பேச்சை மாற்றினேன். இதனால் அவர் ஏமாற்றமடைந்து இருக்கலாம்.
ஆனாலும் அதனை அவர் ஒருபோதும் குறையாக என்னிடம் கூறவில்லை. அதேபோல் என்னுடன் மனக்கசப்புடன் செயல்பட்டது இல்லை. பிறகு 2012ல் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நிறுத்தி வெற்றி பெற வைத்தோம். பிரணாப் முகர்ஜி எப்போதும் அறிவுக்கூர்மையுடைய அரசியல்வாதியாக இருந்தார். அவருடன் அடிக்கடி நான் உரையாடி உள்ளேன்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் சோனியா காந்தியின் இந்த கருத்து பற்றி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியை கோபப்படுத்தி உள்ளது. தனது தந்தை பிரணாப் முகர்ஜி பிரதமர் பதவியை பெற ஆசைப்பட்டதில் தவறு என்ன இருக்கிறது? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர் தலைமை பொறுப்பில் மாற்றம் தேவை என்று பிரணாப் கூறியது தனது அதிர்ச்சியாக அமைந்தது என்று சோனியா கூறியதற்கு பதிலடியும் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஷர்மிஸ்தா முகர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது? பிரதமராக லட்சியம் கொண்டிருப்பது ஒரு குற்றமா? குறிப்பாக, அந்த லட்சியத்திற்கு பின்னால் பல ஆண்டுகால கால அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம், கடின உழைப்பு, மற்றும் மிகச்சிறந்த அறிவுத்திறன் உள்ளிட்டவை இருக்கும்போது அது எப்படி தவறாகும்?.
பிரதமர் ஆக வேண்டும் என்ற விருப்பம் பற்றி எனது தந்தையிடம் நான் கேள்வி கேட்டேன். அதற்கு அவர், 'தகுதியுள்ள எந்தவொரு அரசியல்வாதிக்கும் இத்தகைய லட்சியம் இருப்பது இயல்புதான்' என்று கூறினார். எனது தந்தை சாதாரண நிலையில் இருந்து திறமை மற்றும் கடின உழைப்பால் மட்டுமே அனைத்தையும் அடைந்தார்.
அவருக்கு பிரதமர் பதவி உட்பட எந்தவொரு பதவியும் வாரிசுரிமை அடிப்படையில் தட்டில் வைத்து வழங்கப்படவில்லை. தகுதியுள்ள ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்று லட்சியம் கொண்டால் அதில் என்ன தவறு? ஒருவேளை காந்தி-நேரு குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவர் இத்தகைய லட்சியத்தை வைத்திருந்ததும், அதை அவரிடம்(சோனியா காந்தி) வெளிப்படுத்த துணிந்ததும் தான் சோனியா காந்தியை அதிர்ச்சியடைய செய்ததா?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதுமட்டுமின்றி ''என்னுடைய தந்தை எப்போதும் சோனியா காந்திக்கு எதிராக நின்றது இல்லை என்று அவரே புத்தகத்தில் கூறியுள்ளார். ஏனென்றால் என்னுடைய தந்தை எதார்த்தமான மனிதர். அவர் ஒருபோதும் சோனியா காந்தி மீது கோபம் கொண்டது இல்லை. இதனை அவரது டைரி மற்றும் என்னுடன் பேசிய விஷயங்களில் இருந்து நான் புரிந்து கொண்டேன்'' எனவும் அந்த பதிவில் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
