மும்பை: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. டைகர் ஷெராப்பை தாக்கியது தாங்கள் தான் என்று 2 பேர் அறிவித்துள்ள சூழலில், அவர்கள் லாரன்ஸ் பிஷ்னாய் கேங்கை சேர்ந்தவர்கள் என்றும் கூறி இருக்கின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதல் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயிர் தப்பிய சூழலில், அவரின் ஓட்டுநர் உட்பட 2 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த சம்பவம் பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இன்று கால்பந்து மைதானத்தில் இருந்து டைகர் ஷெராப் காரில் வெளி வந்த போது இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் யார் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் டைகர் ஷெராப் மீதான தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் பொறுப்பேற்று கொண்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில், அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சத்து ஆகியோர் தாங்களே நடிகர் டைகர் ஷெராப் மீதான தாக்குதலுக்கு பொறுப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அதேபோல் அவர்கள் தங்களை லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலை சேர்ந்தவர்கள் என்று கூறி இருக்கின்றனர். அந்த வீடியோவில், லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலின் உத்தரவுகளை நடிகர் டைகர் ஷெராப் பின்பற்றவில்லை. சல்மான் கானுடன் இணைந்து பணியாற்ற கூடாது என்று கூறியதை அவர் பின்பற்றவில்லை. சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதால் தான் எங்களின் ஹிட் லிஸ்டில் டைகர் ஷெராப் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே கடைசி வார்னிங் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நடிகர் டைகர் ஷெராப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து அவருக்கு நம்பிக்கை கூறியுள்ளார். அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் நீண்ட ஆண்டுகளாகவே நடிகர் சல்மான் கானை குறி வைத்துள்ளது. இதில் பிஷ்னாய் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.