சிவகங்கை: ஜெம் வீரமணி வழக்கில் திமுகவை குற்றம் சொல்ல முடியாது என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுவரை ஜெம் வீரமணி வழக்கில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக எந்த தகவலும் இல்லை என்று கூறிய கார்த்தி சிதம்பரம், காவல்துறையினரிடம் துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் யாரும் தப்பிவிடக் கூடாது என்று அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே 2025 அக்டோபர் மாதத்தில் ஜெம் வீரமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட போது, அவரை காப்பாற்ற முயற்சித்ததாக தவெக அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதனால் ஆட்சியாளர்களுக்கும் சம்பந்தம் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. காவல்துறைக்கு தன்னார்வலர் மூலம் ஒரு புகார் வந்தது. அதனை விசாரித்த காவல்துறை, போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி ஒரு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள். பிஎன்எஸ் சட்டப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். அப்போது காவல்துறை தரப்பில், நாங்கள் வழக்கை முடிக்கவில்லை. ஆதாரம் கிடைத்த பின் விசாரணை நடத்துவோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் துறை ரீதியான விசாரணையை தான் நடத்த வேண்டும். இதில் அரசியல் தலையீடு இருந்ததாக எந்தவித ஆதாரமும் இல்லை. இதுவொரு கொடூரமான செயல்.. இதனை தனி நபர் செய்திருந்தாலும், அதற்கு உடந்தையாக சிலர் இருந்திருப்பார்கள். அந்த சம்பந்தப்பட்டவர்கள் மவுனம் காத்துள்ளனர். அதனால் தான் இத்தனை நாட்களாக நடந்திருக்கிறது. பணம் மாறியது காவல்துறைக்குள் மட்டும் தானா.. அல்லது அரசியல்வாதிகளுக்கும் சென்றதா என்பதை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகாரும் அரசியல்வாதிகளுக்கு சொல்லப்படாது. நிறைய விஷயங்கள் காவல்துறையினர் அளவிலேயே இருக்கும். இந்த விவகாரம் காவல்துறைக்குள்ளேயே நடந்ததாகதான் சொல்லப்படுகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து, இடைத்தேர்தல் தவெகவுக்கு ஆதரவாக இருப்பதாகவே நினைக்கிறேன். மீண்டும் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு சீட் கொடுத்தது ஏற்புடையது கிடையாது. தவெகவுக்கு கூடுதல் எம்எல்ஏ-க்கள் தேவையில்லை. ஆளுங்கட்சிக்கு தான் அரசியல் சூழல் ஆதரவாக இருக்கிறது. வேட்பாளர்கள் நியமனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தவெகவில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். அதேபோல் அனைத்து அதிகார மையங்களும் சென்னையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய திட்டங்களை அறிவிக்கும் போது அடிப்படைகளை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.