ஒரே போட்டியுடன் சோலி முடிஞ்ச்.. காயம் அடைந்த ராமகிருஷ்ணா கோஷ்.. சிஎஸ்கே அணிக்கு அடுத்த சோகம்!
சென்னை: சிஎஸ்கே அணியின் அறிமுக வீரர் ராமகிருஷ்ணா கோஷ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது ராமகிருஷ்ணா கோஷ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தரமான வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. மும்பை அணிக்காக நமன் திர் 37 பந்துகளில் 57 ரன்களை சேர்த்தார். சிஎஸ்கே அணிக்காக அன்சுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.1 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 67 ரன்களையும், கார்த்திக் சர்மா 40 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரிகள் உட்பட 54 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணிக்கு இது 4வது வெற்றியாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் இளம் ஆல்ரவுண்டரான ராமகிருஷ்ணா கோஷ் அறிமுகமாகினார்.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், தனது மூன்றாவது ஓவரை வீசி முடித்த பிறகு ராமகிருஷ்ணா கோஷ் மைதானத்தை விட்டு நொண்டியபடி வெளியேறினார். பரிசோதனையில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டிதான் ராமகிருஷ்ணா கோஷிற்கு ஐபிஎல் அரங்கில் அறிமுகப் போட்டியாகும். தனது முதல் போட்டியிலேயே அபாயகரமான பேட்டர் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே வில் ஜாக்ஸ் கொடுத்த கடினமான கேட்ச்சை டைவ் அடித்து பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இந்த சீசனில் சிஎஸ்கே அணி ஏற்கனவே பல வீரர்களின் காயம் காரணமாகத் திணறி வருகிறது. ஏற்கனவே நேதன் எல்லீஸ், ஆயுஷ் மாத்ரே, கலீல் அஹ்மத், தோனி உள்ளிட்ட வீரர்கள் காயம் அடைந்து வெளியேறிவிட்டனர். தோனி மட்டும் இன்னும் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார். தற்போது ஆல்ரவுண்டரான ராமகிருஷ்ணா கோஷ் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications