'சமூக நீதித்துறை' என்பது நோக்கத்தை சிதைக்கும்.. ஒருபோதும் ஏற்க முடியாது.. ஜெகன் மூர்த்தி எதிர்ப்பு

  • சென்னை: தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 'சமூக நீதித்துறை' என மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். அரசு ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் வகையில், தமிழ்நாடு வணிக விதிகளில் திருத்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பூஜை ஜெகன் மூர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு அரசில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயங்கி வருகிறது. இந்த துறை பட்டிய இனத்தவர் மற்றும் பழங்குடி சமூகத்தினரின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்து செயல்படுத்துகிறது. குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச விடுதிகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வீட்டுமனைப் பட்டா வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை முன்னெடுத்து செயல்படுத்துகிறது.

    Advertisement

    இந்த நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் 'சமூக நீதித்துறை' என மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். அரசு ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் வகையில், தமிழ்நாடு வணிக விதிகளில் திருத்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தவெக அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக விசிகவைச் சேர்ந்த வன்னியரசு பொறுப்பு வகித்து வருகிறார்.

    இதற்கு புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூஜை ஜெகன் மூர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை 'சமூக நீதித்துறை' என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்த பெயர் மாற்றம் என்பது வெறும் சாதாரண நிர்வாக மாற்றம் அல்ல; இது பல தசாப்தங்களாக ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக துறையின் நோக்கத்தை சிதைக்கும் செயலாகும்.

    Advertisement

    நலத்துறையை 'சமூக நீதித்துறை' என்று பொதுவான பெயராக மாற்றுவதன் மூலம், இது அனைத்து தரப்பினருக்குமான ஒரு பொதுத்துறையாக மாற்றப்படும் சூழல் உருவாகும். இதனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்படும் நிதியும், சிறப்புத் திட்டங்களும் திசைமாறிப் போகும் பேராபத்து உள்ளது.

    சமூக நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது. அதற்காகத் தனியாகத் துறைகள் உருவாக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயரை மாற்றி, அதன் தனித்தன்மையை வீரியமிழக்கச் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது!

    தமிழக அரசு உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையை பொதுத்துறையாக மாற்றும் இந்த முயற்சியைக் கைவிட்டு, அத்துறை எப்போதும் போல ஒடுக்கப்பட்ட மக்களின் பிரத்யேக முன்னேற்றத்திற்கான துறையாகவே நீடிக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்!" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    Jegan Moorthy strongly opposes the renaming of the Adi Dravidar and Tribal Welfare Department to the 'Department of Social Justice'.