எங்க ஏரியா உள்ள வராதீங்க.. தாராபுரம் சத்யபாமாவை தெறிக்க விட்ட மக்கள்! தவெகவுக்குத் தான் தலைவலி!

  • திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பி.சத்யபாமா மேற்கொண்ட வாக்கு சேகரிப்பின்போது, பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பிரசாரத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா, இன்று வெறுவேடம்பாளையம், நந்தம்பாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று விசில் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

    Advertisement

    அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் சத்தியபாமாவின் பிரசார வாகனத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பிஏபி வாய்க்கால் மூலம் உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதை சத்யபாமா தலையிட்டு தனது சொந்த அரசியல் லாபத்திற்காக நிறுத்தி வைத்ததாக புகார் கூறினர்.

    சத்தியபாமாவுக்கு எதிராகவும், அவரது அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பியதாக தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சிகளிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    Advertisement

    இந்த நிலையில், பிரசாரத்தின்போது எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களில் சிலர், "கடந்த தேர்தலில் எங்களுக்கு வாக்குறுதிகள் அளித்து வாக்குகளைப் பெற்ற நிலையில், வெற்றி பெற்ற பின்னர் குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்தது ஏமாற்றம் அளிக்கிறது" எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. மேலும், "சத்தியபாமாவை எதிர்ப்போம்; மீண்டும் ஓட்டு கேட்டு வரக்கூடாது" என்பன உள்ளிட்ட கோஷங்களையும் அவர்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தகவல் அறிந்து தாராபுரம் மற்றும் குண்டடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மேலும் பிரச்சினை ஏற்படாமல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    Advertisement

    தாராபுரம் இடைத்தேர்தல் களம் ஏற்கனவே வேட்பாளர்களின் பிரசாரம், கட்சிகளுக்கு இடையிலான அரசியல் விமர்சனங்கள் உள்ளிட்ட காரணங்களால் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது சத்தியபாமாவின் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    TVK candidate Sathyabama faces opposition during Dharapuram campaign as residents protest over water issues and her political switch.