திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் திவ்யபாரதி, மின்வெட்டை கண்டித்து புதுவிதமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அதாவது மின்வெட்டின் போது செல்ஃபி எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ஜெயிலர் 2 படத்திற்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி இதுவரை 340 பேர் செல்ஃபி எடுத்து அவருக்கு அனுப்பியிருக்கிறார்களாம்.
தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிக அளவில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அடுத்த ஆண்டு பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களால் இரவு நேரத்தில் படிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் உழைத்துவிட்டு களைத்து வரும் மக்கள் நிம்மதியாக தூங்குவதற்கு கூட முடியவில்லை என்கிறார்கள். தூக்கமில்லாமல் குழந்தைகளும், முதியவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற மின்வெட்டு தலைநகர் சென்னையிலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் ஏதாவது ஒரு பகுதிகளில் மக்கள் சாலை மறியல், போராட்டம் உள்ளிட்டவைகளை முன்னெடுக்கிறார்கள். ஆனாலும் தீர்வு காணப்படவில்லை. அந்த வகையில் நூல், பின்னலாடை, ஸ்பின்னிங் பனியன், ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் திருப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மின்வெட்டு அதிகரித்துள்ளது. இதை கண்டித்து நூதன முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்து, மின்வெட்டு நேரத்தில் செல்ஃபி எடுத்து புகைப்படத்தை பகிர்ந்தால் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு டிக்கெட் கொடுக்கப்படும் என அதிமுக 9-வது வார்டு கவுன்சிலர் வாட்ஸ் அப் குழு மூலம் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஏராளமானோர் மின்வெட்டு நேரத்தில் செல்ஃபி புகைப்படம் எடுத்து அவரது வாட்ஸ் ஆப் குழுவுக்கு அனுப்பியிருந்தனர். அதிமுக 55வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, செல்ஃபி அனுப்பியவர்களில் 55 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் குடும்பத்தினர் 110 பேர் மற்றும் அதிமுக நிர்வாகிகளில் 15 பேர் என 125 பேரை அங்கேரி பாளையம் பகுதியில் உள்ள திரையரங்கில் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றார். அது போல் தியேட்டரில் பட இடைவேளையின் போது "மின்சாரம் இல்லை என்றால் தொழில் இல்லை, படிப்பு இல்லை", "பவர் புல் ஜெயிலர் 2, பவர் புல் தமிழ்நாடு" என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுச்சீட்டுகளை ஏந்தி பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனராம். சாதாரண சாலை மறியல், போராட்டங்களைத் தாண்டி மக்களை ஈர்க்கும் வகையில் மின்வெட்டின் போது செல்ஃபி அனுப்பினால் ஜெயிலர் 2 பட டிக்கெட் இலவசம் என்ற அறிவிப்பின் மூலம் பொதுமக்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் ஆக்கப்பூர்வமாக அரசுக்கு பதிவு செய்ய முடியும் என்பதால் இது போன்ற ஒரு நூதன போராட்டத்தை திவ்யபாரதி முன்னெடுத்திருப்பார் என தெரிகிறது.