கொடுத்த வாக்கை நிறைவேத்துங்க CM சார்.. மீண்டும் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்! திகுதிகு திருச்சி!

  • திருச்சி: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்தால் விவசாய பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தவெக தலைவர் விஜய் தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் வெற்றி பெற்ற பின் பகுதி அளவு கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்ததாக கூறி திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்திருந்தனர். அந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர் விவசாயிகள். இதை அடுத்து சமயபுரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

    Advertisement

    தற்போது 75 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதூ. இந்நிலையில், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் திருச்சி சமயபுரம் சர்வீஸ் ரோடு அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்திருந்தன.

    ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து தனியார் நிலத்தில் போராட்டம் துவங்கப்பட்டது. முதல் நாள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். அடுத்த நாள் 50க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சேர்ந்த 500 விவசாயிகள் தனியார் நிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாம் நாளில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டமும், நான்காவது நாள் காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.

    Advertisement

    இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ரமேஷ், வினோத் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ஐந்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அமைச்சர்களின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வரும் 22ஆம் தேதி வரை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

    மேலும் அக்டோபர் 22ஆம் தேதிக்குள் அரசு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் அதே சமயபுரம் பகுதியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், போராட்டத்திற்கு காவல்துறை தொல்லை கொடுத்தால் நீதிமன்றத்தை நட போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது வரை பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வரவில்லை.

    Advertisement

    இதனையடுத்து கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் இன்று விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதனால், திருச்சி மாவட்ட எல்லைகளில் சமயபுரம் சுங்க சாவடி, சமயபுரம் நால்ரோடு பகுதி, நம்பர் ஒன் டோல்கேட் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மேலும் சமயபுரம் நால்ரோடு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரை கைது செய்யப்பட்டு சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூர் அருகே உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அருகே போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முற்பட்டபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார். இதனால் போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    English Summary

    Farmers resume protests in Samayapuram, Trichy, demanding a complete crop loan waiver as police deploy personnel and detain protesters.