செஞ்சியில் மாயமான 7 வயது சிறுமி! 10 நாட்களாகியும் போலீசாரால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? பின்னணி?

  • விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு - பவானி தம்பதி. இவர்களது 7 வயது மகள் ஹேமாவதி. கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, அன்றிரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கினார். ஆனால் மறுநாள் அக்டோபர் 12 அதிகாலை எழுந்து பார்த்தபோது, சிறுமியைக் காணவில்லை.

    Advertisement

    சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, இன்றுடன் 10 நாட்கள் கடந்துவிட்டன. 10 தனிப்படைகள் அமைத்து, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள், தீயணைப்புத் துறை என அத்தனை வழிகளிலும் தேடியும் சிறுமியைப் பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

    Advertisement

    இவ்வளவு தீவிரமாகத் தேடியும் காவல்துறையினரால் சிறுமியை ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை? போலீசார் சந்திக்கும் முக்கிய சவால்கள் என்னென்ன?

    1. கண்ணுக்கு எட்டாத சிசிடிவி கேமராக்கள்

    பொதுவாக ஒரு நகரத்தில் யாராவது காணாமல் போனால், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து யார் வந்தார்கள், எங்கு சென்றார்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ஆலம்பூண்டி ஒரு கிராமப்புற பகுதி. சிறுமியின் வீடு இருக்கும் சந்து மற்றும் குளக்கரை பகுதியில் எந்தவொரு சிசிடிவி கேமராவும் இல்லை. இதனால் அதிகாலையில் சிறுமி தானாக நடந்து சென்றாரா அல்லது யாராவது தூக்கிச் சென்றார்களா என்பதை உறுதி செய்ய வீடியோ ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    Advertisement

    2. கரடுமுரடான காடுகளும், தொடர் மழையும்

    செஞ்சியைச் சுற்றிலும் அடர்ந்த காடுகள், மலைக்குன்றுகள், பாறைகள் நிறைந்த குகைகள், கரும்புத் தோட்டங்கள் மற்றும் விவசாயக் கிணறுகள் ஏராளமாக உள்ளன. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த கனமழையால் வயல்வெளிகளும் கரும்புத் தோட்டங்களும் சேறும் சகதியுமாக மாறின. இதனால் மோப்ப நாய்களால் வாசனையைத் தொடர்ந்து பின்தொடர முடியவில்லை. மேலும், புதர்களில் விஷப் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்ததால் போலீசாரின் தரைவழித் தேடுதல் வேட்டையிலும் கடும் தாமதம் ஏற்பட்டது.

    3. ஆயிரக்கணக்கான போன் அழைப்புகள் கொடுத்த தலைவலி

    சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள 4 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்த செல்போன் கோபுரங்களில் பதிவான 600-க்கும் மேற்பட்ட அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த நேரத்தில் குறிப்பிட்ட சந்தேக நபர் யாரும் பேசியதற்கான நேரடி செல்போன் தடயம் உடனடியாகச் சிக்கவில்லை. திருட்டு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளிடம் விசாரித்தும் புதிய தகவல்கள் வரவில்லை.

    Advertisement

    4. நீர்நிலைகளில் மீன்பிடி வலைகள் கொண்டும் ஏமாற்றம்

    சிறுமியை யாராவது கிணற்றிலோ அல்லது ஏரியிலோ தள்ளிவிட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தில், தீயணைப்பு வீரர்கள் கிணறுகளில் இறங்கித் தேடினர். மரக்காணத்தில் இருந்து கடல் மீன்பிடி வலைகளை (சுருக்கு மடி வலை) வரவழைத்து அங்குள்ள நீர்நிலைகள் முழுவதையும் சலித்து எடுத்தனர். இருப்பினும் அங்கும் எந்தத் தடயமும் சிக்கவில்லை. வீட்டின் அருகே இருந்த மாட்டுச் சாணக் குப்பைகளைக் கூட கடப்பாரை கொண்டு தோண்டிப் பார்த்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மாயம்! தாய்தான் காரணம்! சாப்பாட்டுக்கே கஷ்டம்! பக்கத்து வீட்டு பெண் பகீர்

    5. வீட்டுக்குள்ளேயே இருக்கும் மர்மம்?

    இரவில் தாயின் பக்கத்தில் படுத்திருந்த குழந்தை, யாருக்கும் சத்தம் கேட்காமல் எப்படி வெளியே போனது என்ற கேள்வி போலீசாருக்குப் பெரிய புதிராக உள்ளது. வெளியாட்கள் உள்ளே வந்து தூக்கிச் சென்றிருந்தால் நிச்சயம் சத்தம் கேட்டிருக்கும். இதனால் குடும்பத்திற்குள் அல்லது தெரிந்த நபர்களுக்குள் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை திரும்பியுள்ளது. சிறுமியின் தாயாரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Advertisement

    தற்போது வரை டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி நேரடி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இரவும் பகலும் முகாமிட்டுத் தேடி வருகின்றனர். முறையான வீடியோ ஆதாரம் இல்லாமை, புவியியல் சவால்கள் மற்றும் குழப்பமான வாக்குமூலங்களே இந்த வழக்கில் 10 நாட்களாகியும் துப்பு துலங்காமல் இருக்க முக்கியக் காரணங்களாக உள்ளன.

    English Summary

    Gingee 7-Year-Old Girl Missing Case: Why Police Struggle to Find Clues Even After 10 Days