திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் லாட்டரி (Kerala Onam Bumper Lottery) குலுக்கலுக்கு இன்னும் சரியாக 16 நாட்களே உள்ளது. வரும் 26 ஆம் தேதி குலுக்கல் நடைபெற உள்ள நிலையில் டிக்கெட் விற்பனை இதுவரை இல்லாத அளவிற்கு அனல் பறக்க நடைபெற்று வருகிறது. முதல் பரிசு ரூ.30 கோடி என்பதால் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி செல்கிறார்களாம். இதுவரை டிக்கெட் விற்பனையில் மட்டும் கேரள அரசு 230 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.
கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டிக்கெட்டிற்கு லாட்டரி பிரியர்கள் மத்தியில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. டிக்கெட் குலுக்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனல் பறக்க டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பம்பர் லாட்டரிக்கான பரிசு ரூ.30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை ஓணம் பம்பரில் முதல் பரிசு ரூ. 25 கோடி என இருந்த நிலையில் நடப்பு ஆண்டு பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. டிக்கெட் விலை கடந்த ஆண்டை போலவே ரூ.500 ஆக உள்ளது. பரிசுத்தொகை மட்டும் உயர்த்தப்பட்டு இருப்பதால் லாட்டரி பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், கடந்த ஆண்டை விட ஓணம் பம்பருக்கு லாட்டரி பிரியர்கள் மத்தியில் அசுரத்தனமான வரவேற்பு உள்ளதாம். ஒணம் பம்பர் லாட்டரி விற்பனை மூலம் மட்டும் தற்போது வரை ரூ.230 கோடி வருமானம் ஈட்டியுள்ளது கேரள அரசு. மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில் தற்போது வரை 59 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. குலுக்கல் நாள் நெருங்கும் போது டிக்கெட் விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என்பதால், இந்த ஆண்டு மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.30 கோடியும், இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி , 20 டிக்கெட்டுகளுக்கும் மூன்றாவது பரிசாக ரூ.25 லட்சம் 20 டிக்கெட்டுகளுக்கும், 4-வது பரிசாக ரூ.5 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. இதுபோக சிறிய அளவிலான தொகையிலும் ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. பாலக்காடு மாவட்டத்தில்தான் வழக்கமாக டிக்கெட் விற்பனை அதிக அளவில் இருக்கும். நடப்பு ஆண்டும் அதே போல பாலக்காட்டில்தான் டிக்கெட் விற்பனை டாப்பில் உள்ளதாம். கேரள லாட்டரிகளில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது பாலக்காட்டில்தான் அதிக அளவில் பரிசுகளும் விழுவதாக லாட்டரி பிரியர்கள் நம்புவதால், இங்கே இயல்பாகவே டிக்கெட் விற்பனை அதிகமாக இருப்பதாக லாட்டரி வியாபாரிகள் கூறுகிறார்கள். கேரளாவிற்கு வந்து செல்லும் வெளி மாநிலத்தவர்களும் டிக்கெட்டை ஆர்வமாக வாங்கி செல்கிறார்களாம். கேரள லாட்டரி டிக்கெட்டுகளை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே தமிழ்நாட்டிற்குள் விற்பனை செய்தால் சட்டவிரோத செயல். போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.ஓணம் பம்பர் லாட்டரி
மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்
பாலக்காடில் தான் டாப் சேல்ஸ்