பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 09, 2001
9.
ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே.
காயிதங்களையெல்லாம் எடுத்து விசிறி எறியாதே.
அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே.
பார்த்தாயா? இதோ, தள்ளிவிட்டாய்.
புத்தகங்களின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய்.
மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய்.
வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை பாப்ப்பதிலே
நீ மஹா சமர்த்தன்.
நொய்ந்தவீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை,
நொயந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர்,
நொய்ந்த உள்ளம்- இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து
நொறுக்கிவிடுவான்.
சொன்னாலும் கேட்கமாட்டான்.
ஆதலால், மானிடரே வாருங்கள்.
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்.
கதவுகளை வலிமையுறக் கட்டுவோம்.
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்,
உயிரை வலிமையுற நிறுத்துவோம்.
உள்ளத்தை உறுதி செய்வோம்.
இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகி விடுவான்.
காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்.
வலிய தீயை வளர்ப்பான்.,
அவன் தோழமை நன்று.
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
