இன்றைய நிலையில் ""தமிழுக்கு நேர்ந்துள்ள இடர்களும் இழிவுநிலைகளும்
தமிழகத்தைவிடத் தாய்மொழியை இழிவுபடுத்தும் நாடு உலகில் ஒரு நாடு கூட இல்லை. இதை நிறுவ முடியும், எதிர்ப்பவர்களுடன் வாதிட முடியும், இதைப் படித்து,மானமுள்ள எவரேனும் வழக்காட முன்வருக என அறைகூவி அழைக்கின்றோம்.
இழிவு நிலை - 1
தமிழகத்தில் ஏற்பிசைவு பெறாது, ஒரு நூறாயிரம் பள்ளிகளுக்கு மேல் உள. ஏற்பிசைவு கட்டுப்படுத்தப்படாததால் கணக்கிட முடியவில்லை. மாட்டுத்தொழுவம், கூரை வேய்ந்த குடிசை, சிறிய வீட்டு மேல்தளம், வெட்ட வெளி மரத்தடி எல்லாம் மழலையர் பள்ளிகள். பிறகு ஐயாயிரத்திற்கு மேற்பட்டமெட்ரிக் பள்ளிகள், இவற்றில் ஏற்பிசைவின்றி நடப்பனவுண்டு.இந்த ஆண்டுப் பாடத்திட்டப்படி, மூன்று வயது முடிந்து, பள்ளியில் சேர்க்கும் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பாடமே இல்லை. இது பற்றி கல்வியாளர் எஸ். எஸ்.இராசகோபாலன் எழுதிய கடிதம் இது.
தமிழ்ப்படிப்பு எங்கே?
தமிழ்நாட்டில் தமிழ்ப்படிப்புச் செல்லும் திசை ஒவ்வொரு தமிழனையும் வெட்கித் தலைகுனியச் செய்யும். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மெட்ரிக் பள்ளிகள்பாடத்திட்டத்தில், கிண்டர் கார்டன் முதல் ஆண்டில் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்படுகின்ற வேளையில், தமிழ் இடம் பெறாதது அதிர்ச்சியைத் தருகின்றது.தாய்மொழி தன்மொழியாகக் கற்பிக்கப்படாதது வேடிக்கை. இரண்டாம் ஆண்டில், தன்மொழியாக ஆங்கிலமும் பதினோராவது பாடமாகத் தமிழும்சேர்க்கப்பட்டுள்ளது உலக மகா அதிசயங்களில் ஒன்றாகும்.
ஆங்கிலம் நமக்குத் கட்டாயத் தேவை என்றாலும் இவ்வாறு, தாய் வயிற்றிலிருக்கும் போதே, கருவில் உருவாகும் குழந்தைக்கு, ஆங்கிலப்பால் ஊட்டும்அரசு, உலகில் எங்கேனும் உண்டா? இதைக் கேள்விப்பட்டால் ஆங்கிலேயனே காறி உமிழ்வானே?
இழிவு நிலை - 2
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மூன்றாம் வகுப்பிலேயே ஆங்கிலப் பாடம் தொடங்கியது.ஆங்கிலேயர் காலத்தில் கூட ஆறாம் வகுப்பிலிருந்து தான் ஆங்கிலப்பாடம் தொடங்கியுள்ளது. கர்நாடகத்தில் பேராசிரியர் சந்திர சேகரப் பட்டில் தலைமையில்நியமிக்கப்பட்ட ஒரு வல்லுநர் குழு, மழலையர் முதல் ஏழாம் வகுப்பு முடியத் தாய்மொழியே பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் அமையவேண்டுமென வற்புறுத்திப் பரிந்துரைத்தது. அது பனிரண்டு பேர் கொண்ட வல்லுநர் குழு. மேலும் அது மூன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகக் கற்பிக்கப்படலாம் என்றும் கூறியது. (டெக்கான் ஹெரால்டு 6-5-99) அப்போது நான்காம் வகுப்புவரைதான் அங்கு தாய்மொழிவழிக்கல்வி இருந்தது. அரசாணையில், "கர்நாடகத்திற்குள் எந்தப் பள்ளியிலும், நான்காம் வகுப்பு வரை, எந்த நிலையிலும் ஆங்கிலம் நுழைக்கப்படக் கூடாது என்றவரிஇருந்தது.
ஏழாம் வகுப்பு வரை தாய்மொழியே பயிற்றுமொழி என்பது பற்றிக் கேட்டபோது, ஆங்கிலப் பேராசிரியர் ஞானபீடப்பரிசு பெற்றவர், யூ. ஆர்.அனந்தமூர்த்தி, அதுதான் முறையான முடிவு, அன்னிய மொழி அதற்கு முன் ஏன்? - என விடை கூறினார்.
இன்று கர்நாடகத்தில் பட்டீலின் பரிந்துரை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. உதாரணத்திற்காக ஒரே ஒரு செய்தி, அது "தினமலரில் வெளிவந்தது(17-6-2002), தலைப்பு "ஐந்தாம் வகுப்பு வரை கன்னட மொழியில் பாட போதனை - "கர்நாடக அரசு கிடுக்கிப்பிடி. நான்காம் வகுப்பு வரை எனஇருந்த, கன்னடப் பயிற்றுமொழி ஆணையை இரத்து செய்துவிட்டு, இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது மத்திய அரசுப் பள்ளிகளையும் கட்டுப்படுத்தியது.ஐந்தாம் வகுப்பில் ஆங்கில வழிப் பயிற்றத் தொடங்கிவிட்ட, சூன் மாதச் சூழலிலும் இது பிறப்பிக்கப்பட்டதால், அனைத்து ஆங்கில வணிகப் பள்ளிகளும்திணறிப் போயின. எனினும் அங்கு வாலாட்ட முடியவில்லை.
இழிவு நிலை - 3
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு முடிய மாநிலத் தாய்மொழியாம் தமிழே கட்டாயப் பாடமாதல் வேண்டும். அனைத்துப் பள்ளிகளும் இதைப் பின்பற்றவேண்டும். தமிழே பாடமொழியும் பயிற்றுமொழியுமாக ஒரு வரையறுக்கப்பட்ட சட்டமியற்ற வேண்டும் என நீதிபதி மோகன் குழு 1999-சூன் மாதம்பரிந்துரை அளித்தது.
ஆனால் அன்றைய தமிழக அரசு "தெளிவான மொழிக்கொள்கை இன்றித் தவித்தது. இன்றைய அரசுக்கும் அதே கதிதான். அதனால் இவ்விருதிராவிட அரசுகளும் ஒன்றையொன்று, நாள்தோறும் மறுத்துத் தாக்கிப் பேசிக் கொண்டாலும், மொழிக் கொள்கையில், எதிர்த்துப் பேசவோ,அறிக்கைவிடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ முயல்வது இல்லை. ஏனெனில் "தமிழ் மொழியைக் கல்வித்துறையில் இழிவுபடுத்துவதில் மேலோங்கிவிளங்குவது இந்தத் திராவிட அரசா? அந்தத் திராவிட அரசா? என்று பட்டிமன்றம் நடத்த வேண்டியிருக்கும். ஏனைய தமிழக அரசியல் கட்சிகளுக்கும்இதுபொருந்தும். எனவே "ஏனைய எதிர்க்கட்சிகளா? என ஓரணியிலும் வழக்காடலாம்.
13-1-1999இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இது: ""நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் ஆகியபாடங்களில், ஏதாவது இரண்டில் தமிழில் சொல்லித்தர வேண்டும் என்பது அது. மொழிக் கொள்கையின் அழகு "ஏதாவது என்பதில் தொக்கிநிற்கிறது.
பிறகும் மோகன் குழு அறிக்கைப்படி, சட்டமாக்காமல் தொடக்கக் கல்வி தமிழில் இருக்க வேண்டுமென ஓர் ஆணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டது.இதைக் கிண்டல் செய்து, உயர் நீதிமன்றம் ஆங்கில வழிக்கு வெற்றிவாகை சூடியது. பிறகு உச்சநீதிமன்றம் போனதும் தமிழக அரசுகள் இன்றுவரை காரணகாரியத்துடன் வழக்காடவில்லை. தனிமனிதருக்கு எனில், காலை, மாலை, இரவு - நீதிமன்றத்திலும் பிறகு நீதிபதி வீட்டிலும் கூட வழக்குகள்தொடரப்பட்டுச் சாதகமான தீர்ப்பைப் பெற வாதாடும் "இதுகள், நமக்குப் பேச வாய் தந்த தமிழுக்கு, தம் வாய்திறந்து வழக்காடாமல் உடைப்பில்போட்டுவிட்டன. இதில் மட்டும் திராவிட அரசுகளிடையே வேற்றுமை இல்லை.
தமது வரலாற்றை, தன் குசராத்தியில் முதலில் எழுதிய காந்தியடிகளின் கருத்து யாது? தமது கவிதைகளை வங்காளத்திலேயே முதலில் எழுதிப், பிறகுஆங்கிலத்தில் ஆக்கிய தாகூரின் கருத்து யாது? "வங்கம் போல வளர்ப்பீர் தாய்மொழி எனக் கா. அப்பாத்துரையார் முன்பு ஒரு முழக்க வாசகம் தந்ததுஏன்?
வங்காளத் துணைவேந்தர் பவித்திர சர்க்கார், அம்மாநில அரசுக்குத் தந்த அறிக்கையில் (1998)B.G. Kher Commission (1955) Prof. G.C. Banerjee - U.G.C. Review Committee for English in Indian Universities,Kothari Commission (1964-66), NCERT (1985) நடுவணரசின் அரசியலமைப்புச் சட்டப்படியான குறிப்பு, என மிகப் பலவற்றைமேற்கோள் காட்டித், தொடக்கக் கல்வி முழுவதும் அவரவர் தாய்மொழியாகவே இருக்க வேண்டுமென அவர்கள் கூறியவற்றைக் கொண்டுவலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் ஆங்கிலம் கற்பித்தலில் பயிற்சிகொடுத்தவரும் ஆங்கில வல்லுநர் எனச் சர்வதேச அளவில்புகழ்பெற்றவருமான பேரா. பிரபு இந்திய ஆங்கில ஆசிரியர் மாநாட்டில் பத்மஸ்ரீ எஸ். நடராசன் நினைவுச் சொற்பொழிவாற்றுகையில்,""ஆங்கிலத்திற்கு முதலிடம் கொடுப்பது மொழி மற்றும் கலாசாரச் சிதைவை உருவாக்கும். ஒரு மொழிக்கே உரிய நாட்டுக் கலைகள்அழியும். தாய் மொழியே தன் மொழி. அதில் நல்ல பாண்டித்தியம் பெறும் வரையில் அன்னிய மொழியினை, முக்கியமாகஆங்கிலத்தை அறிமுகப்படுத்தக் கூடாது. உலகளவில் 218 மொழிகள் மறைந்ததிற்கு ஆங்கில மோகமே காரணம். மேலும் பல மொழிகள்அழியும் நிலையிலுள்ளன என்று பேசியதை, எஸ்.எஸ். இராசகோபாலன் எடுத்துக்காட்டியுள்ளார். (தினமணி 16.6.2003)
இவற்றுடன் தாய்மொழிக்கு ஆதரவான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள் பலவுள. கர்நாடக அரசு, தொடர்ந்து வழக்காடி, நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்று, இன்று ஆங்கிலவழிப் பள்ளி முதல் நடுவணரசுப் பள்ளி வரை, அனைத்துப் பள்ளிகளையும் ஆட்டிப் படைக்கிறது.
அண்மையில் மகாராட்டிரத்திலுள்ள குசராத்திப் பள்ளியினராம் சிறுபான்மையினர், தம் பள்ளிகளில் மராத்தியைக் கட்டாயமாக்கக் கூடாதுஎன வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கு உச்சநீதி மன்றம் வரை சென்றது. அங்குச், "சிறுபான்மையினர் தம் மொழியைப் படிக்க வசதி செய்ததரவேண்டும். ஆனால் அதே சமையம் தாம் இருக்கும் மாநில மொழியான மராத்தியையும் படித்தேயாக வேண்டும் என நல்ல தீர்ப்புவழங்கியுள்ளது. கேரளத்திலிருந்து ஒரு வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. அது அருச்சனை வழிபாடு பற்றியது. ""தகுதியுடையஎவரும் அருச்சகராகி, எம்மொழியிலும் வழிபடலாம் என்பது தீர்ப்பு. இவற்றை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு, வழக்காடி வென்று,ஐந்தாம் வகுப்புவரை தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக்க எவ்வளவு நேரமாகும்? தமிழைவழிபாட்டு மொழியாக்க எவ்வளவு காலமாகும்? சட்டப்படி வங்காளத்திலுள்ள உயர்நீதிமன்றத்தில், வங்காளத்திலேயே வழக்காடலாம்என்றிருக்கும் போது, தமிழகத்தில் அதைக்காட்டி நடைமுறைப்படுத்தத் தடை யார்?
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தமிழ்வழிப் பொறியாளர், மருத்துவப் பட்ட வகுப்புகளைத் தொடங்க, 400 பக்க அளவில் பேரா. வ. அய்.சுப்பிரமணியம் தந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டது ஏன்? 1997இல் தமிழ்வழிப் பொறியியல் கற்பிக்க 630 விண்ணப்பம் வந்தனவே,16 பேராசிரியர் முன்வந்தனரே.இந்தியா முழுவதும் தேசிய மொழிகள் பெற்றதை, முறைப்படி அணுகாமல் தவறவிட்டதேன்?.
இழிவு நிலை - 4
1968 சனவரி 24இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் அதிகாரிகளின் தந்திரத்தால், தமிழ் என்று போட வேண்டிய இடத்தில் "வட்டாரமொழி எனப் போடப்பட்டுவிட்டது. அடுத்த பிரிவில் ஆங்கிலம் எனத் தெளிவாகப் போடப்பட்டுள்ளது.ஆங்கிலேயன் பயன்படுத்திய இழிவான சொற்களில் ஒன்று, தாய்மொழியை "வட்டார மொழி என்றது. சுதந்திரம் பெற்ற பிறகும், இந்திவல்லாண்மையைப் புகுத்த எண்ணி, மற்ற மொழிகளை அடிமையுணர்வுடையனவாக்க முயன்ற காங்கிரசும் அதே சொல்லைத் திரும்பக்கையாண்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எட்டாம் அட்டவணையில், 14 தேசிய மொழிகள் எனக் குறிப்பிட்டிருக்கவும், நடைமுறையில் "வட்டாரமொழிகள் என வழங்கிக் கேவலப்படுத்தினர். அவ் வகையில் பிரெஞ்சு, சமற்கிருதம், இந்தி, உருது என அனைத்துமே அப் பெயரில்அடங்கிப் போனதால், மேற்கூறிய அரசாணை தவறாகப் பயன்படுத்தப்பட்டு, தன்மொழிப் பிரிவில் தமிழ் அறவே விடப்பட்டு, இன்றுதமிழகப் பள்ளிகளில் தன்மொழியாகப் தமிழ் தவிர்த்தவை கற்பிக்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே தாய்மொழி - தமிழ் கட்டாயமில்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு ஒன்றே. இங்கே மழலையர் முதல் பட்டப்படிப்புமுடியத் தமிழை விட்டுவிட்டுப் பிற மொழிகளை மட்டுமே படித்து வெறியேற வாய்ப்புளது. இது கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாகஇருந்தும், இதை இரத்து செய்யாதது ஏன்?
இழிவு நிலை - 5
இவ்வாறு தமிழே படிக்காமல் வெளியேறுவதைத் தடுக்கப் போவதாக, முதலைக் கண்ணீர் வடித்த இன்யை திராவிட அரசு, "அறிவியல்தமிழ் என ஒன்றைக் கொண்டு வருவதாகக் கூறியது. ஆனால் அதற்கான பாடவேளை இல்லை, அது கட்டாயப் பாடம், ஆனால் அதில்தேர்வு கிடையாது, மேல் வகுப்புக்குப் போக, அதைப் படித்துத் தேர்ச்சிபெற வேண்டியதில்லை.(It is a Compulsary subject... But there will not be any examination in it and also it will not be considered for anypromotion) பல பள்ளிகளில் இவ் "அறிவியல் பாட நூல்கள் கிடங்கில் போடப்பட்டுள்ளன. பலருக்கு - ஆசிரியர்களுக்கே, இவ்வாறு ஒருபாடம் வந்திருப்பது தெரியவில்லை.
தமிழை இழிவுபடுத்தி, அழிப்பதையே உள் நோக்கமாகக் கொண்ட இன்றைய திராவிட அரசு, ஆங்கில அறிவை மேம்படுத்த, 300அரசுப்பள்ளிகளில் ரூ 3 கோடியில், ஆங்கிலப் பயிலகங்களை ஏற்படுத்தப் போகிறது. (தினமணி 22.6.04)
இழிவு நிலை - 6
பிள்ளைகள் தமிழில் பேசினால் தண்டனை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும். எத்தனை இழிவுகள்? என்ன என்ன இழிவுகள்? ஆங்கிலம் நமக்கு வேண்டும். ஆனால் அதற்கு இவ்வாறா?ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக மட்டும் படித்தவர்கள், இன்று உலகை வலம் வர முடிகிறதே?கொலை செய்வதும் குற்றம், கொலைக்குத் துணை போவதும் குற்றம்தானே?
"தனிப்படிப்பு முறையை வைத்துக்கொண்டு, நூறாயிரம் பள்ளிகள், ஏற்பிசைவு இன்றியே, ஆட்டம் போடுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும்கருநாடக அரசின் ஆணையைப் படியுங்கள்.
இழிவு நிலை - 7
அரசு பள்ளிகளிலும் அரசுசார் பள்ளிகளிலும் முழுவதும் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக மட்டுமே நீண்ட காலம் இருந்தது. அதில் முதல்பிரிவு ஆங்கிலவழி என மாற்றிச் சுமார் நாற்பதாயிரம் பள்ளிகளில் ஆங்கில வழியைப் புகுத்தினர். இதனால் அந்த "ஆ பிரிவில், நூறு,இருநூறு மாணவர்கள் - அதாவது ஒரே பிரிவில் நூற்றுக்கு மேற்பட்டோரைச் சேர்த்து, வகுப்புக்கள் நடைபெறுகின்றன. அங்கே உயர்குடி,தாழ்ந்த குடி என இரண்டு வர்க்க பேதம் புகுந்து, தமிழ்வழிப் படிப்பவர்கள் இழிவாக மதிக்கப்படுகின்றனர். சிறந்த ஆசிரியர்களை ஆங்கிலவழிக்கு அனுப்புவதாக, இந்தத் தமிழ்வழிக் கீழ்ச்சாதி மாணவர்கள் குறை கூறுகின்றனர். தமிழை இழிவுபடுத்துவதாகாதா இது?
பள்ளியிறுதி வகுப்பு வரை ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக மட்டும் கற்றவர்கள், சிறந்த ஆங்கிலப் புலமை பெறவில்லையா? ஒன்றுமட்டும் உறுதி, ஆங்கிலவழி எல்லாப் பாடம் படிப்பதால், ஆங்கில வல்லுநராவதைவிட, எல்லாப் பாடத்தையும் தாய்மொழியில் படித்து,ஆங்கிலத்தை ஒரு ""தொடர்பு மொழியாகப் படித்தாலே, அம் மொழியில் வல்லுநனாக முடியும்.
இழிவு நிலை - 8
தமிழ்நாட்டு ஊடகங்கள் தமிழைக் கலப்படமாக்கிச் சிதைத்து வருவது கண்டு, உலகத் தமிழர்கள் வருந்துகிறார்கள். நாளிதழ்,தொலைக்காட்சி, திரைப்படம் இவை தமிழைச் சிதைப்பதறிந்து தடுக்க வேண்டும். அரசு நினைத்தால் சட்டமின்றியே கூடத் தடுக்க முடியும்.சட்டம் வகுத்தும் நிறைவேற்றி, நடைமுறைப்படுத்தாத - படுத்த முடியாத அரசுகள் இவை. முதலில் விளம்பரம் தருவதை நிறுத்துவதாகஅச்சுறுத்தலாம். பிற்பல இடுக்கண்களை உண்டாக்கி, அவை தமிழை முறைப்படி பயன்படுத்தச் செய்யலாம், வல்லுநர் குழு அமைத்துவழிகாட்டிக் கையேடுகள் வெளியிட்டு, அவற்றைப் பின்பற்ற வற்புறுத்தலாம்.
இவை பற்றிய எண்ணமேயின்றி, இழிவுபடுத்துபவர்களை ஊக்கப்படுத்துவது தவறாகவே முடியும்.செய்ய வேண்டுவன :
- மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் ஒன்றே பாடமொழி - பயிற்றுமொழி- சிறுபான்மையோர்க்கு மட்டும் தமிழுடன் அவர்கள் தாய்மொழி- ஆறாம் வகுப்பு முதல் தமிழில் விரும்புவோர் தமிழில் - ஆங்கிலம் விரும்புவோர் ஆங்கிலத்தில்- எந்த ஒரு தேர்வும் மாநிலத் தாய் மொழியாம் தமிழிலும், ஆங்கிலத்திலும்- தொழிற்படிப்பு எனப்படும் மருத்துவம், பொறியியல் உட்பட, பல்கலைக் கழக ஆய்வுப் பட்டம் வரை இருமொழிக் கொள்கை -விரும்புவோர் இவ்விரண்டில் ஒன்றில் படிக்க, தேர்வெழுத வாய்ப்பு.இதுவன்றோ முறை
அனைத்திந்தியத் தொழிற்கல்வி ஆணையங்கள், மொழி பற்றிய விதிகளில் தலையிடா, அவை இவற்றை மறுக்க இயலாது.முறைப்படி அணுகினால் போதும். எம் மொழியிலும் படிக்கலாம். இந் நடைமுறை இந்தியா முழுவதும் உளது.ஆங்கிலத்தை மறுக்கவில்லை, தடுக்கவில்லை, தமிழில் விரும்புவோர்க்குத் தமிழில் உயர்கல்வி படிக்க வாய்ப்புத் தரவேண்டும்.
தமிழுக்கு இன்றுள்ள இழிவுகள் அனைத்தும் துடைக்கப்பட வேண்டும், அறவே களையப்பட வேண்டும். இன்றேல், இவற்றுக்குஎதிரானவர்களை ஆட்சிபீடத்தைவிட்டு அகற்ற வேண்டும், அதற்கு நாம் முதலில் தமிழ் மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.
(தென்செய்தி, டிச. 16-31)
- முனைவர். தமிழண்ணல்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications