For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒலிக்கவிதைகளின் நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை

By Staff
Google Oneindia Tamil News


அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை

கவிதையின் தனித்துவப் பண்பு சுருங்கச் சொல்லிச் சுவையை அளித்தல். கவிதைகள் சில நமக்குக் கதை சொல்லுகின்றன! சில நாடகமாய் கண்முன் நடக்கின்றன! சில புயல்போல் நெஞ்சைத் தாக்குகின்றன! சில தென்றல் போல் மேனியைத் தழுவுகின்றன! சில கவிதைகள் நெஞ்சில் முள்ளாய்க் குத்துகின்றன! வாழ்க்கையின் உண்மைக் காட்சிகளை அன்ன நடையிலோ, அல்லது புயல் வேகத்திலோ சொல்லுகின்றன. மகாகவியின் கவிதையில் உலக மெய்ப்பாடுகள், தத்துவங்கள் ஒளிவீசும். சில கவிதைகளில் ஓரிரு வரிகளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும்! முடிவு புதிராக மாறிப் புரியாமல் போகும். சொற்கள் எளிதாக இருந்தாலும், தெளிவாகத் தெரிந்தாலும் வரிகளின் முழுத் தோற்றம் ஒட்டு மொத்தமாய் என்ன உரைக்கின்றது என்று புரியாமலும் போகும்!

கவிதைகளின் வரிச் சொற்கள் செங்கல் சுவர்போல் அணிவகுத்துக் கட்டப் படாமல், தெளிந்த சிற்றோடை போல் சிரித்தோட வேண்டும். கலைத்துவ மணம் பரப்ப வேண்டும். வரிகளின் மொழிகள் நளினமாக நடனமாடி நாதசுரக் கீதம் போலும், வீணையின் நாதம் போலும் ஒலித்து நெஞ்சில் அரங்கேற வேண்டும்.

கவிதையைப் பற்றிக் கவிஞர் வைகைச் செல்வி கூறுவது:

பாலும், தெளி தேனும், பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துருக்கி,
வார்த்தை விதை ஒன்று,
மூளைக்குள் தெறிக்க,
முளை விட்டு உணர்வுக்குள்
கணுக் கணுவாய்ப் பயிர் வளர,
செங்குருதிப் புனல் பாய,
மண்ணுக்குள் அடிக்கரும்பாய்,
மனசெல்லாம் சர்க்கரையாய்,
நெஞ்சுக் குழிக்குள்ளே,
இறங்கி வழிந்தோடி
உறங்கும் உயிர்ப் பந்தை,
புரட்டுவது கவிதை.

சர்க்கஸ் விளையாட்டு போல் வார்த்தைகளை பல்டி அடிக்க வைத்து, அந்தரத்தில் தொங்கும் வளையங்களில் தாவி ஊஞ்சல் ஆடுவதா கவிதை ? வார்த்தைகளின் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வதா கவிதை ? இரண்டு மணிநேரம் சர்க்கஸ் ஆட்டத்தைக் கண்டு நாம் பிரமித்தாலும், வெள்ளித் திரையில் உள்ளத்தைத் தொடும் ஓர் உன்னதக் கலைக் காட்சிபோல், சர்க்கஸ் ஆட்டம் பல்லாண்டு காலம் மனதில் நீடிப்ப தில்லை! சுருங்கச் சொல்லிக் கதை புனையும் கவிதை ஒரு குட்டித் திரைப்படம். கருத்தாட்சி [Theme], சொல்லாட்சி [Word Power], நடையாட்சி [Style], அணியாட்சி [Simile, Metaphor, Allegory, Alliteration, Antithesis, Irony, Personification (Figure of Speech)] மூலம் உள்ளத்தைக் கவர்ந்த கவிதைகள், நமது நினைவில் அழியாதவாறு ஓட்டிக் கொண்டு விடுகின்றன! அத்தகைய உன்னதக் கலைப் படைப்புகள் ஆக்கும் நியதிகளைக் கையாண்டு, ஆழமாய்ச் சிந்தித்து எழுதப் பட்டவையே. கால வெள்ளம் அடித்துச் செல்லாது, கரையான் தின்று செறிக்காது, நிலைத்து நிற்கும் கலைப் படைப்புகள் யாவும் இராப் பகலாய்ச் சிந்தித்து ஆக்கப் பட்டவையே.

"ஒலிக்கவிதைகள்" எனத் தலைப்பு இருந்தாலும் அவை யாவும் முதலில் எழுத்துக் கவிதைகளாகத் தோன்றியவைதான். கவிதைகளை வாசிக்கக் கேட்டாலும், அவற்றை ஒப்பிட்டுத் திறனாய்வு செய்யும் போது எழுத்துரு வரிகளைக் கண்ணாலும், கருத்தாலும் திரும்பத் திரும்பப் பலமுறைப் படித்துதான் முடிவு செய்தேன்.

ஆரஞ்சுப் பழம், ஆப்பிள் பழம், மாம்பழம், பலாப் பழம், வாழைப் பழம் ஆகியவற்றின் சுவைகளை ஆராய்ந்து எந்தப் பழம் சுவை மிக்கது என்று சொல்லுங்கள் என்று மதிப்புக்குரிய சேதுக்கரசி, புகாரி, பிரியன் மூவரும் என்னை வேண்டிக் கொண்டார்கள். நான் பலாப் பழமே மிக்கச் சுவையானது என்று சொன்னால், போட்டியில் பங்கெடுத்த கவிஞர்கள் தங்கள் பேனா முனைகளால் என்னைக் குத்த ஓடி வாராதீர்கள். ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் மூன்றையும் பரிசாகப் பெற்றிடும் தனித்தனி மாந்தரின் கால வேறுபாடுகளைப் பார்த்தால் மிகச் சில மில்லி விநாடிகளே தெரியும். ஆகவே முதற்பரிசு, இரண்டாம் பரிசு, ஆறுதல் பரிசுகள் ஆகியவற்றில் உள்ள ஒப்புமை வேறுபாடுகள் அதிகமில்லை, மிகச் சிறிய கவித்துவக் கருத்தமைப்புகளே.


பரிசு பெற்ற ஒலிக்கவிதைகள்

முதற்பரிசுக் கவிதை

எனது ஆய்வுப் பார்வையில் இருட்டிலே ஒரு மெழுகுவத்தி என்னும் ஒலிப்பா முதற் பரிசுக்குரிய கவிதையாக தீர்மானம் செய்யப்பட்டது. அதே முடிவை எனது இணைத் தேர்வு நடுவர் கவிஞர் இக்பால் அவர்களும் தெரிவித்தார். முதற்பரிசு மட்டுமல்ல, இரண்டாம் பரிசு, ஆறுதல் பரிசு முடிவுகள் அனைத்திலும் இருவரது ஏகோபித்த உடன்பாடுகள் உள்ளன.

உலகமே இருள் சூழ்ந்தது! பரிதி அதன் கண்மூடித் திறக்கும் மெழுகுவத்தி! விண்வெளியே இருள் சூழ்ந்தது! ஆங்கே மின்மினி போல் விண்மீன்கள் கண்சிமிட்டும் மெழுகுவத்திகள். விரிந்து செல்லும் பிரபஞ்சத்தில் இருள்வெளியே பேரளவானது. ஒளிமீன்கள் விடும் வெளிச்சங்கள் மின்மினிப் பூச்சிகள் வீசும் நுண்ணொளி போன்றவைதான்.

இருட்டைப் போக்கும்
எத்தனையோ மெழுகுவத்திகள்
வெளிச்சத்தைப்
பார்த்ததே யில்லை

ஒரு மெழுகுவத்தி
மகாத்மாவாக
மாறியபோது தான்
உலகம் அகிம்சையைப்
புரிந்து கொண்டது

ஒரு மெழுகுவத்தி
ரோஜாவாக மாறியபோது தான்
விடுதலைப் பத்திரம்
இங்கே எழுதப்பட்டது

வெளிச்சத்தை நாங்கள்
விலைகொடுத்து
வாங்கும் போதெல்லாம்
கதவுக்கு வெளியே
இருள் தானே காத்திருக்கிறது

ஆனால்
மனிதநேயம்
மரணப் படுக்கையில் இருக்கும்போது
வெளிச்சத்தைப் பார்க்கவே
எங்களுக்கு
விளக்கு வேண்டும்

முதற்பரிசு பெற்ற கவிதையின் இந்த முத்துச் சுடர் மொழிகள் என் மனதை முற்றுகை செய்கின்றன. உலகத் தத்துவம், வரலாறு, மெய்ப்பாடுகள் சில வரிகளில் மின்னுகின்றன


இரண்டாம் பரிசுக் கவிதை

உன்னை நினைக்கையிலே

முதற்பரிசுக் கவிதை பிரபஞ்ச இருளையும், மின்மினி மெழுகுவத்தியையும்
விளக்கும் போது, இரண்டாம் பரிசுக் கவிதை காதலர் உலகில் ஒளியேற்றுகிறது.

முட்டிமுட்டிக் குடிக்கும்
கன்றினைப்போல்
உன்னைச் சுற்றிச் சுற்றியே
நினைவு.

உன்னில் நானா
என்னில் நீயா
யாரோடு யார் கலந்தோம்?
ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்
பள்ளிப் பாடக் கணக்கில்
ஒன்றும் ஒன்றும் ஒன்றே யானது
நம் பள்ளியறைக் கணக்கில்.

நீயும் நானுமில்லாத
உலகைக் கண்டேன்
அங்கு காற்றே இல்லை
நீயும் நானுமில்லாத
நிலவைப் பார்த்தேன்
அதில் ஒளியே இல்லை
நீயும் நானுமில்லாத
கவிதை புனைந்தேன்
அதில் ஜீவனே இல்லை.

உள்ளத்தைத் தேனாக்கும் உன்னதக் காதல் வரிகள் இவை.


ஆறுதல் பரிசுகள்:

1. அன்புடன் அபலை
2. பிடிமானம்

அன்புடன் அபலை

அன்புடன் அபலை ஏழ்மையில் வாழ வகையற்ற மாதொருத்தி உடலை விற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு சிறு கதையைக் கூறுகிறது.

யாசிக்கின்றேன்
அன்பை
யோசிக்கிறார்கள்

ஆண்களுக்குத் தேவை
உடல்
பிற
பெண்களுக்குத் தேவை
பணம்
எனக்குத் தேவை
மனம்

அமாவாசை
இருளில்
சிறகு விரிக்கும்
மின்மினியின்
ஒளி போல
நெஞ்சத்தில்
புதைந்து கொண்ட
சின்னச் சின்ன
ஆசைகள்

அஸ்திவாரத்தோடு
நின்றுபோன கட்டிடங்கள்
போல
அனாதரவாய்
மன ஊஞ்சலில்...

குத்து விளக்காய்
குளிர்ந்து நிற்கும்
என் மன அழகு
உண்மை..

திருமண அழகு
தேடும்
பலாச்சுளை போன்ற
என் இனிய பெண்மை
உண்மை..

விலை போகாத
பொற்சிலை நான்..

2. பிடிமானம்

பிடிமானம் என்னும் கவிதையும் காதல் உலகில் சஞ்சரிக்கிறது.

உளியாய் வந்தாய்
உருகும் உள்ளமறிந்து .
சிதிலமாய்க் கிடந்த கல்லெடுத்து
செதுக்கிச் செதுக்கி சிற்பம் செய்தாய்

காற்றாய் வந்தாய்
காதலில் கசிந்துருகி
எங்கோ கிடந்த தக்கையையெடுத்து
புல்லாங்குழலாய் கீதமிசைத்தாய்

மீட்சியின்றித் தவித்தாலும்
வாழ்கிறேன்
வீழக்கூடாதென்ற உன்சொல்லினைப்
பிடிமானமாய்ப் பற்றிக்கொண்டு...

கவிதையில் வரும் கல் சிற்பம், கசிந்துருகும் புல்லாங்குழல், அண்டத்தின் சிகரம் ஆகியவை பாரையே புதுப் பார்வைக்கு அழைத்துச் செல்கின்றன.


அன்புக்கடல் தமிழ்மணிகளே! ஒலிக்கவிதைகள் அனைத்தையும் வாசித்து முடிவில் கூறுங்கள்: மாம்பழம், பலாப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப் பழம் ஆகியவற்றில் எது எல்லாவற்றிலும் சுவையாக இருக்கிறது ? எங்களுக்கு நூறு சதம் தீர்மானமாக ஆய்ந்து தெரிவிக்க முடியவில்லை! அவற்றை எல்லாம் ஆழ்ந்து ஒப்பிட்டு எங்கள் தராசில் நிறுத்து, எங்கள் உள்ளம் முடிவு செய்த ஒலிக்கவிதைகளைப் பரிசுக் கவிதைகளாக உங்கள் முன் வைக்கிறோம்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X