தள்ளாடும் தலித் இலக்கியம்
கிடுகிடுவென முரசு கொட்டி கிளர்ந்தெழுந்து புரட்சி படைத்த தலித் இலக்கியம் தற்போது பெரும் தடுமாற்றத்தில் தொக்கி நிற்கிறது. நலிவடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித் இலக்கியத்திற்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட வேண்டும் என முற்போக்கு எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
90களின் மத்தியில் தமிழ் இலக்கியம் ஒரு புதுப் பிரவாகம் கண்டது. புத்துணர்ச்சியுடன் ஒரு புதுக் குழந்தையை பெற்றெடுத்தது. அதுதான் தலித் இலக்கியம்.
தமிழ் இலக்கிய உலகுக்கே ஒரு புத்துயிர் கிடைத்தது போல தடதடவென ஆர்த்தெழுந்து வந்த தலித் எழுத்தாளர்களால், தமிழ் இலக்கியத்திற்கே ஒரு அழகு கிடைத்தது.
ஆனால் எந்த வேகத்தில் வளர்ந்ததோ, அதே வேகத்தில் தலித் இலக்கியம் தடுமாறவும் தொடங்கியது. இதற்கு என்ன காரணம், ஏன் இந்த தொய்வு என்பது குறித்து ஆராய விருத்தாச்சலத்தில் தலித் எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் ஆகியோர் கூட விவாதித்தனர்.
தலித் இலக்கியத்தின் இன்றைய நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியரும், பிரபல நாடகக் கலைஞருமான டாக்டர் கே.ஏ.குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏவும், எழுத்தாளருமான ரவிக்குமார் உள்ளிட்ட பிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர்.
கோவேறு கழுதைகள், ஆறுமுகம், சேடல் ஆகிய பிரபல தலித் நாவல்களை எழுதிய இமயம் இந்த ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
தலித் எழுத்தாளர்கள், தலித் இலக்கியத்தின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்குப் பதில் நாடகம், சுயசரிதம் போன்ற வேறு துறைகளுக்கு கால் பரப்பிப் பாய்ந்ததே, தலித் எழுத்துக்களின் வளர்ச்சி தேங்கிப் போனதற்கு முக்கியக் காரணம் என்று டாக்டர் குணசேகரன் கருத்து தெரிவித்தார்.
பெண்ணியம் உள்ளிட்ட கொள்கைகளின் வரிசையில் தலித்தியம் என்ற புதுக் கொள்கை தலித் இலக்கியத்தில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பலர் எடுத்துரைத்தனர். இதை உருவாக்கும் மிகப் பெறும் பொறுப்பு தலித் எழுத்தாளர்களிடம் உள்ளதை அவர்கள் மறந்து விடக் கூடாது என்றும் கூறப்பட்டது.
ரவிக்குமார் பேசுகையில், தலித் படைப்புகளின் மொழி பயன்பாடு, அதன் வடிவம், எழுத்துக்களின் ஆக்கம், தொலை தூர பார்வை உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும். இளம் தலித் எழுத்தாளர்கள், பிறமொழி தலித் இலக்கியங்களை நிறைய படிக்க வேண்டும், கூர்ந்து கவனிக்க வேண்டும்.
தலித் இலக்கியங்களில் இன்னும் தலித் அழகியல் முழுமையாக கையாளப்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது.
தலித் இலக்கியம் தொய்வடைந்த நிலையில் உள்ளது என்பதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதையும் கூற முடியாது. காரணம், ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்திலும், இன்று நூல்கள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது என்றார்.
தலித் இலக்கியத்தின் இன்றைய நிலைக்கு கவலை தெரிவித்து விருத்தாச்சலத்தில் விதை ஊன்றிய நிலையில், அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 26ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட தலித் இலக்கியவாதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட, தெறித்த கருத்துக்கள் நிச்சயம் தலித் இலக்கியத்தின் தொய்வடைந்த தோள்களுக்கு முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்த உதவும் என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications