தமிழ்நாடா? திறந்த வீடா?

"1989-91 வரையிலான இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத் தொழில்துறை இந்திய அளவில் 3வது இடத்தைப் பிடித்தது. பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 1991-96 வரையிலான அதிமுக ஆட்சியின்போது தமிழகத் தொழில் துறை 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது.
கடந்த 1991-96 வரையிலான அ.தி.மு.,க. ஆட்சியில் மொத்தம் 1,700 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரே ஒரு புரிந்துணர்வு உடன்பாடு போடப்பட்டது. 1996-2001 திமுக ஆட்சியில் 3,728 கோடி முதலீட்டில் 9 புரிந்துணர்வு உடன்பாடுகள் போடப்பட்டன. 2001-06 வரையிலான அதிமுக ஆட்சியின் போது 2,560 கோடி ரூபாய் முதலீட்டில் 6 புரிந்துணர்வு உடன்பாடுகள் போடப்பட்டன.
ஆனால் கடந்த 2 ஆண்டு திமுக ஆட்சியின் போது 18,483 கோடி ரூபாய் முதலீட்டில் 14 உடன்பாடுகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,50,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டன.
வரும் ஆண்டுகளில் அமெரிக்கா, ஜப்பான், கொரியா, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முதலீடுகளைப் பெறுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 30,000 கோடி ரூபாய் முதலீட்டில் 25 உடன்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத் தொழில் துறை வரலாற்றில் இது ஒரு சரித்திர சாதனை ஆகும்" என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் 6-5-2008 அன்று பேசிய போது தெரிவித்துள்ளார்.
அதாவது தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது முதல்வர் சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள புள்ளிவிபரங்களின்படி 1989ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு சனவரி வரை அதிமுக ஆட்சி காலத்தின் போது 4,280 கோடி முதலீடும் திமு..ஆட்சி காலத்தில் 66,299 கோடி ரூபாய் முதலீடும் தமிழகத்திற்கு பெறப்பட்டுள்ளன எனவும் இது தமிழக தொழில் துறை வரலாற்றில் ஒரு சரித்திர சாதனை எனவும் கூறி அமைச்சர் ஸ்டாலின் பெருமிதப்பட்டுள்ளார்.
கடந்த 18 ஆண்டு காலத்தில் இரு கழக ஆட்சிகளின் போது 70,000 கோடி ரூபாய்க்கு மேல் தொழில் துறையில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்பது நாட்டின் பொருளாதார வளத்தைப் பெருக்கும் பெருமைக்குரிய செயலா அல்லது நாட்டை அன்னியருக்கு அடமானம் வைக்கும் செயலா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மேற்கூறியவாறு 70,000 கோடிக்கு மேல் அன்னிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர அதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன? என்பது வெளிப்படையாகக் கூறப்படவில்லை. இந்த அன்னிய முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு வாரி வழங்கிய சலுகைகள் என்னென்ன என்பதும் மூடி மறைக்கப்பட்டுள்ளது. கைமாறு எதிர்பாராத சலுகைகளாகவும் இவை இருந்திருக்க முடியாது என்பது ஊரறிந்த ரகசியமாகும்.
தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் இலவசமாகவும் அல்லது விவசாயிகளுக்குச் சொந்தமான நிலமாக இருப்பின் அவைகள் குறைந்த விலையிலும் அன்னிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்ல. இத்தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் 5 ஆண்டுகளுக்குச் சலுகையில் வழங்கப்பட்டுள்ளன. வரி விதிப்பிலிருந்தும் 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கொண்டு செல்ல சாலைக் கட்டமைப்பு வசதிகளும் துறைமுக வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள்ன. மக்களின் வரிப் பணத்திலிருந்து இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட பிறகு மேற்கண்ட அன்னிய நிறுவனங்கள் ஈட்டும் ஆதாயத்தில் பெரும் பகுதி தமிழ்நாட்டிலிருந்து வெளியே எடுத்து செல்லப்பட அரசு ஆதரவளிக்கும்.
பன்னாட்டு நிறுவனங்கள் எதற்காக தமிழகத்தில் தொழில் தொடங்க முன் வருகிறார்கள்? தொழிற்சாலைக்குத் தேவையான நிலம் முதலிய கட்டமைப்பு வசதிகள் இங்கு மலிவாகக் கிடைக்கின்றன. குறைந்த கூலிக்குத் தொழிலாளர்களும் கிடைக்கிறார்கள். வேலையில்லாமல் தத்தளிக்கும் மக்களைப் பயன்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது தான் இவர்களின் நோக்கமாகும். அன்னிய பெரு முதலாளிகளின் இந்த நோக்கம் நிறைவேற அதிமுக, திமுக அரசுகள் துணை நின்றன. நிற்கின்றன.
உதாரணமாக சென்னையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏராளமான அன்னிய கார் உற்பத்தித் தொழிற் சாலைகள் தொடங்கப்பட்டுள்ளதை எடுத்துக் கொள்வோம். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கார்களில் ஒரு சிறு பகுதி தான் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த கார் உற்பத்தித் தொழிற்சாலையை ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவில் தொடங்கினால் கட்டமைப்பு வசதிகளுக்கு பல மடங்கு அதிகமாக செலவழிக்க வேண்டி இருந்திருக்கும். அங்குள்ள தொழிலாளர்களுக்குப் பல மடங்கு அதிகமான ஊதியம் கொடுக்க வேண்டியும் நேர்ந்திருக்கும். இவற்றைத் தவிர்ப்பதற்காக அவர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருகிறார்கள். குறைந்த செலவில் தொழிலாளர்கள் கிடைப்பதால் உற்பத்தி செலவு அவர்களுக்கு மிகவும் குறைகிறது.
எனவே தமிழ்நாட்டில் கார்களை உற்பத்தி செய்து உலகெங்கும் விற்பதன் மூலம் அவர்கள் அதிக லாபம் ஈட்டுகிறார்கள். அடிப்படையான இந்த உண்மைகளை மூடி மறைத்து விட்டு அதிமுக ஆட்சி காலத்தில் குறைந்த அளவே அன்னிய முதலீடு பெறப்பட்டுள்ளது எனவும் திமுக ஆட்சிக் காலத்தில் பல மடங்கு அன்னிய முதலீடு பெறப்பட்டுள்ளது போலவும் சித்தரிப்பது மக்களை ஏமாற்றுவதாகும்.
(தொடரும்...)












Click it and Unblock the Notifications