அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகா உற்சவ திருவிழா துவக்கம் : 25-ம் தேதி தேரோட்டம்

செங்கோட்டை அருகே உள்ள அச்சன்கோவிலில் மகா உற்சவ திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் ஐயப்பன் அரசனாக வீற்றிருக்கிறார். இதனால் அரசனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள், கேரள மாநிலம் புனலூரில் இருந்து அச்சன்கோவிலுக்கு கொண்டு வரப்படும். அதன்படி நேற்று மாலை அச்சன்கோவிலுக்கு ஆபரணங்கள் கொண்டு வரப்பட்டது.
10 நாள் மகா உற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயில் முன்புள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை சபரிமலை தந்திரி நடத்தி வைத்தார். பின்னர் ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டது. பின்னர் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களும் ஐயப்பனுக்கு பூஜைகள் நடத்தப்படும். இன்று இரவு கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும் 25-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. அப்போது ஐயப்பன் தேரில் எழுந்தருளி வீதியுலா வருவார். தேரின் முன்பு ஐயப்பனுக்குரிய வாள் எடுத்துச் செல்லப்படும். இந்த வாளானது காந்தமலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. வாளின் எடையானது நேரத்துக்கு நேரம், இடத்திற்கு இடம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசித்தனர்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அச்சன்கோவில் சென்று அங்குள்ள ஐயப்பனை வழிபட்டு செல்வது வழக்கம். அச்சன்கோவில் ஐயப்பனுக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் உள்ளன.
இவை புனலூர் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் நடக்க உற்காச திருவிழாவின் போது ஐயப்பனுக்கு திருஆபரணங்கள் அணிவிப்பது வழக்கம்.












Click it and Unblock the Notifications