மாறுகண் அதிர்ஷ்டமல்ல… அது ஒரு நோய்!
கண்கள்தான் நம் முகத்தின் முகவரி. அந்த கண்களில் ஏற்படும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வைத்திறன் முற்றிலும் பறிபோய்விடும் அபாயம் உள்ளது. மூன்று மாத கருவில் தொடங்கும் கண்ணின் வளர்ச்சியானது இருபது வயதுவரை தொடர்கிறது. இந்த கால கட்டத்தில் கண்களில் ஏற்படும் பாதிப்புகளை கவனித்து சரி செய்ய வேண்டியது நம் கடமை.
ஊட்டச்சத்து உணவுகள்
கர்ப்பகாலத்தில் பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இல்லையெனில் கருவில் இருக்கும் குழந்தைக்கு கண்ணில் பிறைவிழுதல், கண்ணின் அமைப்பு மாறுபடுவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடும். இதனால் குழந்தைப் பருவத்திலேயே பார்வைத்திறன் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மாறுகண் அதிர்ஷ்டமா ?
பிறந்த குழந்தை மாறுகண்ணாக இருந்தால் அதிர்ஷ்டம் என்று எண்ணற்ற பெற்றோர்கள் மூடநம்பிக்கைக் கொண்டுள்ளனர். அது ஒரு குறைபாடு என்று யாரும் புரிந்து கொள்வதில்லை. கண் தசைகளின் வளர்ச்சியின்மையால் கண்கள் இடம் மாறும் இப்பிரச்சினை, காலப்போக்கில் பார்வைத்திறனையே முற்றிலும் பறித்துவிடும்.
குழந்தையின் பார்வை மற்றும் தோற்றத்தை பாதிக்கும் தன்மையுடைய இந்த குறைபாடு உள்ளவர்களை எட்டு அல்லது ஒன்பது வயதுக்குள் உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணமாக்க முடியும். இல்லாவிட்டால் மாறுகண் நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளின் எதிர்காலமே இருளில் மூழ்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இரண்டு தோற்றங்கள்
சாதாரணமாக இரண்டு கண்களும் இணைந்து ஒரு பொருளை பார்க்கும்போது, ஒரே மாதிரியான உருவம் மூளையைச் சென்றடையும். அப்படி இல்லாமல், இரண்டு வேறுபட்ட உருவங்கள் தெரிந்தால் அதனை சோம்பலுற்ற கண் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தையின் மூளை, நல்ல பார்வையுள்ள கண்ணிலிருந்து வரும் உருவத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, பாதிக்கப்பட்ட கண்ணிலிருந்து வரும் உருவத்தை ஒதுக்கக் கற்றுக் கொள்கிறது. இதனால் அந்த கண்களில் நாளடைவில் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
குறைமாதக் குழந்தை, மாறுகண், பிறவியிலேயே ஏற்படும் கண்புரை போன்றவைகளினால் சோம்பலுற்ற கண் ஏற்படுகிறது. கருவிழியில் தழும்பு மற்றும் இரண்டு கண்களிலும் வேறுபட்ட பார்வைத் திறன் இருந்தும், ஆரம்பத்திலேயே உரிய கண்ணாடி அணியாமல் இருத்தாலும் சோம்பலுற்ற கண்நோய் ஏற்படும்.
நோய் கண்டவுடன் செய்ய வேண்டியது
இந்த குறையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். இல்லாவிட்டால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும். தாமதமாக சிகிச்சை பெறும்போது இருக்கும் பார்வையை பாதுகாக்கலாம்.
கட்டிகளால் ஆபத்து
இளம் வயதில் உருவாகும் சிறு கட்டிகளை கவனிக்காமல் விட்டு விட்டால் அது புற்று நோயாக மாறி மற்ற உறுப்புகளுக்கும் பரவும் அபாயம் உண்டு. மேலும் கண் அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாகவே சிகிச்சை மேற்கொள்ளாமல் முறையான சிகிச்சைகளை பின்பற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications