முன்னோர்களின் ஆசி கிடைக்கும் ‘தை அமாவாசை’

இந்து மரபுப்படி அமாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர் தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது நம்பிக்கை. எல்லா தமிழ் மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவைதான். ஆனால் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
புனித நீராடல்
பூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே கன்னியாகுமரி கடற்கரையிலும் தை அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் செய்கின்றனர். இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட அருவிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி, தை, மகாளய, அமாவாசை வழிபாடு
பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு.
ஆடி மாதம் தட்சிணாயண காலம். அது தேவர்கள் ஓய்வெடுக்கும் காலமாகும். அந்த நேரத்தில் தம் சந்த்திகளை காக்க தேவலோகத்தில் இருந்து முன்னோர்கள் வருகின்றனர். அவர்களை வரவேற்க ஆடி அமாவாசையில் தர்பணம் தரப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சத்தில் வரும் மகாளய அமாவாசையில் முன்னோர்களை நினைத்து நாம் தர்பணம் தருகிறோம். அன்னதானம் செய்கின்றோம்.
தை மாதத்தில் உத்தராயண காலத்தில் முன்னோர்கள் தேவலோகம் திரும்புகின்றனர் அவர்களை வழியனுப்பும் விதமாக நீர் நிலைகளில் தர்பணம் செய்கின்றோம்.
இந்த நாளில் நாம் வடை, பாயசம் சமைத்து படைத்தால்தான் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பதில்லை. நீர்நிலைகளில் எள்ளும், தண்ணீரும் தெளித்து முன்னோர்களை நினைத்து வழிபட்டாலே நமக்கு அவர்களின் ஆசி கிடைக்கும்.












Click it and Unblock the Notifications