61 மில்லியன் பேருக்கு சிறுநீரக பாதிப்பு... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லி: கிராமங்களில் வசிப்பவர்களை விட நகரங்களில் வசிப்பவர்களுக்கு சிறுநீராக கோளாறுகள் அதிகம் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நகர்புறங்களில் வசிக்கும் இந்தியர்களில் நூறில் 17 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படுகிறதாம். கடந்த 2012ம் ஆண்டு 61 மில்லியன் பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவர்களில் 6 சதவீதம் பேர் கட்டாய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையிலும், அதிகம் செலவாகும் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை பெற வேண்டிய நிலையிலும் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 நகரங்களில் ஆய்வு
சிறுநீரக ஆய்வு மற்றும் ஆரம்பநிலை மதிப்பீட்டு ஆய்வு, வாரணாசி, கான்பூர், டில்லி, லூதியானா, போபால், நாடியாட், மும்பை, மைசூர், பெங்களூர், கொச்சின் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 12 நகரங்களில் உள்ள 13 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக நோய்கள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.

விசாகப்பட்டினம் நம்பர் 1
இதில் அதிகபட்சமாக விசாகப்பட்டினத்தில் 46.8 சதவீதம் பேர் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். விசாகப்பட்டினத்தை தொடர்ந்து கான்பூரில் 41.7 சதவீதம் பேரும், டில்லியில் 41 சதவீதம் பேரும் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

பெங்களூர், மைசூர் குறைவு
நாட்டிலேயே குறைந்தபட்சமாக மைசூரில் 4.2 சதவீதம் பேரும், பெங்களூருவில் 4 சதவீதம் பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் வசிக்கும் நூறு பேரில் 17 பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுநீரக கோளாறுகள்
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குரோனிக் கிட்னி டிசீஸ் எனப்படும் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக நோய்களைக் கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அதற்கு முன் சிறுநீரகம் தொடர்பான எந்த ஒரு சோதனையையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

64.5 சதவிகிதம் பேர்
தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 64.5 சதவீதம் பேர் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்கள் அதிகப்படியான மனஅழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் 4.7 சதவீதம் பேர் ரத்தசோகை நோயாலும், 31.6 சதவீதம் பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முற்றிய நிலை நோய்
இந்தியாவில் உள்ள இளைஞர்கள் தற்காப்பு சோதனைகள் செய்து கொள்வதில்லை; அதன் விளைவு தாமதமாக நோய்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. முற்றிய நிலையில் உள்ள நோய்களைக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு வரும் போது அவர்களது சிறுநீரகம் பாதிக்கும் மேல் செயல் இழக்க துவங்கிய நிலையில் உள்ளது என்ற தகவல் மருத்துவர்களை அதிரவைத்தது.

61 மில்லியன் பேர் பாதிப்பு
இந்த முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக பாதிப்புக்கள் ஆண்டுதோறும் 12 சதவீதம் வரை அதிகரித்து வருவதாகவும், 2011ல் 50.8 மில்லியன் பேரும், 2012ல் 61 மில்லியன் பேரும் முற்றிய சிறுநீரக பாதிப்பு கொண்டவர்களாக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1,75,000 சிறுநீரகங்கள் தேவை
ஆண்டுதோறும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு இந்தியாவில் 1,75,000 சிறுநீரகங்கள் தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போது 4000 மாற்று சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பரம்பரை நோய் தாக்குதல்
எனவே குடும்பத்தில் பெரியவர்கள் யாருக்காவது சிறுநீரக பாதிப்பு இருந்தால் மற்றவர்கள் சிறுநீரக தொற்று, சர்க்கரை நோய் மற்றும் ரத்தஅழுத்தம் தொடர்பான சோதனையை தொடர்ந்து முறையாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று ஆய்வுகளை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவரான டில்லி ராம் மனோகர் லோகி மருத்துவமனையின் சிறுநீரக பிரிவின் தலைமை மருத்துவர் ஷியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை அவசியம்
வளர்சிதை மாற்ற கோளாறுகள், எலும்பு நோய்கள், இதய நோய்கள், வாத நோய்களும் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக பாதிப்புக்களால் ஏற்படுவதாகும். எனவே சிறுநீரக பாதிப்புக்கள் வராதபடி உரிய சோதனைகள் செய்து, அதனை காத்துக் கொள்ளாவிட்டால் வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு எனவும், இவை இரண்டுமே அதிகம் செலவாகக் கூடியது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications