சகோதரர்களின் நலனுக்காக பெண்கள் வைக்கும் ‘காணுப்பிடி’

புகுந்த வீட்டு உறவுகளிடம் எந்த சூழ்நிலையிலும் அண்ணன் தம்பிகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். ஏனெனில் தன் குழந்தைகளுக்கு தாய்மாமன்தான் எல்லா கடமையும் உரிமையோடு செய்வான் என்பது தமிழ்நாட்டுப் பெண்களின் நம்பிக்கை. இன்றைக்கும் இந்த ரத்தபந்தம் நீர்த்துப்போகாமல் இருப்பதற்குக் காரணம் உணர்வுப்பூர்வமான நேசத்தினால்தான்.
வடநாட்டில் அண்ணன் தம்பிகளுக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடுவதைப்போல தமிழ்நாட்டில் சகோதரர்களின் நலனுக்காக ‘காணுப்பிடி' வைத்து வேண்டிக்கொள்கின்றனர் பெண்கள். இந்த காணும் பொங்கலின் பாரம்பரியம் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.
காணுப்பிடி வைப்பது ஒவ்வொரு ஊரில் ஒவ்வொருவிதமாக கடைபிடிக்கின்றனர். ஒரு சில ஊர்களில் மாட்டுப்பொங்கல் தினத்தன்று செய்கின்றனர். சில ஊர்களில் காணும் பொங்கல் தினத்தன்று செய்கின்றனர். ஆனால் எல்லா ஊர்களிலும் ஒரே முறையில்தான் இந்தப் பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது.
கலர் சாதமும் காக்கை வழிபாடும்
ஆற்றங்கரையில் அல்லது வீட்டின் மொட்டை மாடியில் கோலமிட்டு அதன்மீது கிழக்கு முகமாய் வாழை இலை போடுவார்கள் .முந்தைய நாளில் வைத்த பொங்கலில் மஞ்சள் போடி தூவி கொஞ்சம் மஞ்சள் சாதம், குங்குமம் கலந்து கொஞ்சம் சிவப்பு சாதம், பால் கலந்து கொஞ்சம் வெள்ளை சாதம், தயிர் கலந்த கொஞ்சம் தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் என ஐந்து வித சாதங்களை தயாரிப்பார்கள். ஒவ்வொன்றிலும் ஐந்து அல்லது எழு (ஒற்றைப்படை எண்ணிக்கையில்) உருண்டைகளை பிடித்து இலையில் வரிசையாக வைப்பார்கள்.
"காக்காப்பிடி வச்சேன், காணுப்பிடி வச்சேன், காக்கைக்கு எல்லாம் கல்யாணம், கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம், கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்"என்று சகோதரர்களை எண்ணி மனதில் பிரார்த்தனை செய்வார்கள். இதனையடுத்து வீட்டிற்கு வந்திருக்கும் சகோதரர்களுக்கு இந்த ஐந்து விதமான சாதத்துடன் வடை பாயாசத்தோடு விருந்து கொடுப்பார்கள்.
கூடி வாழும் பறவைகள்
அமாவசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். அதேபோல் தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ காக்கைக்கு சோறு வைத்து இந்தக் காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள். இந்த சாதங்களை உண்ணவரும் காக்கைகள் தன் சகாக்களையும் கூவி அழைக்கும். இது கூடி வாழும் உணர்வினை மனிதர்களுக்கு உணர்த்துகிறது. படையல் வைத்த உணவினை காக்கைகள் சாப்பிட்டு விட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக் கடலை, வாழைப் பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
மூத்தோர் வழிபாடு
இந்த வழிபாட்டில் மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர் என்பது நம்பிக்கை. இதனால் பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.
அதேபோல் எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரேசமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப் படுகிறது.
வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். எனவே, பொங்கல் பண்டிகையை ஒட்டி "காணுப்பிடி' என்ற காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாய் வாழலாம்.












Click it and Unblock the Notifications