உயிர் பிரியாமல் இழுத்துக் கொண்டிருந்தால் கூரையைப் பிரிக்கணுமாம்
சென்னை: உலக மக்கள் மத்தியில் உள்ள சில விசித்திரமான மூடநம்பிக்கைகளைப் பார்ப்போம்.
என்ன தான் நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்ந்தாலும் நம் மக்கள் மூட நம்பிக்கைகளை மட்டும் விடுவதாக இல்லை. மூட நம்பிக்கைகளில் உலக மக்களில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை போன்று.
உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் உள்ள சில விசித்திரமான மூட நம்பிக்கைகளை பார்ப்போம்.

துருக்கி
இரவு நேரத்தில் சூயிங் கம் சாப்பிட்டால் இறந்தவர்களின் சதையை சாப்பிடுவது போன்றாகும் என்று துருக்கியர்கள் நம்புகின்றனர்.

ஜெர்மனி
ஜெர்மனியில் ஒருவரின் உயிர் பிரியாமல் இழுத்துக் கொண்டிருந்தால் வீட்டுக் கூரையில் உள்ள டைல்களில் மூன்றை நீக்கிவிடுவார்களாம்.

பிரான்ஸ்
பிரெட்டை தலை கீழாக பிடித்தாலோ அல்லது மேஜையில் அதை தலை கீழாக வைத்தாலோ அதை வைப்பவர்கள் மற்றும் பெறுபவர்களுக்கு துரதிர்ஷ்டத்தை அது ஏற்படுத்துமாம்.

ஸ்பெயின்
புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் 12 மணி அடித்த உடன் ஸ்பெயின் மக்கள் 12 திராட்சைப் பழத்தை சாப்பிடுவார்களாம். அவ்வாறு 12 திராட்சை சாப்பிட்டால் 12 மாதங்களும் அதிர்ஷ்டமாக இருக்குமாம். சில ஸ்பெயின் மக்கள் புத்தாண்டு இரவு அன்று ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து ஜன்னல் வழியே வெளியே ஊற்றுவார்களாம்.

கிரீஸ்
திருமணமாகாத பெண் ஒரு சிறு பையில் பாதாம் பருப்பை போட்டு அதை தலையணைக்கு கீழ் வைத்து படுத்து தூங்கினால் கனவில் வாழ்க்கை துணை வருவாராம்.

ஐஸ்லாந்து
குளிர்காலத்தில் வீட்டு வாசலில் நின்று ஸ்வெட்டர் போன்றவற்றை பின்னினால் அந்த காலம் நீடித்து இருக்கும் என்று ஐஸ்லாந்து மக்கள் நம்புகின்றனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் பறவை மனிதர்கள் மீதோ, கார், வீட்டின் மீதோ எச்சல் போட்டால் அது அதிர்ஷ்டமாம். செல்வம் கிடைக்குமாம்.
மேலும் பெண்களுக்கு ஒத்தப்படை எண்களில் தான் பூக்கள் கொடுக்க வேண்டுமாம். இரட்டைப்படை எண்களில் இறந்தவர்களுக்கு தான் பூக்கள் வைப்பார்களாம் ரஷ்யர்கள். மேலும் மஞ்சள் நிற மலர்கள் நம்பகத்தன்மை இல்லாததை குறிப்பதால் அதை காதலிக்கு அளிக்கக் கூடாதாம். மீறி அளித்தால் அது உறவுக்கு சாபமாம்.

ஜப்பான்
ஜப்பானில் கையில் உள்ள பெருவிரல் பெற்றோர்களை குறிக்குமாம். அதனால் சவ ஊர்வலம் சென்றாலோ, மயானத்திற்கு சென்றாலோ பெருவிரலை மடக்கி வைத்துக் கொள்ள வேண்டுமாம். அவ்வாறு செய்தால் நீங்கள் உங்கள் பெற்றோரை சாவில் இருந்து காப்பது போன்றாகுமாம்.
மேலும் தூங்கும் போது உங்கள் முகம் வடப்பக்கம் பார்த்து இருந்தால் ஆயுள் குறையுமாம்.

சீனா
நெற்றியை முடியால் மறைப்பது ஒருவரின் வளத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போன்றாகும் என்று சீன மக்கள் நம்புகிறார்கள். ஆண்களின் முகத்தில் நெற்றி தான் ஞானம், வெற்றி, அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பகுதியாம்.

அர்ஜென்டினா
2001ம் ஆண்டு அர்ஜென்டினாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டதற்கு முன்னாள் அதிபர் கார்லோஸ் மெனம் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் அவரது பெயரை உச்சரிப்பதை பெரும்பாலான அர்ஜென்டினா மக்கள் தவிர்க்கிறார்களாம். மெனம் என்பதற்கு பதில் மென்டெஸ் என்று கூறிகிறார்களாம். தப்பித் தவறி மெனம் என்று கூறிவிட்டால் உடனே துரதிர்ஷ்டத்தில் இருந்து தங்களை காக்க பெண்கள் தங்களது இடது பக்க மார்பகத்தையும், ஆண்கள் விந்துப்பையின் இடப்பக்கத்தையும் தொடுவார்களாம்.












Click it and Unblock the Notifications