எலி- க்ருஷாங்கினி
வேறு வழியில்லாமல் அவள் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தபோது மணி பத்து ஆகி விட்டிருந்தது. முடிவைச் செயலாக்கும் முயற்சியில்ஈடுபடும் ஆரம்ப அசைவுகளை வெளியே இருந்த இருளையும் அமைதியையும் பிளந்து கொண்டு வெளிப்பட்ட அழுகைக் குரல் மடியச்செய்தது.என்னவென்று பார்க்கும் இயற்கை ஆர்வம் தனக்கு முன் ஓட அவள் விரைந்தாள். எதிர் வீட்டில் கிழவர் இறந்து விட்டார் என்று புந்துகொண்டாள்.
ஒருவனுக்குத் தன் இறப்பைப் புரிந்து கொள்வதைத் தெரிந்து கொள்ள முடிந்தால் அதனால் அவனுக்கு உண்டாகும் மன பாதிப்புகள்எப்படியிருக்கும் என்பதை அவள் எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.
அந்த விநாடி முதல் நாம் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே உடலை விட்டுப் பிரியும் உயிர் எனப்படும் வஸ்து எங்கு செல்லும் என்றுஒரு கேள்வியைக் கேட்டு விடை காணாமல் திகைத்தாள். இம்மாதிரி விஷயங்களைப் பற்றித் தெந்து கொள்ளும் ஆர்வம் எத்துணைபேருக்கு இருக்கும் என்று யோசித்தாள்.
வீட்டில் எலிகளின் உபத்திரவம் திரும்பவும் மிக அதிகமாகி விட்டிருந்தது. இந்த வீட்டிற்குக் குடி வந்த புதிதில் எலிகளின் உரிமையானவீட்டிற்கு வந்து விட்டோமோ என்று கூட அவளுக்குத் தோன்றும்.
அவள் குடிவந்தது புதிய கட்டடம். சுற்றிலும் பல வகை மரங்கள் காடு போல, தன்னிச்சையாய் மண்டிக் கிடந்தன. வந்தபோது இந்தப் புதியசூழ்நிலையில்தான் வாழப் போகிறோம் என்ற நினைப்பு அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அங்கு வரும் பல வகைப் பறவைகளையும்அவற்றின் இயல்புகளையும் தன்னால் கவனிக்க முடியும் என்று தோன்றியது.
தாம் கவனிக்கப்படுவதை அப்பறவைகள் உணர முடியாத நிலையில் அவை பயமற்றுத் தங்கள் செயல்களில் ஆழ்ந்து விடும் சுகத்தைக் காணஅவள் மிகவும் விரும்பினாள். அவற்றைக் கவனித்து அவற்றைப் பற்றிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றஆவலை விடவும் தன்னை அந்தச் சூழ்நிலையில் மரங்களின் கீழ் அவற்றின் இருளில் தனியாக வைத்துப் பார்த்து உடல் சிலிர்த்தாள்.
தான் அவைகளை ஏதும் செய்ய முடியும்; ஆனால் அவை தனக்குத் தீங்கு செய்ய முடியாது என்ற பாதுகாப்பு உணர்வுடன் முதலில் அவள்பறவைகளையும் அணில்களையும் பார்த்து வந்தாள்.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அந்த அணில்களின் கொட்டம் தாங்க முடியாதவொன்றாகிப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துத் தன்நினைவில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதை உணர்ந்தாள்.
பகலில் அணில்கள் என்றால் இரவில் எலிகள்.
சமையல் அறையைத் திறந்தவுடன் ஏழு எட்டு எலிகள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக ரேக்கின் பின்புறத்தின்றும் புறப்பட்டு ஊர்வலம்போல சுவற்று மூலையில் உயர ஏறி, ஒரு நொடி விட்டத்தில் நின்று காதுகளை படபடவென்று ஆட்டிக் கொண்டு அவளைப் பார்த்து விட்டு,தொடர்ந்து விட்டத்தின் வழியே ஓடி குளியல் அறையின் பின்புற இருளில் சென்று மறையும்.
பாட்டில்கள் பல உடைந்தன, பிளாஸ்டிக் மூடிகள் சிதிலமாயின.
இவை தன்னை முற்றுகையிட்டு இங்கிருந்து விரட்ட முயற்சிப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் அவள் வேறு வீடு போகவில்லை.வீடு கிடைப்பது எலிகளுக்குக் கிடைப்பது போல அவ்வளவு சுலபமல்ல. அவைகளுக்கு சாப்பாடு கூட ஒரு பிரச்சினை இல்லை.
அந்த வீட்டில் தங்களுக்குத்தான் பாத்யதை என்று சொல்லாமல் சொல்லும் எலிகளுடன் போராட்டம் தொடங்கினாள். கணவனுடன்கடைக்குச் சென்று எலிப் பொறி காண்பிக்கச் சொன்னாள். சிக்கிய எலி கழுத்து நெறிபட்டு இறக்கும்படி அமைப்புள்ள எலிப் பொறி ஒன்றைஅவன் எடுத்துக் கொடுத்தான். முதலில் எலியைக் கொல்வதா என்று பரிதாபப்பட்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு கடைக்காரனின்சிரிப்பொலியைக் கேட்டபடி வீடு வந்து சேர்ந்தாள்.
ஆனால் அன்று இரவே அவள் அந்தப் பொறியை வாங்கும் தீர்மானத்துக்கு வர எலிகள் உதவின.
மறு நாள் எலி எமன் வந்து விட்டது. பொறியில் வைக்க வடை வாங்கி வந்ததும் இனி வடையைப் பார்க்கும் போதெல்லாம் எலி கொன்றநினைவு வரும் என்று அவள் மனம் கற்பனை செய்தது. பொறியில் வடையைப் பொருத்தி விட்டு, சமையல் அறை விளக்கை அணைத்துவிட்டு கணவனுடன் பேசிக் கொண்டிருந்தபோதும் இருவர் மனதும் காதும் பொறியில் எலி சிக்கிய ஒலி கேட்பதையே நினைத்தபடிஇருந்தன.
பொறியிலிருந்து எழுந்த ஓசை அவளுக்கு மகிழ்ச்சியைத் தான் முதலில் கொடுத்தது. எலிப் பொறியில் சிக்கிக் கொண்டு சில நிமிடம்துடித்துப் பின்பே இறந்தது. எலி இறப்பதில் தனக்கு பாதிப்பே ஏற்படாமல் இருந்ததை நினைத்து வியந்தாள்.
எப்போது அனுதாபம் மறைந்து வெறியும் மகிழ்ச்சியாக மாறியது? அனுதாபம் வெறும் மேல் பூச்சோ? முதலிலிருந்தே வெறிதான்உண்மையான உணர்வோ? வெறி! கொலை வெறி!
முடிவில் அன்று கொன்ற எலிகளின் மொத்த எண்ணிக்கை 12 என்று நினைத்துக் கொண்டாள். அன்று ஏகாதசி என்பதும் அவளுக்கு நினைவுவந்தது. பன்னிரெண்டு உயிர்களை வைகுந்தம் அனுப்பின புண்ணியம் தனக்கு என்று சிரித்துக் கொண்டாள்.
அப்புறம் இந்த அணில்கள்.
அவள் கணவர் எக்காரணம் கொண்டும் அணில்களுக்குப் பொறி வைக்கக் கூடாது என்று கூறியிருந்தார். அணில் என்ன உயர்த்தி, எலிஎன்ன மட்டம்? அணிலும் துணிகளைக் கிழிக்கிறது, சீசாக்களைத் தள்ளி உடைக்கிறது. நல்லெண்ணெய்க்குப் பறக்கிறது. பகல் முழுவதும்வீட்டை ஆக்கிரமிக்கிறது. அணில் என்ன அழகு, எலி என்ன அசிங்கம் என்பதாகப் பலவிதத்தில் அவள் கணவனுடன் வாதிட்டாள்.அவனுக்குத் தெரியாமல் பொறி வைத்தாள். அதில் அணில் சிக்கியும் இறக்கவில்லை. எப்படியோ பிடியினின்று தப்பித்துப் போய் விட்டது.
அன்று இரவிலும் எலி வந்து பொறியில் சிக்கிக் கொண்டது. அதன் உயிர் எப்படி எப்போது உடலை விட்டுப் பிரிகிறது; அப்போது நிகழும்மாற்றம் என்ன என்று தெரிந்து கொள்ள ஓடிச் சென்று பார்த்தாள்.
எலி மூச்சு இழுத்தபடி கழுத்தில் இரும்புக் கம்பி அழுத்திக் கிடந்தது. அவள் கற்பனைப்படி அங்கு எந்த மாற்றமும் நிகழவில்லை. பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே எலி சலனமற்றுப் போயிற்று.
எல்லா ஜீவராசிகளுக்கும் உயிர் என்பது ஒரே அளவாக ஒரே எடை கொண்டதாக இருக்குமா? பிரிந்த உயிர் வானில் சுற்றியபடிஇருக்குமாம்; எந்த ஜீவராசி வயிற்றிலாவது சென்று ஜனிக்குமாமே! ஒரு வேளை இறந்த இந்த எலியின் உயிர் தன் வயிற்றிலேயே வந்துதன்னை பிரசவத்தில் கொன்று விடலாம் என்று நினைத்துப் பயம் கொண்டாள்.
பாதுகாப்புடன் இருந்தாலும் குழந்தை வராது என்பதற்கு உத்திரவாதம்தான் என்ன? கணவனைக் கூடாமலேயே இருந்து விட்டால்?அவனிடம் அதற்கான காரணத்தைச் சொல்லும்போது அவன் முகம் அடையும் மாற்றத்தை நினைத்துச் சிரிப்பு வந்தது.
தனக்கு தெரிந்து இந்த எலி, எதிர்வீட்டுக் கிழவர். தெரியாமல் எத்துணை உயிர்கள் இருக்கும் நம்மைச் சுற்றி? மேகமே இல்லாத நிர்மலமானவானத்தைப் பார்த்தால் ஏதோ பறப்பது போலத் தோன்றுகிற அவைதான் உயிர்களோ? வானம் முழுவதையும் அடைத்துக் கொண்டு இடம்தேடித் தேடி அலைகின்றனவோ?
எறும்பின் உயிர் திரும்பவும் எறும்பிலேதான் ஜனிக்குமா? அல்லது அவளது எண்ணப்படி உயிருக்கு அளவு இருந்து பாவங்களுக்குத்தக்கபடி காற்றில் வைத்த யூடிகுலோனாக கரைந்து குறைந்து குரங்கு பூனை எறும்பு என்று அமையுமா?
மனிதன் புண்ணியம் செய்யச் செய்ய உயிர் அளவு மிகுந்து எதிலும் உயிரைத் திணிக்க முடியாத அளவு பெரியதாக, பிறகு கடவுளேஅவற்றைக் கைவிட்டு விடுவானா அல்லது பகிர்ந்து சுமப்பானா?
பொறியில் சிக்காமலே பறந்த கிழவர் உயிர், பொறியில் சிக்கித் தப்பின அணில் உயிர், பொறியில் சிக்கி மறைந்த எலியின் உயிர் -உயிர்களிலும் உயர்வு தாழ்வு உண்டோ? அவளுக்குப் பெருமூச்சு வந்தது.
தன் உயிர் போகும் வரையில் இந்தப் பெருமூச்சும் யோசனையும்தான் தனக்கு மிச்சமிருக்கும் என்று தோன்றியது.
- க்ருஷாங்கினி([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications