பாட்டி
சாணி மெழுகிய
பழுப்பு நிற தரை
குளிர்கால சிவப்பு நிற
ஓடுகள்
கோடைகால வெள்ளை
ஆஸ்பெஸ்டாஸ் வெப்பம்
தேள் ஒழுகும் கூரை
பல முகங்கள்கொண்டது
பாட்டியின் வீடுகள்!
பன்னி குட்டிபோட்டமாதிரி
பத்து பெத்தேண்டா
அத்தனையும் தாசில்தார்
டீச்சருன்னு இருக்குக
மழை ஒழுகும் கூரையினடியிலமர்ந்து
திரண்ட சீம்பாலை ஊட்டிவிடும்
பாட்டியின் வார்த்தைகள்
அர்த்தம் பொதிந்தவை!
கூனிதடுமாறி இரண்டு தெருக்கள் கடந்து
பனியாரம் வாங்கி
சுருக்குபையில் பத்திரப்படுத்தி
நான்கு தெருகடந்து
பனியார வாசத்துடன்
தலைகோதி உறக்கம் கலைக்கும்
பாட்டியின் அன்பு
அங்கீகரிக்கப்படாதது!
முடியாத இறுதி சிலமாதங்களில்
உன் வீடு என் வீடென அலைக்கழிக்கப்பட்டு
குறுகலான சமையலறை மாடிப்படி இடுக்குகளுக்கிடையே
கால் நீட்டவும் வசதியின்றி
உயிர் நீத்த பாட்டியின் வலி
அறியப்படாதது!
அப்பாவும் பாட்டியும் ஒரே சமயத்தில்
உடல் நலமில்லாமலிருக்க
மரணம் தாங்கிய தந்தியை
பதட்டமாக பிரித்து
"பாட்டி........! என்றடைந்த நிம்மதி
விசித்திரமானது!
- பாஷா([email protected])

இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications