முத்தத்தின் முன் கதை
நிறைய முத்தங்கள்
நம்மிருவரின் உதடுகளுக்கிடையில்
தோரணம் கட்டித் தொங்குகின்றன.
நான் வலுக்கட்டாயமாக
உன் உதடுகளிலிருந்து
பறித்து
என் உதடுகளில்
நட்ட முத்தங்களின் போது
நாற்று நடுவதாகத்தான்
நினைத்துக் கொண்டிருந்தேன்.
இப்போது தான் உணர்கிறேன்,
களை பறித்திருப்பதை.
இருட்டில்
அடையாளமும் தெரியாமல் இடமும் தெரியாமல்
அவசரமாய் நான் கொடுத்தவையெல்லாம்
முத்தங்களல்ல,
முன்னுரைகள் மட்டுமே.
முதல் கவிதை வெளியானதற்குப்
பரிசென்று சொல்லி
உதடுகளின் மீது
கொஞ்சங் கரிசனப்பட்டு
நீ கொடுத்ததும் முத்தம் அல்ல,
மு மட்டுமே.
சில முத்தங்கள்
உன்னுடையவை மட்டுமே,
சில, என்னுடையவை மட்டுமே.
அவற்றைக் கணக்கில் சேர்க்கலாகாது.
அப்படியென்றால்..?
ஆமாம்,
ஒன்று கூட உருப்படியாய்த் தேறாமல் தான்
காதலித்துத் தொலைத்திருக்கிறோம்,
இத்தனை நாள்.
இது தான் முன் கதை,
இன்று நீ வந்தபோது
ஏனென்று விளக்காமல்
நான் தந்து நீ எடுத்துக் கொண்ட
நம்முடைய
அந்த சூடான முத்தத்திற்கு.












Click it and Unblock the Notifications