சொந்த வீடு- பத்மப்ரியா
Subscribe to Oneindia Tamil
டீலக்ஸ் ப்ளாட்-
சொல்லும் போதே நாக்கும்
நடக்கும்போது காலும்
வழுக்கியது
முறையே தரகருக்கும் எனக்கும்
கரும்புகை
கண்நிறைய தூசு
மனம் நிறைய ஈ
மற்றும் கொசுக்கள்
காற்றின் மாசுக்காக
ஒலி மாசுபட
உறுமலுடன் லாரிகள்
குப்பை சுமந்து
தண்ணீரில் கலக்கவென
தனியே ஏதுமில்லை
வரும்போதே மாசுற்று
வரிசையாய் வழங்கப்படும்
வாங்கிவிட்டதால்
வாழ்ந்து தொலைப்போம்-
என எண்ணித் துணிகையில்
அட்டகாசமாய்
ஒரு ஜோடி குயில்கள்
கூடிய விரைவில் வெட்டப்படக்கூடிய
பக்கத்து வேப்பமரத்தில்
அதிகாலை அமைதியில்
அவற்றின் கூவல்கள்
ஆதரவாய் நெஞ்சை தழுவும்
இதுபோதும் இனி வாழ்வோம்
இனிய இல்லம் அமைப்போம்- என
எண்ணுகையில்
மனம்போல் மாற்றிக் கொண்டன
அவற்றின் இருப்பிடத்தை
அப்பாலுள்ள கோயில்
ஆலமரத்திற்கு












Click it and Unblock the Notifications