சாலையோரப் புளியமரம்
Subscribe to Oneindia Tamil
நெடுஞ்சாலையோரம்
கூனி வளைந்தேறும் புளியமரத்தின்
கருநிறத்தண்டு
செங்காவி வெள்ளையென
மாற்றிமாற்றி அடிக்கப்பட்ட
சுண்ணக் கோவணத்தில் ஒளிர்ந்தாலும்
கிளைகள் வெட்டப்பட்டு
முண்டு முண்டாய்வீங்கிய தழும்புகள்தான்
இன்னும் என் கவனத்தில்.
இம்மரத்தின் இலைகளில்
வெட்டுப்புழு பல வருடங்களாகவே
படர்ந்திருப்பினும்,
குத்தகைக்காரனுக்கு புளியங்காய் மூட்டையின்
எடையிலேயே கண்
ஒரு கொம்பொடிந்த எருமையின்
கால்குளம்படியில்
பழுப்பேறிய இலைகள்
நொறுங்கிய
ஓசையில் இலையுதிர்வைப்
புலம்பித்தீர்ப்பினும்
என்றேனும் ஒருநாள் பருவம் தவறி
மழைபெய்யினும்,
புதிதாய் தளிர்விடத்
தவறுவதேயில்லை.
முட்டாள் மரம்
பரிணாம வளர்ச்சியில்
மனிதனாகவே நின்றுவிட்டது.












Click it and Unblock the Notifications