சுதந்திரம் என்றால் என்ன ?
நகரத்தின் மீது விடியல் விழுந்து விட்டது என்பதை பறைசாற்றும் வண்ணம் வாகனங்கள் விழித்துக் கொண்டு சாலையின் இருமருங்கிலும் ஒன்றையொன்றுமுண்டியடித்துக் கொண்டு சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன.
ஆட்டோ ரிக்ஷா ஸ்டாண்ட் அருகே நடைபாதையோரத்தில் படுத்திருந்த முத்து நெட்டி முறித்தவாறே தூக்கக் கலக்கத்துடன் எழுந்தான்.
"" டேய் இவளுக்கு பொறந்தவனே, சீக்கிரம் போயி டீக்கடையில ரெண்டு கிளாஸ் டீ வாங்கியாந்திடுடா, பொட்டிக்கடை முனுசாமி பிளாட்பாரத்தைகழுவுறேன்னு உம்மேல தண்ணியை ஊத்தப்போறாண்டா சத்தம் போட்டாள் அருகே எழும்பி புடவையை சரி செய்து கொண்டிருந்த அலமேலுப் பாட்டி.
""சும்மா போவியா, கொஞ்சமா தூங்கிக்கிறேனே முணுமுணுத்தவாறே எழுந்து பல்லைத் துலக்கிக் கொண்டே நடந்த முத்து குழாயடியில் வந்ததும்அங்கேயிருந்த மூன்று பேரைக் கண்டதும், ""அம்மா எம்மாம் பெரிசு இந்த எலி என்று கத்தவும் ""என்ன எலியா? என்றவாறே மூவரும்பதறியடித்து ஓட, சிரித்தவாறே குழாயில் முகத்தை அலம்பி விட்டு டீக்கடையை நோக்கி நடந்தான் முத்து.
"என்னா முத்து ரெண்டு டீயா ? பாட்டியோட கணக்கா ? என்றவாறே வேலன் கிளாஸ்களில் டீயை ஊற்றினான்.
நாட்டின் நடைபாதை நாயகர்களின் எதிர்கால சந்ததிகளில் ஒருவன் தான் இந்த முத்து. அவனுக்கு எட்டு வயது இருக்கும், அப்படித்தான் அலமேலுப் பாட்டிசொல்றாள். இரண்டு வருடங்கள் முன்னால் வரை தன்னை கடவுள் பிளாட்பாரத்தில் படைத்ததாகத் தான் எண்ணிக் கொண்டிருந்தான்.
தெருவில் மற்றைய குழந்தைகள் தனது தாய் தந்தையருடன் நடந்து போகும் போதும், பிளாட்பாரத்தில் இரண்டடி தள்ளி குடும்பம் நடத்தும் மாரியின் மகள்செல்லம் அவனை அப்பா என்றும், சரஸ்வதியை சரஸ்வதியை அம்மா என்றும் கூப்பிடும் போது, முத்து வியப்பதுண்டு.
ஒரு நாள் பாட்டியைக் கேட்டே விட்டான். " பாட்டி அது யாரு அப்பா, அம்மா செல்லம் கூப்பிடறாளே ?
"" முட்டாள்பய மவனே ! செல்லத்தை விட நீ அதிர்ஷ்டக்கார கட்டைடா, உனக்கு அப்பா, அம்மா எல்லாம் ஆண்டவன் தான் தெரிஞ்சுக்கோ என்றாள் அலமேலுப்பாட்டி.
அப்போதெல்லாம் பெருமையுடன் வானத்தை பார்த்துக் கொள்வான், மெதுவாக வாயில் அப்பா அம்மா என்று முணுமுணுத்தவாறே.
அப்புறம் தான் ஒரு நாள் பாட்டி பெட்டிக்கடை முனுசாமியிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுவிட்டான்.
""மாப்பா, பாவம் ஒரு நாள் குப்பத்தொட்டிக்கு பக்கமா, குழந்தையா அழுதுக்கிட்டிருந்தப்போ பாத்தேன் மனசு கேக்கல்ல, தூக்கியாந்துட்டான்.எவ பெத்துக்கிட்டு ஓடினாளோ. எங்கேன்னாலும் மகராசியா இருந்துட்டுப் போகட்டும்
ஆறு வயதானாலும் அவனுக்கு ஏனோ தூக்கிவாரிப் போட்டது. அம்மா என்றொரு சொல் ஏனோ தெய்வத்தன்மை கொண்டதாகதெரியவில்லை.பாட்டி என்ற பதம் தன் அவனதுமனக்கோவிலில் சிலையானது.
அதுக்கப்புறம் இரண்டு வருடமாக அவன் பாட்டியிடம் இதைப்பத்தி எதுவுமே கேட்கவில்லை.
"" ஏண்டா கிறுக்கனுக்கு பொறந்தவனே ! வேலைக்கு கிளம்புவியா திரும்பவும் அதட்டினாள் அலமேலு.
"பாட்டி நானு போயிட்டு வாறேன் என்றவனைப் பார்த்து,
டேய் காலங்காத்தால வெறும் வயித்தோட போயி என்னடா பண்ணப்போற, இந்தாடா வேலுவோட கடயில ரெண்டு இட்லி வாங்கி துன்னுட்டுப் போடாஎன்றவாறே மடியை அவிழ்த்து சில்லறையை அவன் கையில் கொட்டினாள் பாட்டி.
ஏழு வயதிலேயே தி.நகரில் ஒரு கடையில் எடுபிடி வேலை வாங்கிக்கொடுத்து விட்டாள் பாட்டி. காலையில் 8 மணிக்கு போனால் இரவு 7 மணிக்குத்தான்திரும்புவான் முத்து. மாசத்துக்கு 450 ரூபாய் கொடுத்தார் கடை முதலாளி. அதை அப்படியே பாட்டியின் கையில் கொடுத்துவிடுவான்.
செலவுக்கு மட்டும் அவனுக்கு ஏதோ சில்லறைகளை கொடுத்துவிடுவாள்.
""இங்க வாடா முத்து, தரையை பெருக்குடா ஒரே குப்பையா இருக்கு என்ற முதலாளி ராமையா, பெருக்கி முடிவதற்குள் " ஓடிப்போய் ஒரு கிளாஸ் தண்ணிஎடுத்திட்டு வாடா, இவன் வேற தண்ணி கொண்டாறதுக்குள்ளே மனுஷன் தாகத்துலே செத்துடுவான் என்று அலுப்புக் கொட்டியவாறே கத்துவார்.
மதியம் ஒரு மணியானதும் ஓடி வந்து " டேய் இவனுகளே ! அவன் பாவம் பச்சப் புள்ளடா அவனப் போய் சாப்பிட்டுட்டு வரச்சொல்லுங்கடா ! டேய் மணிகல்லாப் பெட்டியிலேந்து பணம் எடுத்துக்கொடுடா என்றும் கரிசனமாக கத்துவார்.
இவன் மேல ராமய்யாவுக்கு ஏதோ பாசம், ஒருவேளை அவர் சின்ன வயசில முத்துவ மாதிரி கஷ்டப்பட்டிருப்பாரோ என்னமோ?
முத்துவுக்கு ஒண்ணு மட்டும் புரியல,. இவன் வயதுப் பையன்கள் புத்தகங்களை தூக்கிக்கிட்டு ஸ்கூலுக்கு போறோம் என்னுட்டு போறானுகளே ! அப்படிஎன்ன தான் பண்ணுவாங்க ?
சில சமயம் சாப்பிடப் போயிட்டு இரண்டு வடையை வாங்கிக்கிட்டு அருகிலிருக்கும் ஸ்கூலின் வேலியோரம் நின்னு அவன் வயதுப் பையன்கள் ஓடிவிளையாடுவதை பார்ப்பான்.
அவன் மனம், "என்னமோ பாவம் இவனுகளுக்கு வேலை செய்ய ராமய்யா மாமா கடை போல ஒண்ணும் கிடைக்கல போல இருக்கு என்றுஎண்ணிக்கொள்ளும். இருந்தும் ஏனோ துள்ளி விளையாடும் அந்தச்சிறுவர்களின் முகத்தில் இருந்த பொறுப்பற்ற மகிழ்ச்சி அவனை என்னமோ பண்ணிடும்.
அந்தப் பள்ளிக்கூடத்தின் மைதானத்தின் நடுவில் கொடிக்கம்பத்தில் காற்றடிக்கும் போது கம்பீரமாக பறக்கும் அந்த இந்திய தேசியக்கொடியைகாரணம் புரியாமல் பெருமிததத்துடன் பார்ப்பது அவன் வழக்கம்.
அன்றும் அவசரம் அவசரமாக கடையிலிருந்து வந்துகொண்டிருந்தான் முத்து. காலையில் புறப்படும்போது "" ஏண்டா இவனே ! சாயந்தரம் வர்றப்போ,அரச மரத்தடிப் பிள்ளையாருக்கு ஒரு சிதறு தேங்கா போட்டுட்டு , சட்டுப்புட்டுன்னு வந்து சேருடா என்ற பாட்டியினன் வாசகங்கள் ஞாபகத்தில் இருந்தன.
ஏதாவது ஒரு சேதியை வைத்துக்கொண்டு தான் பாட்டி புள்ளையார பாத்துட்டு வாடான்னு சொல்லுவாள் என்று அவனுக்கு தெரியும். அவனை வேலைக்குஅனுப்பிவிட்டு அவள் மட்டும் சும்மா குந்திக்கிட்டு இருப்பவளல்ல.
அங்கேயிருக்கும் கடைகளை பெருக்கி சுத்தப்படுத்தி மாசாமாசம் ஒரு 350 ரூபாயாவது சேர்த்திடுவாள். அதுமட்டுமில்லாம, அவன் வரும்போது சாதமும்,மீன் குழம்பும் மணக்க மணக்க பண்ணி வைப்பாள்.
பிளாட்பாரத்தில் தான் வாழ்க்கை என்றாலும் பாட்டி கெட்டிக்காரி. ஓரத்தில் இருந்த ஒரு சிறு பகுதியில் மூணு கல்ல வெச்சு ஒரு அடுப்பு ரெண்டு மண்பானைகள் என ஒழுங்கு படுத்தியிருந்தாள்.
பாட்டியின் முகம் நெஞ்சில் நிழலாட பாசநினைவுகள் அவளுக்கு தீபமேற்ற அவசரமாக புள்ளையாருக்கு தேங்காயப் போட்டுட்டு ஆட்டோ ரிக்ஷாஸ்டாண்ட் அருகிலிருந்த அவனது வாசஸ்தலமான பிளாட்பாரத்தை வந்தடைந்தவனின் காதுகளில் பாட்டி, சரஸ்வதியிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
" என்ன அலமேலு அக்கா , போறதுன்னே முடிவு பண்ணிட்டியா ? முத்துவுக்கு தெரியுமா ? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள்சரஸ்வதி.
" அடி மூளை கெட்டவளே ! ரெண்டு வருஷமா பாவம் அவன் என்ன நம்பிக் கையில கொடுக்கிற பணத்தையும், அத்தோட எங்கிட்ட இருந்த கொஞ்ச நஞ்சநகை நட்டயும் வித்து, ஊருக்கு வெளியே ஒரு சின்ன மண் குடிசையாப் பாத்து பேரம் பேசி பணமும் கொடுத்திட்டேன்.
இனி மாசாமாசம் ஒரு நூத்தி இருபத்தஞ்சு ரூபா கொடுத்தா போதும், அத நாம ஒரு மாதிரி சமாளிச்சிக்குவோம். அவனுக்கும் ஒரு வீடாச்சு
பாட்டியின் குரல் அவனுக்கு ஏதோ வானத்திலிருந்து தெய்வத்தின் அசரீரி போல ஒலித்தது. வீடு என்பது ஏதோ எட்டாக்கனவு என்பது அவனது எண்ணம்.தனது வீடு பிளாட்பாரம் தான் என்பது தான் இதுவரை அவனறிந்த உண்மை.
வீட்டின் பெருமையை அவன் அறிந்திருக்கவில்லை. ஆனால் தனக்கும் பாட்டிக்கும் ஏதோ நல்ல காலம் பிறக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது.
ஓடிவந்து பாட்டியைக் கட்டிப்பிடித்தான்.
"" எல்லாத்தையும் கேட்டிட்டியா முட்டாப்பய மவனே ! பாட்டி ஓட்டைப்பல்லு வழியே அலங்கோலமாக சிரித்தாள். ஆனால் அவனுக்கு மட்டும்அதில் ஏதோ அழகு தெரிந்தது.
அடுத்த நாள் காலை பாட்டியும் அவனும் பெட்டிகளை கையில் எடுத்துக்கொண்டு எல்லோரிடமும் சொல்லிவிட்டு பஸ்சிலேறி புறப்பட்டார்கள்.
எல்லோரும் ஆரவாரமாக வீதிகளை அலங்கரிப்பதும், கட்டிடங்களில் தேசியக் கொடிகளை ஏற்றிக்கொண்டும் இருந்தார்கள்.
" என்ன பண்ணுறாங்க பாட்டி ? என்று புதிராக கேட்டான் முத்து.
"விவரங்கெட்டவனே ! நாளைக்கு சுதந்திரதினமில்ல அதுதான்டா. நம்ம வீட்டிலயும் கொடி கட்டுவோம். எங்கிட்ட பொட்டியில ஒரு கொடி இருக்குடா என்றாள் பாட்டி.
"" அந்தக்கொடி ஏன் பாட்டி ? இன்னும் புரியவில்லை முத்துவுக்கு.
"சும்மா போடா ! இது கூட தெரியாதா ? அது தான் நம்ம நாட்டோட தேசியக்கொடிடா. அதப்பறக்க விடுறதுக்கு தான் எம்புருஷன் தன்னோட உசிரவிட்டுச்சாக்கும்"! பெருமையோடு முத்துவைப் பார்த்தாள் பாட்டி.
"" அதுசரி பாட்டி, உங்கிட்ட அந்தக்கொடி எப்படி வந்திச்சு ? தொடர்ந்தான் முத்து.
" ஓ அதுவா ? அதான் சொன்னேனடா, எம்புருஷன் சுதந்திர போராட்டத்துல உசிர விட்டப்போ அது கிட்ட இருந்த ஒரே ஒரு சொத்து அதுதான்னுசொல்லி எங்கிட்ட கொடுத்தாங்கடா மீண்டும் பெருமிதத்துடன் பாட்டி.
பஸ்சிலிருந்து இறங்கி அவர்களது குடிசை இருக்கும் இடத்தை நோக்கி நடந்தார்கள். பல குடிசைகளை தாண்டி அவர்களின் குடிசை இருக்கும் இடத்திற்குள் வந்ததும்பாட்டி அதிர்ந்து விட்டாள்.
அந்தக்குடிசை இருந்த இடம் காலியாகவும் மற்ற அனைத்து குடிசைகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டும் இருந்தது.
அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாக அருகே அழுதுகொண்டிருந்த ஒரு வயதான பெண்ணிடம், "" ஏய் புள்ள ! இங்க என்ன நடந்திச்சு ? நான் என் பணத்தை முழுசா அந்தப்புரோக்கராண்டட குடுத்திட்டேனே ! கண்களில் முத்து முத்தாக கண்ணீர் திரள கேட்டாள் பாட்டி.
முத்துவின் கண்களிலும் கண்ணீர் திரண்டது. ஆனால் அதன் காரணம் வேறு. இதுவரை அந்தக் கிழப்பாட்டி அழுது அவன் பார்த்ததே இல்லை. அவள் கண்களில்நீரைக்கண்டதும் முத்துவின் கண்களில் ஆறு பெருகியது.
" பாட்டி நீயும் ஏமாந்திட்டியா ? அதான் அந்தப் பாவி பரமசிவம் (அந்த ஊர் பணக்காரன்) இந்த நிலத்தை மடக்கிப் போட்டுட்டு அஞ்சுமாடிக்கட்டிடம் போடப்போறேன்னு சொல்லி போலீஸ்காரங்களோட வந்து எல்லாத்தையும் இடிச்சிட்டான். அய்யோ நான் என்ன
பண்ணுவேன் ? என்று ஒப்பாரி வைத்தாள் அந்தப்பெண்.
பாட்டி பெட்டியைக் கையிலெடுத்தாள்.
" பாட்டி நாம எங்கே போறோம் ? என்றான் முத்து.
"" அதிர்ஸ்டமில்லாத பயமவனே ! நமக்குத்தான் அவன் குடுத்த பிளாட்பாரம் இருக்கே வாடா கண்களைத் துடைத்தவாறு பாட்டி புறப்பட, அவள்பின்னால் முத்து வாழ்க்கையில் முதலாவது பாடம் படித்த அனுபவத்துடன் தொடர்ந்தான்.
பஸ் அந்த ஊர் எல்லையை தாண்டும்போது, டிராபிக் ஜாம் காரணமாக ஓரிடத்தில் சற்று தாமதமானது. அப்போது அருகே இருந்த திடலில்பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மேடை முழுவதும் தேசியக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த ஊர் அரசியல்வாதி பேசிக்கொண்டிருந்தார். அவர் அருகே பரமசிவம் தேசியஉடையில் அமர்ந்திருந்தார்.
"" தோழர்களே ! எமது நாட்டின் சுதந்திரம் மகத்தானது, விலை மதிப்பற்றது. எத்தனையோ உன்னத உயிர்களின் இழப்பால் பெறப்பட்டது. அதன்காரணமாக இன்று சமூகத்தொண்டர் பரமசிவம் போன்றோர் இந்தச் சேரியின் மத்தியில் ஐந்து மாடிக்கட்டிடம் கட்டி, இந்தப் பகுதியின் பொருளாதாரவளர்ச்சியை பெருக்குகிறார்.
அரசியல்வாதி அடுக்கிக்கொண்டே போனார். பஸ் புறப்பட்டு சென்றது.
பிளாட்பாரத்தில் பாட்டியையும், முத்துவையும் கண்டதும் பெரும் கூட்டமே கூடிவிட்டது. பரமசிவத்தை திட்டித் தீர்த்தவர்கள், பாட்டிக்கு அதே இடத்தைஒதுக்கிக் கொடுத்தார்கள். ஏனோ அந்தச் சிறுவனின் முகத்தில் தன்னைச் சுற்றி நின்ற பிளாட்பார பிரஜைகளைப் பார்த்ததும் ஓர் சமுதாய உணர்வுபொங்கியது.
மீண்டும் விடியல், மீண்டும் பாட்டியின் கத்தல்.. பல்லைத் துலக்கிக்கொண்டே, "பாட்டி சுதந்திரம்னா என்னா ? ஆவலாக கேட்டான் முத்து.
" அது எனக்கும் உனக்கும் புரியாத ஒண்ணுடா மீண்டும் அலங்கோலமாக சிரித்தாள் அலமேலுப் பாட்டி.
- சத்தி சக்திதாசன்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications