விஸ்வரூபமான உளவு வேலை- பெகாசஸ் ஞானம்... சைபராகும் செக்யூரிட்டி- அ. குமரேசன்
சென்னை: நவீனத் தகவல் தொழில்நுட்பம் உலகளாவிய தொடர்புகளுக்கு வழியமைத்திருப்பது ஆக்கப்பூர்வமான வளர்ச்சி. அதே தொழில்நுட்பம் உலகளாவிய கண்காணிப்புகளுக்கு வழியமைப்பது அராஜகத்தனமான சூழ்ச்சி. எந்தவொரு மனிதருக்கும் தனது நடமாட்டம் யாராலோ கண்காணிக்கப்படுவதை விடவும் மோசமான உணர்வு இருக்க முடியாது.
குற்றச் செயல்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள் கூட தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்படக்கூடாது என்பதே உயர்ந்ததொரு மனித உரிமைப் பண்பு. அது ஒரு லட்சியமாக இருக்கிறதேயல்லாமல், நடைமுறையில் கண்காணிப்பு - சரியாகச் சொல்வதென்றால் தனிமனிதரை உளவுபார்க்கும் வேலை - நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு நபர் திருமணத்திற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிற மற்றொரு நபர் பற்றிய தகவல்களைப் பெறுவது முதல், ஒரு நிறுவனம் தனது தொழிலாளியின் தொடர்புகளை வேவு பார்ப்பது வரையில் இது நடக்கிறது. விதிவிலக்கே இல்லாமல் எல்லா நாடுகளின் அரசுகளும் இதைச் செய்கின்றன. ஒருபுறம் வேறு நாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒற்றறியப்படுகின்றன. மறுபுறம் சொந்த நாட்டில் அரசியல் தலைவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், மக்களுக்காகப் போராடுகிறவர்கள், செய்தி சொல்லும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்படுகிறார்கள்.
சிக்காத மாயாவி
தொழில்நுட்பம் வளர வளர இந்தக் கண்காணிப்பும் நவீனமாகிறது. கண்காணிக்கிற கருவிகள் மாறுகின்றன, ஆனால், தனி மனிதரை வேவு பார்க்கிற புத்தி மட்டும் மாறாமல் தொடர்கிறது. அந்தத் தொடர்ச்சியின் இப்போதைய இணைப்புதான் 'பெகாசஸ்'. அதுவொரு மென்பொருள் - அது செய்வதோ வன்மம் மிக்க செயல். உங்கள் கைப்பேசிக்குள் ஒரு கிருமியைப் போல உங்களின் அனுமதி இல்லாமலே நுழைந்துகொள்ளும். முன்னறிமுகமற்ற ஒரு மின்னஞ்சலைத் திறந்து பார்த்தால் போதும், வாட்ஸ்அப் வழியாக வரும் முன்பின் தெரியாத எண்ணின் அழைப்பை ஏற்றால் போதும் அந்தக் கிருமியார் குடியேறிவிடுவார்.
நவீன தடயவியல் சோதனைகளால் கூட கண்டறிந்து அகற்ற முடியாத அளவுக்கு மிக நுட்பமாக இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் கனடா நாட்டு டொரோன்டோ பல்கலைக் கழகத்தின் 'சிட்டிசன் லேப்' ஆராய்ச்சியாளர்கள். அதனால்தான் அந்த மென்பொருளுக்குக் கோடிக்கணக்கில் விலை போலும்!

முன்பு இவ்வாறு குறிவைக்கப்படுகிறவர்களுடைய தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டன. இன்றைய கைப்பேசிகள் வெறும் பேச்சோடு நில்லாமல் எழுத்தாகவும் படமாகவும் கணினிக் குறியீடுகளில் தகவல்களை அனுப்புகின்றன, பெறுகின்றன. இந்த பெகாசஸ் உங்களின் அந்தப் பேச்சுகளை, எழுத்துகளை, படங்களை படியெடுத்து, தன்னை ஏவிவிட்டவர்களின் கணினிக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
இணையத் தொடர்பு நுட்பம் இதற்கான வழித்தடமாகப் பயன்படுத்தப்படும். மேற்படி மென்பொருளை விலை கொடுத்து வாங்கி நிறுவிக்கொள்கிற ஒரு தனி மனிதரோ, நிறுவனமோ, அமைப்போ, அரசாங்கத் துறையோ இப்படிக் கிடைக்கிற தகவல்களைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இஸ்ரேல் நாட்டின் 'என்எஸ்ஓ குரூப்' என்ற நிறுவனம் பெகாசஸ் கிருமிக்கான மென்பொருளை உருவாக்கித் தயாரித்து, பல கோடிக்கணக்கில் விலை வைத்து விற்பனை செய்கிறது.
வளையத்தில் 50,000 பேர்!
2016ம் ஆண்டிலேயே, பெகாசஸ் மூலமாக உலக அளவில் உளவு பார்க்கும் வேலை நடக்கிறது, அரசியல் தலைவர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. 2019ல் பரபரப்பான கைப்பேசி உளவுச் செய்திகள் வந்தன. இப்போது உலகெங்கும் ஆட்சியாளர்களை தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 50,000 பேர் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்காவின் 'தி வாஷிங்டன் போஸ்ட்', 'தி கார்டியன்' ஆகிய பத்திரிகைகளில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இந்தியாவிலும் முன்னாள் அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என 300 பேர் வரையில் இவ்வாறு ஒற்றறியப்படுகிறார்கள் என்றும் அந்த ஏடுகள் தெரிவித்தன. இந்தியாவில் அரசாங்கத்தை விமர்சித்து எழுதும் 40 பத்திரிகையாளர்கள் அவர்களது கைப்பேசிகளின் மூலமாகவே கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் அந்தக் கட்டுரைகள் தெரிவித்தன.
இயல்பாக இந்தச் செய்தி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் கிஷோர் பிரசாந்த் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன. எந்தெந்தப் பத்திரிகையாளர்கள் என்ற பட்டியலே வெளியாகியிருக்கிறது. ஏன், அப்படியெல்லாம் கண்காணிப்பு எதுவும் செய்யப்படவில்லை, இந்தியச் சட்டங்களில் அதற்கு இடமில்லை என்று விளக்கமளித்துள்ள ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கைப்பேசித் தகவல்கள் கூட உளவு பார்க்கப்பட்டதாக புதிய செய்தி வருகிறது.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களும், ஆளுங்கட்சியை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களும் இலக்கு வைக்கப்பட்டிருப்பது உண்மையானால், இதை அரசியல் பழிவாங்கல் நோக்கத்தோடு ஆட்சியாளர்கள்தான் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விமர்சனங்கள் பாய்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகிறது காங்கிரஸ் கட்சி. பிரதமரும் உள்துறை அமைச்சரும் சரியான விளக்கமளிக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறது சிவ சேனா. இந்த அரசாங்கம் சொந்தக் குடிமக்களையே வேவு பார்க்க என்எஸ்ஓ-வைப் பயன்படுத்தியிருப்பது தெளிவாகிறது. அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம், அதற்கான விதிமுறைகள், கொடுக்கப்பட்ட பணம் ஆகியவற்றை அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இதர அலுவல்களை நிறுத்திவைத்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மனுக் கொடுத்திருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மக்களவை மாநிலங்களவை இரண்டிலும் இந்தப் பிரச்சினையை எழுப்ப முடிவு செய்திருக்கிறது திமுக.. நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வலியுறுத்தியிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
வேறு யார்?
சரமாரி குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அமித் ஷா, இந்தியாவைக் களங்கப்படுத்தும் நோக்கத்தோடு இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். குறைந்தது பத்து நாடுகளின் அரசுகள் பெகாசஸ் உளவு வேலை செய்திருக்கின்றன என்று அந்தச் செய்திகள் தெரிவிக்கிற நிலையில் இந்தியாவை மட்டும் களங்கப்படுத்துகிற முயற்சியாக இதைச் சித்தரிப்பது, பிரச்சினையைத் திசை திருப்புவதாகாதா என்ற கேள்வி தொடர்கிறது. இதை பாஜக செய்யவில்லை என்றால் வேறு யார் செய்தது என்று கேட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர்.
உண்மையிலேயே அரசுக்கும் இதற்கும் அல்லது ஒன்றிய ஆளுங்கட்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்றால், வேறு யாரோ செய்கிறார்கள் என்றால், அது கடுமையான குற்றம். உண்மையிலேயே நாட்டின் உயர்தன்னாளுமைக்கு எதிரான குற்றம். அப்படியானால் அதைச் செய்வது யார் என்று கண்டுபிடித்து, சட்டத்தின் முன்பாகவும் மக்கள் முன்பாகவும் நிறுத்துகிற கடமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறது. அப்படியான வாக்குறுதி ஒன்றை ஒன்றிய அரசு வழங்குமானால் இந்தப் பிரச்சினைக்கு ஒரு அரைப்புள்ளி வைக்கப்படலாம்.
பெகாசஸ் தயாரிப்பாளர்களான என்எஸ்ஓ நிறுவனமோ, "இதை நாங்கள் நாடுகளின் அரசாங்கங்களுக்குத்தான் விற்கிறோம், அதுவும் சட்டப்பூர்வ காரணங்களுக்காகப் பயன்படுத்துவதற்காக மட்டுமே கொடுக்கிறோம்," என்று கூறுகிறது. பயங்கரவாத அமைப்புகள் உள்பட வேறு நிறுவனங்கள் இதை வாங்கியிருக்க மாட்டார்களா, தங்களின் நோக்கத்திற்குப் பயன்படுத்த மாட்டார்களா? இந்தக் கேள்விகள் புறப்படுகிறபோது, அந்த நிறுவனத்தின் நிர்வாகம், பயங்கரவாத அமைப்புகளைக் கண்காணித்து தாக்குதல்களைத் தடுக்கவே இந்த மென்பொருள் பயன்படும் என்கிறது. சட்டப்பூர்வ காரணங்களுக்குப் பயன்படுத்தத்தான் அரசுகளுக்குக் கொடுக்கப்படுகிறது என்றால், யாருடைய சட்டப்பூர்வ காரணங்கள்? என்எஸ்ஓ-வின் சட்டமா அல்லது அந்தந்த நாடுகளின் சட்டமா? அரசுகள் தங்களுக்கு ஏற்ற வகையில்தானே சட்டங்களை வைத்திருக்கும்?
அடுத்தடுத்த நிகழ்வுகள் என்ன செய்திகளைத் தரப்போகின்றன என்று பார்ப்போம். இதற்கிடையே, உங்கள் கைப்பேசிக்குள் பெசாசஸ் புகுந்திருந்தால் அதை வெளியேற்றுவது எப்படி? அவ்வளவு எளிதல்ல. கைப்பேசியை அதன் தயாரிப்பு நிறுவனமே நடத்துகிற சேவை மையத்தில் கொடுத்து, அதன் பழைய மென்பொருள்களை நீக்கிவிட்டு முற்றிலுமாகப் புதுப்பித்துக்கொண்டாலும் கூட, இது மட்டும் துடைக்கப்படாமல் ஒட்டிக்கொண்டிருக்குமாம். கையிலிருக்கும் கருவியைக் கழற்றிவிட்டு புதிதாக ஒன்றை வாங்கிக்கொண்டு, ஏற்கெனவே இருக்கிற செயலிகளுக்கான கடவுச் சொற்களை மாற்றிக்கொள்வதுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி என்கிறார்கள் வல்லுநர்கள்.
தனி மனிதர்களின் அந்தரங்க உரிமைகளில் அப்பட்டமாகத் தலையிடுகிற இந்த மென்பொருளின் வலையில் மாட்டிக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் தப்பித்துக்கொள்வதற்கு வேறொரு வழியும் இருக்கிறது. அரசியல் தலைவர்கள், மனித உரிமைப் போராளிகள், இயற்கைப் பாதுகாப்புக்காக வாதாடுவோர், உண்மைகளைத் துணிவோடு மக்கள் முன் கொண்டுவருகிற ஊடகவியிலாளர்கள் .... இவர்களும் இத்தகையவர்களும்தான் குறிவைக்கப்படுகிறார்கள். ஆகவே, இந்த வம்பே வேண்டாம், யார் எப்படிப் போனால் என்ன என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், பொது வாழ்வில் ஈடுபடாமல் இருந்துவிடலாம். இந்த பெகாசஸ் அல்லது இது போன்ற வேறு மென்பொருள் கிருமிகள் சீண்டாது என்று பகடியாகச் சொல்கிறார்கள் சில சிந்தனையாளர்கள். ஆனால் மனசாட்சியும் மானுட மேன்மைகளில் அக்கறையும் இருப்பவர்களால் அப்படி இருந்துவிட முடியாதே?
ஒன்று நிச்சயம். சர்ச்சைக்குள்ளாகியிருக்கிற என்எஸ்ஓ நிறுவனம் தனது தொழிலை "சைபர் செக்யூரிட்டி" என்று சொல்லிக்கொள்கிறது. செய்திகளைப் பார்த்தால் நமது செக்யூரிட்டி சைபராக இருக்கிறது என்று புரிகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications