95% AI முதலீடுகளில் ஒரு பைசா கூட லாபம் இல்லை.. வெளியான ஷாக் ஆய்வு.. உண்மையில் என்ன காரணம்?
சென்னை: இந்தக் காலத்தில் ஏஐ மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ முதலீடுகள் கணிசமாக அதிகரித்தே வருகிறது. அதேநேரம் ஏஐ நிறுவனங்களில் சுமார் 95% முதலீடுகளுக்கு எந்தவொரு லாபமும் கிடைப்பதில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், இதற்கான காரணம் குறித்தும் ஆய்வாளர்கள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
இப்போது ஏஐ துறை தான் மிக பெரியளவில் வளர்ந்து வருகிறது. குறுகிய காலத்தில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத வேகத்தில் ஏஐ டூல்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ குறித்தே பேச்சுகள் இருக்கிறது. இதனால் இந்த ஏஐ குறித்த ஆய்வுகளுக்காகப் பல்வேறு நிறுவனங்களும் மிகப் பெரியளவில் முதலீடுகளைச் செய்து வருகின்றன.

ஏஐ ஆய்வுகள் தோல்வி
இப்படி பல நிறுவனங்களும் ஜெனரேட்டிவ் AI (GenAI) தொழில்நுட்பத்தில் சுமார் $30-40 பில்லியன் வரை முதலீடு செய்துள்ளதாம். இருப்பினும், அதில் 95% நிறுவனங்களுக்கு இதனால் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
எம்ஐடி எனப்படும் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நடத்திய இந்த ஆய்வில், சுமார் 300 ஏஐ டூல்கள் குறித்து ஆய்வுகளை நடத்தியுள்ளனர். மேலும், இது தொடர்பாகச் சுமார் 350 ஊழியர்களுடன் கலந்துரையாடினர். அதில் தான் ஏஐ மூலம் பெரும்பாலான நிறுவனங்களுக்கு லாபம் எதுவும் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
காரணம் என்ன
இவ்வளவு பெரிய முதலீடுகள் தோல்வியடைய learning gap எனப்படும் "கற்றல் இடைவெளி" இருப்பதே முக்கிய காரணம் என்கிறார்கள். அந்த ஆய்வில் மேலும், "ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் உள்ள முக்கியத் தடை உட்கட்டமைப்போ அல்லது ஒழுங்குமுறை விதிகளோ இல்லை. அது கற்றல் தான். பெரும்பாலான ஏஐ டூல்களை ஏற்கனவே இருக்கும் பிஸ்னஸ்களில் சரியாகப் பொருந்திப் போவது போலத் தகவமைக்க முடியவில்லை. அதுவே பிரதானச் சிக்கலுக்குக் காரணமாக இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5% மட்டுமே வெற்றி
"தி GenAI டிவைட்: ஸ்டேட் ஆஃப் AI இன் பிசினஸ் 2025" என்ற தலைப்பில் எம்ஐடி வெளியிட்ட இந்த அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது. அதில் AI திட்டங்களில் வெறும் 5% திட்டங்கள் மட்டுமே பல மில்லியன் டாலர் வேல்யூ பெற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பெரும்பாலான நிறுவனங்கள் எந்தவொரு வேல்யூவும் இல்லாமலேயே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
எம்ஐடி ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் சுமார் 80%க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சாட் ஜிபிடி, கோ பைலட் போன்ற கருவிகளைச் சோதனை செய்து பார்த்துள்ளன. அதில் சுமார் 40% நிறுவனங்கள் இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதாகவும் கூட அறிவித்துள்ளன. இந்த AI டூல்கள் தனிப்பட்ட அளவில் உற்பத்தித் திறனை மேம்படுத்துகின்றனவே தவிர, இதனால் ஒட்டுமொத்தமாக நிறுவனத்திற்குப் பெரியளவில் லாபம் எதுவும் கிடைப்பதில்லையாம். நமது தினசரி வேலைகளுக்கு ஒத்துப்போகாதது, ஒர்க்ப்ளோ உள்ளிட்டவையே இந்தத் திட்டங்கள் தோல்வியடையப் பிரதானக் காரணமாக இருக்கிறது.
ஆப்பிள் சொல்வது என்ன
முன்னதாக ஆப்பிள் நிறுவனமும் கூட ஏஐ தொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியிருந்தது. அதில் பெரும்பாலான ஏஐ டூல்கள் விளம்பரப்படுத்தப்படும் அளவுக்கு வலிமையானதாக இருப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேட்கப்படும் கேள்விகள் ஒரு பேட்டர்னுக்குள் இருந்தால் அவை சரியாகச் செயல்படுகிறதாம். ஆனால், பேட்டர்னுக்கு வெளியே அல்லது சற்று கடினமான கேள்விகள் கேட்கப்பட்டால் பல ஏஐ டூல்கள் சொதப்பிவிடுவதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications