தீயசக்தினு சொல்லிட்டு அடுத்தநாளே ஏன் சந்திச்சீங்க.. தவெக திமுக ரகசிய உறவு.. திருமாவளவன் பகீர்
காஞ்சிபுரம்: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. தவெக, திமுக கூட்டணி விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மாறுபட்ட கருத்துகளை கூறி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதில் கடுப்பான திருமாவளவன், தீயசக்தி என்று விமர்சனம் செய்தவரை அடுத்த நாளே சென்று பார்த்தார்களே. ஜெயித்தவர்களும், தோற்றவர்களும் அடுத்த நாளே சந்தித்தார்களே அதை ஏன் கேட்கவில்லை என்று தவெக, திமுக இருவரையும் சீண்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விசிக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், "அது எப்படி இங்கே போய்விட்டால் அங்கே உறவு வைக்க முடியும் என்று கேட்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரும் உறவு வைச்சுக்கறாங்களே அது எப்படி. ஜெயிச்சவங்களும், தோத்தவங்களும் அடுத்த நாளே சந்திச்சுக்கறாங்களே அதை ஏன் யாரும் கேள்வி கேட்கலை. தீயசக்தி என்று கூறினார். அப்படி சொன்னவரே ஏன் தீயசக்தியை பார்க்கலாம் என்று யாராவது விவாதம் நடத்தினார்களா.

திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க
பாஜகவை எதிர்ப்பதற்காக தவெக, திமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் கூறினேன். உடனே திருமாவளவனுக்கு என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள். இந்த அரசியலை புரிந்து கொள்வதற்கு எல்லாம் அவர்களுக்கு மூளை இல்லை. இந்த அரசியலை புரிந்து கொள்ளும் மூளை எவனுக்கும் இல்லை. இதை புரிந்து கொள்ளும் வலிமை அவர்களிடம் இல்லை. அம்பலப்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் வலிமை பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
திமுக கூட்டணி தோற்றது பெரிய கவலை. அதைவிட நம் கண் முன்னே அதிமுகவை இப்படி சிதறடிக்கிறார்களே என்று கவலை உள்ளது. திமுக மறுபடியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் சூழல் உள்ளதா என்கிற கவலை உள்ளது. இந்த கவலை எனக்கு ஏன் என்று கேட்கலாம். இது மரபு வழி அணுகுமுறை. திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பெரியார் காலத்தில் இருந்து தொடர்ச்சியான முயற்சிகள் செய்யப்படுகிறது.
விசிக தலைமையை சிதைக்க
கலைஞர் குடும்பம் என்பதால் மட்டும் திமுக ஒழிய வேண்டும் என்று நினைக்கவில்லை. திமுக பேசும் அரசியல் விழிம்பு நிலை மக்களுக்காக, சனாதன எதிர்ப்பு அரசியலாக உள்ளது. அதுதான் பலருக்கு பிரச்சனை. உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் போட்டியிடும், வெற்றி பெறும் எண்ணிக்கை பற்றி பிரச்சனை இல்லை. கருத்தியல் புரிதலுடன் களத்தில் உள்ள நம்மை பலவீனப்படுத்த வேண்டும், தலைமையை சிதைக்க வேண்டும் என்கிற காழ்புணர்வுடன் பலர் இயங்குகிறார்கள்.
அவர்கள் அவதூறுகளை பரப்புகிறார்கள். சனாதன எதிர்ப்பை பேசிவிட்டு இவர் ஏன் கும்பாபிஷேகம் நடத்துகிறார் என கேட்கிறார். கும்பாபிஷேகத்தை என் அம்மா, அப்பா, தம்பி நடத்துகிறான். அதற்காக செல்கிறேன். என்னை கூப்பிட உனக்கு அறிவு இல்லை. என் சொந்த பந்தம் கூப்பிடுகிறது. அவர்களின் உணர்வுகளை மதித்து செல்கிறேன். அங்கு போய் நான் சாமி கும்பிடவில்லை. அவனுக்கு இதை புரிந்து கொள்ள முடியாது. அவன் தான் திருமாவளவன் தடுமாறுகிறார், மாற்றி பேசுகிறார் என்பார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications