மனிதர்கள் சொல்வதை கேட்பதில்லை.. பொய் சொல்லி, மிரட்டவும் ஆரம்பித்த AI மாடல்கள்! ஆய்வில் அதிர்ச்சி
வாஷிங்டன்: புதிய மற்றும் வலிமையான ஏஐ மாடல்களை உருவாக்க உலக நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது. அதேநேரம் ஏஐ பல்வேறு ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ மாடல்கள் பொய் சொல்வது, பிளாக்மெயில் செய்வது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தக் காலத்தில் டெக் நிறுவனங்களிடையே ஏஐ ரேஸ் தான் நடந்து வருகிறது. வலிமையான ஏஐ உருவாக்கப் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு வருகிறது. ஏஐ காரணமாக நமது லைஃப் ஸ்டைல் மாறி வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ நமக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

ஏஐ மாடல்கள்
அதேநேரம் ஏஐ ஆபத்துகளும் இருக்கவே செய்கிறது. வேலையிழப்புகள் ஒரு பக்கம் என்றால் ஏஐ மனிதர்களை மிஞ்சலாம் என்றும் இதனால் மனிதக் குலத்திற்கே ஆபத்து ஏற்படலாம் எனப் பல்வேறு ஆய்வாளர்களும் எச்சரித்தே வருகிறார்கள். அப்படித் தான் இப்போது நடத்தப்பட்ட ஏஐ குறித்த புதிய ஆய்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
அதாவது உலகின் சில அதிநவீனச் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் நிஜமாகவே கவலை தரும் வகையில் நடந்து கொள்கின்றன. அதாவது இந்த ஏஐ மாடல்கள் பொய் சொல்லுதல், சதி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறதாம்.. அவ்வளவு ஏன் தங்கள் டார்கெட்டை அடைய தன்னை உருவாக்கியவர்களையே கூட மிரட்ட ஆரம்பித்துவிட்டதாம்.
மிரட்டல்
குறிப்பாக அன்த்ரோபிக் நிறுவனத்தின் சமீபத்திய ஏஐ மாடலான கிளாட் 4 இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறது. அந்தப் பொறியாளர் கிளாட் 4 மாடலை ஆஃப் செய்வதாகக் கூறியிருக்கிறார். அதில் இருந்து தப்பிக்க கிளாட் 4 அந்தப் பொறியாளரை பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்துவிட்டது. அதாவது அந்த நபர் கள்ள உறவு வைத்திருப்பதைச் சொல்லிவிடுவதாக மிரட்டியிருக்கிறது. இதைக் கேட்டவுடன் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பொய்கள்
அதேபோல சாட்ஜிபிடி உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம் ஓ1 என்ற ஏஐ மாடலை உருவாக்கியிருக்கிறது. அந்த மாடல் வெளியே வேறு ஒரு சர்வர் மூலம் தன்னை தானே டவுன்லோடு செய்ய முயன்றுள்ளது. இதை நோட் செய்த பொறியாளர் இது குறித்துக் கேட்டிருக்கிறார். ஆனால், கையும் களவுமாகப் பிடிபட்டபோது அப்படி எதுவும் செய்யவில்லை எனக் கூறி மறுத்திருக்கிறது. இதுபோல பொய் சொல்வது, மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஏஐ ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் நம்மால் ஏஐ குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏஐ எப்படிச் செயல்படுகிறது.. ஒரு வேளை அது மனிதர்களைத் தாண்டிச் செயல்பட ஆரம்பிக்குமா என்பதில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. இதை புரிந்து கொள்ளவே ஒரு பக்கம் இதுபோன்ற டெஸ்ட்கள் நடந்து வருகிறது. ஏஐ கையை மீறிப் போகலாம் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
ஏஐ ஆபத்து
இந்த ஏஐ மாடல்கள் சும்மா சாதாரண சாட்டிங்கில் இதுபோல பேசுவது இல்லை. வேண்டுமென்றே தீவிரமான சூழ்நிலைகளைக் கொண்டு மாடல்களுக்கு அழுத்தம் கொடுக்கும்போது மட்டுமே இதுபோல பேசுகிறதாம். மற்ற நேரங்களில் இயல்பாகவே இருக்கிறது. ஆனாலும், ஏஐ என்பது மனிதர்களை பொய் சொல்லி மிரட்டி, ஏமாற்ற ஆரம்பித்தால் அது பெரிய சிக்கலில் முடியும். எதிர்காலத்தில் அதிக திறன் கொண்ட ஏஐ மாடல்கள் நேர்மையாக இருக்குமா அல்லது ஏமாற்று வேலை செய்யுமா என்ற கேள்வியையே இந்த முடிவுகள் எழுப்புகிறது.












Click it and Unblock the Notifications