AI தயாரித்து கொடுத்த ரிப்போர்ட்டில் ஏகப்பட்ட பிழைகள்.. வம்பில் மாட்டிய பிரபல நிறுவனம்! என்ன நடந்தது?
கான்பரா: பிரபலத் தனியார் நிறுவனம் ஒன்று ஆஸ்திரேலிய அரசுக்கு முக்கியமான ஒரு ரிப்போர்ட்டை சமர்ப்பித்திருந்தது. இருப்பினும், அந்த நிறுவனம் ஏஐ டூல்களை பயன்படுத்தி ரிப்போட்டை தயாரித்துள்ளது. இதனால் அதில் ஏகப்பட்ட பிழைகள் இருந்துள்ளன. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், அந்த நிறுவனம் அரசு தனக்குக் கொடுத்த கட்டணத்தில் ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.
நம்மில் பலரும் இப்போது ஏஐ டூல்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். நமது வேலைகளை எளிமைப்படுத்திக் கொடுப்பதாலும் ஈஸியாக வேலைகளைச் செய்து முடிப்பதாலும் பலரும் ஏஐ டூல்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதேநேரம் ஏஐ டூல்களில் பல்வேறு சிக்கல்களும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக ஏஐ டூல்கள் சில நேரம் பொய்யான தகவல்களைக் கொடுக்கலாம் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.

பிரபல நிறுவனத்திற்குச் சிக்கல்
இப்போது அதுபோல பொய்யான தகவலை ஏஐ கொடுத்ததில் வம்பில் மாட்டியிருக்கிறது பிரபல நிறுவனம். அதாவது சர்வதேச அளவில் முன்னணி ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது டெலாய்ட். கடந்த 2024ல் இந்த டெலாய்ட் நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு ஒரு ஒப்பந்தம் போட்டது. ஐடி துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஒரு ரிப்போர்ட்டை கேட்டிருந்தது.
பரஸ்பர கடமைகளைப் பூர்த்தி செய்யாத நபர்களுக்குத் தானாக அபராதம் விதிக்கும் கட்டமைப்பை மறு ஆய்வு செய்ய டெலாய்ட்டை ஆஸ்திரேலிய அரசு நியமித்தது. கடந்த ஜூலை மாதம் "ஃபியூச்சர் மேட் இன் ஆஸ்திரேலியா" என்ற தலைப்பில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், இதில் ஏஐ பயன்படுத்தப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் ஜெனரேட்டிவ் AI கருவிகளைப் பயன்படுத்தியதை டெலாய்ட் ஒப்புக்கொண்டது. மேலும், அரசு தனக்கு வழங்கிய கட்டணத்தில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது.
ஏகப்பட்ட பிழைகள்
ஏனென்றால் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் பல பிழைகள் இருந்ததுள்ளது. இல்லாத நபர்களைக் குறிப்பிடும் மேற்கோள்கள் காட்டப்பட்டிருந்தது. மேலும், பெடரல் நீதிமன்றத் தீர்ப்பு எனச் சொல்லி இல்லாத தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. இது சர்ச்சையாக வெடித்த பிறகே டெலாய்ட் அந்த விளக்கத்தைக் கொடுத்திருந்தது.
இதையடுத்து பழைய ரிப்போர்ட் நீக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை புதிய ரிப்போர்ட் வெளியிட்டது. திருத்தப்பட்ட ரிப்போர்ட்டில் பல குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் நீக்கப்பட்டன.. மேலும் பல எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டன.
காரணம் என்ன!
ரிப்போர்ட்டில் இருந்த பிழைகளை முதலில் கண்டறிந்த ஆஸ்திரேலியச் சமூக நல அறிஞர் டாக்டர் கிறிஸ்டோபர் ரட்ஜ் இது குறித்துக் கூறுகையில், "இந்த அறிக்கையில் பல பொய்யான தகவல்கள் இருந்தது. AI hallucinations (ஏஐ பொய்யான தகவல்களைக் கொடுப்பது) தான் இதற்குக் காரணம்.. பழைய பதிப்பில் இருந்து பல பாராக்களை நீக்கிவிட்டு, இப்போது புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.
சமாளிப்பு
தனது ரிப்போர்ட்டில் AI பயன்படுத்தப்பட்டது உண்மை தான் என்பதை டெலாய்ட் ஒப்புக்கொண்டாலும், ஆரம்பக் கட்ட ஆய்வுகளில் மட்டுமே அது பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது. இறுதி ரிப்போர்ட் மிக விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், ஏஐ பயன்பாடு ரிப்போர்ட்டில் எதிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை கூறியுள்ளது.. அதேநேரம் அறிக்கையில் பிழைகள் இருந்ததற்கு என்ன காரணம் என்பதை அந்த நிறுவனம் விளக்கவில்லை
ஏஐ டூல்கள் நமக்குப் பெரியளவில் உதவுகிறது என்ற போதிலும் அதை முழுமையாக நம்ப முடியாது. இன்னுமே பல தவறான மற்றும் பொய்யான தகவல்களை ஏஐ டூல்கள் கொடுக்கிறது. எனவே, அதை செக் செய்யாமல் அப்படியே பயன்படுத்தினால் அது எவ்வளவு பெரிய சிக்கலைக் கொடுக்கும் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications