சோஷியல் மீடியாவால் மனிதர்கள் மட்டுமில்லை.. AI மூளையும் கூட மழுங்கி போகுதாம்.! ஷாக் ஆய்வு
சியாட்டில்: இந்தக் காலத்தில் ஏஐ தொடர்பான ஆய்வுகளே உலகெங்கும் நடந்து வருகிறது. அப்படி அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சோஷியல் மீடியாக்களால் ஏஐ எந்தளவுக்குப் பாதிக்கப்படலாம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சோஷியல் மீடியாக்கள் மனிதர்களுக்கு மட்டுமின்றி.. ஏஐ டூல்களுக்கும் எந்தளவுக்கு ஆபத்தைத் தருகிறது என்பதையே இது தெளிவாக விளக்குகிறது.
ஏஐ தொடர்பான ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளில் ஏஐ பயன்பாடுகளும் அதிகரிக்கிறது. இருப்பினும், ஏஐ டூல்களில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வுகளையும் நடத்தி வருகிறார்கள்.

விரிவான ஆய்வு
அப்படித் தான் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகம் மற்றும் பர்டியூ பல்கலைக்கழகம் இணைந்து ஏஐ தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதில் சமூக வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் டேட்டாவை கொண்டு பயிற்சி பெறும் ஏஐ டூல்களின் அறிவு குறைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியளவில் முக்கிய தகவல்கள் இல்லாத.. தரமான கண்டெண்டுகளை கொண்டிருக்காத டேட்டாவை வைத்து மீண்டும் மீண்டும் பயிற்சி அளிக்கும்போது அதன் பகுத்தறியும் திறன், நினைவாற்றல் ஆகியவை பலவீனமடைவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏஐ டூல்களின் புத்திசாலித்தனத்தைக் குறைக்கிறது. விரிவான ஆய்வின் மூலம் இதை உறுதி செய்துள்ளனர்.
தரமற்ற தகவல்
இதற்காகப் பிரத்தியேகமான டேட்டாகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இருக்கும் முக்கியம் இல்லாத வேஸ்ட்டான தகவல்களைக் கொண்டு டேட்டாவை உருவாக்கியுள்ளனர். லைக், ஷேர்கள் அதிகம் பெற்ற முக்கியத்துவம் இல்லாதவற்றை எடுத்துள்ளனர். அதேபோல சதி கோட்பாடுகள், மிகைப்படுத்தப்பட்ட கருத்துகள், எந்தவொரு ஆதாரமும் இல்லாத விஷயங்கள் எனச் சமூக வலைத்தளங்களில் பொதுவாக எவை எல்லாம் டிரெண்ட் ஆகுமோ அதை வைத்து டேட்டாவை உருவாக்கியுள்ளனர்.
பிறகு இந்த டேட்டாவை வைத்து ஏஐ டூல்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். அதன் பிறகு ஏஐ டூல்களிடம் சில கேள்விகளைக் கேட்டபோதுதான் ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது இந்த டேட்டா ஏஐ டூல்களின் சிந்திக்கும் திறனைக் குறைத்துள்ளது. இதனை ஏஐ டூல்களின் மூளை மழுங்கும் நிலைமை என குறிப்பிடுகிறார்கள்.
தரமற்ற டேட்டாவை கொடுக்காதபோது கவனச்சிதறல் ஏற்படுகிறதாம். இதன் தாக்கம் மனிதர்களைப் போன்றே உள்ளது. ஏஐ சிந்திக்கும் திறன் குறைகிறது, ஒருங்கிணைப்புத்தன்மை குறைந்து கொண்டே செல்கிறது. இவை ஏஐ பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
ஏஐ திறன் பாதிப்பு
இதுபோன்ற தரமற்ற டேட்டாவால் பகுத்தறியும் திறன் 23% குறைந்திருக்கிறது.. நீண்டகால நினைவாற்றல் 30% குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இது ஏதோ அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக ஏற்பட்ட பிரச்சினை இல்லை.. பயிற்சி டேட்டாவில் டிரெண்டிங் டாபிக்குகளை சேர்ப்பது, சரியான டாபிக்குகளை தவிர்ப்பது போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. இதை "சிந்தனைத் தவிர்ப்பு" (thought skipping) என்று குறிப்பிடலாம்" என்றார்.
சரி செய்ய முடியாது
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் பெர்சனாலிட்டி டெஸ்களில் தான்! அதில் ஏஐ டூல்கள் தற்பெருமை பேசுவது அதிகரித்திருந்தது. மேலும், மனநலம் போன்ற குறைபாடுகளையும் பார்க்க முடிந்தது. இது ஏஐ டூல்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. நீண்ட பதில்களைக் கொடுக்க மறுப்பது, லாஜிக் பிழைகள் என பல சிக்கல்கள் இருந்துள்ளன.
இன்னொரு சிக்கல் என்னவென்றால் ஒரு முறை இதுபோல குப்பை தரவுகளை வைத்து பயிற்சி கொடுத்துவிட்டால் அதை சரி செய்வது கடினமாம்.. அதன் பிறகு நல்ல டேட்டாவை கொண்டு பயிற்சி கொடுத்தாலும் கூட பகுத்தறியும் செயல்திறன் ஓரளவு மட்டுமே மேம்படுகிறதே தவிர முழுமையாக அதைச் சரி செய்ய முடிவதில்லையாம்!












Click it and Unblock the Notifications