சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை.. மாற்றத்தை நோக்கி நகரும் நகரம்! மக்கள் அச்சம்!
சென்னை: இன்று சென்னை மீனம்பாக்கத்தில் வெயில் 40.1 டிகிரியாக பதிவாகியிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஜூலை மாதத்தில் வெயில் 40 டிகிரியை தாண்டியது இதுதான் முதல் முறை என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல கடந்த 100 ஆண்டுகளில்.. ஜூலை மாதம் 3வது வாரத்தில் சென்னையில் இவ்வளவு வெயில் பதிவானது இல்லை என்றும் கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெயில் இப்படி வாட்டி வதைப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் கொளுத்தும் வெயில்
கடந்த 100 ஆண்டுகளாக சென்னை வானிலையில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், இந்த ஆண்டு ஜூலை 3வது வாரத்தில் சென்னையில் 40.1 டிகிரி வெயில் பதிவாகியிருக்கிறது. இதற்கு முன்னர் ஜூலை 3வது வாரத்தில் இவ்வளவு வெயில் பதிவானது கிடையாது என்று ஆய்வாளர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். சென்னை மட்டுமல்லாது இன்று தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகியிருக்கிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 41.6 டிகிரி (107 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கு வெயில் பதிவாகியிருக்கிறது. மதுரையிலும் வெயிலின் தாக்கம் 41 டிகிரியாக பதிவாகியிருக்கிறது. திருத்தணியில் 40 டிகிரியும் வெயில் பதிவாகியிருக்கிறது. இப்படியாக தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியிருக்கிறது. தஞ்சாவூர், திருச்சி, பாளையங்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
காலநிலை மாற்றம்
ஏற்கனவே உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் என்கிற பிரச்சனை ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக இந்த ஆண்டு எல் நினோ எனப்படும் வானிலை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. குறிப்பாக கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications