செயற்கை நுண்ணறிவை முழு வேகத்தில் ராணுவத்திற்கு பயன்படுத்தும் வடகொரியா! உஷார் நிலையில் அமெரிக்கா
பியோங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் இராணுவ தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு செயற்கை நுண்ணறிவை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
நேற்று பியோங்யாங்கில் உள்ள ஆளில்லா வானூர்தி தொழில்நுட்ப வளாகத்தில் கிம் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிறிய ட்ரோன்கள் மற்றும் பெரிய ஆளில்லா கண்காணிப்பு விமானங்களின் செயல்திறனின் சோதனைகளை மேற்பார்வையிட்டார். ஆளில்லா ஆயுத அமைப்புகளை மேம்படுத்தவும், ட்ரோன் உற்பத்தியை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவை அதிகம் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

வட கொரியாவின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்க சமீப காலங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு செயற்கை நுண்ணறிவு பெரிய அளவில் உதவும் என்று சொல்லப்படுகிறது. அணு ஆயுத பாலிஸ்டிக் ஏவுகணைகள், வளர்ந்து வரும் அணு ஆயுதக் கிடங்கு மற்றும் புதிய உளவு செயற்கைக்கோள் ஆகியவற்றிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது. கடந்த வாரம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கான புதிய திட எரிபொருள் ராக்கெட் என்ஜின் சோதனையை கிம் மேற்பார்வையிட்டார். இது நாட்டின் அணுசக்தி தாக்குதல் திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று அவர் விவரித்தார்.
சர்வதேச தடைகள் இருந்தபோதிலும், வட கொரியா அமெரிக்கா, சீனா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த கல்வியாளர்களுடன் கூட்டு AI ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. தனது AI மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்கு சீன தொழில்நுட்பத்தையும் நிபுணத்துவத்தையும் வடகொரியா பெரிதும் நம்பியுள்ளது.
செயற்கை நுண்ணறிவை அதிக அளவில் பயன்படுத்தும் கிம்மின் முயற்சி, ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஆழமான இராணுவ மற்றும் அரசியல் உறவுகளுக்கு மத்தியில் அதிகரித்திருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில், அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். இந்த கூட்டணி பொருளாதார ரீதியாக சமநிலையற்றதாக இருந்துள்ளது.
வட கொரியா, ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு ஆதரவாக கிட்டத்தட்ட $10 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கி, பல்லாயிரக்கணக்கான வீரர்களை அனுப்பியுள்ளது. இதற்கு ஈடாக, உணவு, எரிபொருள் மற்றும் குறைந்த அளவிலான இராணுவ வன்பொருள் வடிவில் சுமார் $457 மில்லியன் முதல் $1.19 பில்லியன் மட்டுமே பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எது எப்படி இருப்பினும் வடகொரிய ராணுவம் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதிகரிக்க முயல்வது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. குறிப்பாக தென் கொரியாவும், அமெரிக்காவும் இதனை உன்னிப்பாக கவனிக்கின்றன.












Click it and Unblock the Notifications