சிட்டி ரோபோ மாதிரி AIக்கு உணர்வுகள்? அப்போ மனித குலமே அழியுமே! மைக்ரோசாஃப்ட் ஏஐ தலைவர் நறுக்
சியாட்டில்: ஏஐ தொடர்பான ஆய்வுகள் உலகெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே ஏஐ எந்தளவுக்கு வளர்ச்சி அடைந்தாலும் கூட அது ஒருபோதும் மனிதர்களை மிஞ்ச முடியாது என்று மைக்ரோசாஃப்ட் ஏஐ தலைவர் முஸ்தஃபா சுலைமான் தெரிவித்துள்ளார். மேலும், மனிதர்களுக்கும் ஏஐ டூல்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.
இப்போது செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் படுவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கூகுள், ஓபன் ஏஐ, மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட இந்தத் துறையில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து அதை மேம்படுத்தி வருகின்றன. பல பணிகளில் ஏற்கனவே ஏஐ டூல்களை மனிதர்களை மிஞ்சிவிட்டன..

ஏஐ வளர்ச்சி
இது சீக்கிரமே மனிதர்களின் அறிவாற்றலுக்கு நெருக்கமாக வந்து, "செயற்கை அதி நுண்ணறிவு" (artificial superintelligence) என்ற நிலையை எட்டக்கூடும் பலரும் கருதுகிறார்கள். அதாவது இப்போத ஏஐ பல பணிகளில் மனிதர்களை மிஞ்சினாலும் கூட அது மனிதர்களைப் போல யோசிக்காது. ஆனால், சீக்கிரமே அந்த நிலை மாறும் என்றும் மனிதர்களின் அறிவாற்றலை ஏஐ நெருங்கும் எனச் சிலர் கருதுகிறார்கள்..
இருப்பினும், மைக்ரோசாஃப்ட் ஏஐ தலைவர் முஸ்தஃபா சுலைமான் இதற்கு நேர்மாறான கருத்தைக் கூறியிருக்கிறார். அதாவது ஏஐ டூல்கள் ஒருபோதும் மனிதர்களை விடப் புத்திசாலித்தனமாக இருக்க முடியாது என்று அவர் உறுதியாகக் கூறினார்.. உணர்வு அதாவது consciousness என்பது என்பது உயிருள்ள மனிதர்களுக்கு மட்டுமே எப்போதும் இருக்கும் என்றும் செயற்கை நுண்ணறிவு அதை எப்போதும் பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மனிதர்களுக்கு மட்டுமே
பல்வேறு ஆய்வாளர்களும் ஏஐ கருவிகளுக்கு தாங்கள் உணர்வைக் கொண்டு வர முயல்வதாகக் கூறி வரும் நிலையில், சுலைமான் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார்.. உணர்ச்சிகளையும், துயரத்தையும் அனுபவிக்கும் திறன் உயிரினங்களுக்கு மட்டுமே உண்டு என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஏஐக்கு நாம் உணர்வைக் கொடுக்க தேவையில்லை.. இது அடிப்படையிலேயே தவறான ஒரு விஷயம். நீங்கள் தவறான கேள்வியைக் கேட்டால், தவறான பதில்தான் கிடைக்கும். அப்படித் தான் ஏஐக்கு உணர்வைக் கொடுக்க முடியுமா என்பதே தவறான கேள்வி என்று நான் நினைக்கிறேன்" என அவர் குறிப்பிட்டார்.
தேவையில்லாதது
டெவலப்பர்கள் AI டூல்கள் மனிதர்களுக்கு உதவும் வகையிலான தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதுபோன்ற முயற்சிகள் தேவையில்லாத ஒன்று என்றும் அவர் தெரிவித்தார். ஏஐ டூல்களுக்கு உணர்வு இல்லாத நிலையில், அது தொடர்பான ஆய்வுகளை நடத்துவது அபத்தமானது என்றும் அவற்றுக்கு உணர்வுகள் இருக்கவும் முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
வேறுபாடு இருக்கு
இந்த வேறுபாட்டை மேலும் தெளிவாக விளக்கிய அவர், "AIகளின் திறன்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதன் திறன்களுக்கும் உண்மையான உணர்ச்சிக்கும் (emotions) இடையே ஒரு தெளிவான வேறுபாடு இருக்கிறது. நாம் உடல் ரீதியாக வலியை அனுபவிக்கும்போது அது நம்மை மிகவும் வருத்தப்படவும், மோசமாகவும் உணரச் செய்கிறது.
ஆனால், AI வலியை அனுபவிக்கும்போது வருத்தப்படுவதில்லை. இதுவே அந்த முக்கியமான வேறுபாடு. அது வருத்தப்படுவது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறதே தவிர அது உண்மையில் வலியை அனுபவிப்பதில்லை. ஒரு விஷயத்தைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.. ஏஐ டூல்கள் மனிதர்களுக்குச் சேவை செய்ய உருவாக்கப்படுகிறதே தவிர.. அது consciousness மற்றும் எமோஷன்களுடன் இருக்க அதை யாரும் உருவாக்கவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications