வடகிழக்கு பருவமழை காலத்தில் எத்தனை புயல்கள் தாக்கும்?.. பஞ்சாங்கம் சொல்வதென்ன?
சென்னை: வடகிழக்கு பருவமழை ஜோராக தொடங்கி விட்டது. இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும் புயல் வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுவாக மழை காலத்தில் எத்தனை புயல்கள் வரும் எந்த அளவிற்கு மழை பெய்யும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மூன்று மரக்கால் அளவு அதாவது முக்குறுணி மழை பெய்யும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. நூறு யோஜனை நீளமும், நூறு யோஜனை அகலமும் நூறு யோஜனை ஆழமும் கொண்டதே ஒரு மரக்கால் ஆகும். இது போன்று மழை பொழிந்து இதில் ஐந்தில் ஒரு பங்கு மழை பூமியிலும் பத்தில் மூன்று பங்கு மழை மலைகளிலும் காடுகளிலும் அரை பங்கு மழை சமுத்திரத்திலும் பொழியும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.

சோபகிருது தமிழ் வருட வெண்பாவில்
"சோப கிருதுதன்னிற் றெல்லுலகெல் லாஞ்செழிக்குங்
கோப மகன்று குணம்பெருகுஞ்- சோபனங்கள்
உண்டாகு மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகு மென்றே யுரை". என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சோப கிருது வருடத்தில் மக்கள் எல்லா நலன்களையும் பெறுவர். கோப குணங்கள் குறையும். போட்டி, பொறாமை குணங்கள் இல்லாமல் போகும். நற்பலன்கள் மேலோங்கும். சுப காரியங்கள் நடந்தேறும். உலகின் பழமையான நகரங்கள் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருக்கும். மழை சிறப்பாக பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
எல் நினோ காலமாக இருப்பதால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது குறித்து பார்க்கலாம்.
வடகிழக்கு பருவமழை பொதுவாகவே அடைமழை காலமாகும். அக்டோபரில் வலு குறைவாக இருந்தாலும் நவம்பர், டிசம்பரில் மழை அதிகரிக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பஞ்சாங்கத்திலும் கார்த்திகை 1ஆம் தேதி நவம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில்17 ஆம் தேதி மார்கழி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யும். தை 11ஆம் தேதி 2024ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி மழை பெய்யும். இந்த தேதிகளில் மழை பொழியும் என்றும் அவ்வாறு மழை பெய்தால் நாடு சுபிட்சமாக இருக்கும் என்றும் சித்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு ஐந்து அல்லது ஆறு புயல்கள் வங்காள விரிகுடாவில் உருவாகி தமிழகத்தை கடந்து செல்லும். அதனால் நல்ல மழை நமது தமிழகத்திற்கு உண்டு என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
நான்காமிடம் சுக்கிரன், குரு பார்வை பெற்று நான்காமிடத்திற்குரிய செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இவ்வருடம் தொழில் விருத்தி நன்றாக இருக்கும். வெண்பட்டு ஜவுளி, தங்கம், கட்டுமானப்பொருட்கள், தொழில் நன்கு விருத்தியடையும். நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும். சென்ற வருடத்தை விட இவ்வருடம் விவசாயிகள் நல்ல லாபத்தை அடைவார்கள்.
மண் சரிவு, பனி மலைகளில் பனி சரிவு ஏற்படும். கடல் மட்டம் உயர்ந்து நீரால் பல இந்திய பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடல் அருகில் இருக்கும் நாடுகள் பாதிக்கும். பொதுவாக இந்த ஆண்டு நல்ல மழை பொழியும். தொழில் விருத்தி அடையும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் உண்டு.
என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ் பஞ்சாங்கத்தில் கணித்திருந்தது போலவே தமிழ்நாட்டில் பெருமழை, வெள்ளம், புயல் பாதிப்பு ஏற்பட்டது. நடப்பாண்டு பஞ்சாங்கத்திலும் மழை, புயல்கள் பற்றி கணித்து குறிப்பிடப்பட்டுள்ளது. கிரகங்களின் சேர்க்கை, பார்வை, நவகிரகங்களின் பயணத்தை வைத்துதான் பஞ்சாங்கத்தில் மழையை முன்னோர்கள் கணித்து கூறி அதற்கேற்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications