ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ராகு கேதுவின் இடமாற்றம்..இந்த 4 ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம்
கேது பகவானின் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் ராகுவினால் மேஷம்,ரிஷபம்,மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னமாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மதுரை: வேத ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், ராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும்பாம்பு என அழைக்கப்படும். ராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவர். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை தாக்கம் அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் தாக்கம் ஏற்படும். ராகு பகவான் மேஷ ராசியில் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் நேரத்தில் சில ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான இராகு - கேதுவுக்கு என தனியாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டு அதிபதியின் குணத்தை கிரகித்துக் கொள்வர். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே இராசி மண்டலத்தை வலம் வரக் கூடியவர்கள்.

மேஷ ராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பயணம் செய்து வருகின்றனர். ராகு பகவான் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் இருந்து கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகுவின் நட்சத்திர மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம். இப்போது ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது பயணம் செய்கிறார். ஜூன் மாதம் முதல் கேது செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்திற்கு இடம்மாறுவார். அக்டோபர் மாதம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு ராகுவும் கேதுவும் என்ன பலன்களைத் தரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
மேஷம்
கேதுவின் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்யும் கால கட்டதில் சின்னச் சின்ன உடல்நலக்குறைபாடுகள் வந்து போகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உறவினர்கள் மத்தியில் சண்டைகள் மனக்கசப்புகள் வந்து நீங்கும். ஜென்ம ராகு மனக்குழப்பத்தை தருவார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணர்ச்சி வேகத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாகவே அமையும். மன உளைச்சல், டென்ஷன், சோர்வு, தலைவலி வந்து நீங்கும். சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அண்ணன், தம்பிகள் பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். பாரம்பரியமாக கூட்டுத் தொழில் செய்து வந்த குடும்பங்களில் சில பங்காளிகள் தொழிலை விட்டு விலகலாம். கூட்டாளிகளிடம் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சிலர் முறையற்ற பாகப் பிரிவினைக்கு நீதி மன்றத்தை அனுகலாம். சிலருக்கு சம்பந்திகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். நட்பு வட்டாரங்கள் விலகிச் செல்வது போன்ற சூழ்நிலை ஏற்படும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஒரு அங்கீகாரம்கூட கிடைக்கவில்லையே என்று வருந்தினீர்களே, இனி உங்களின் திறமையை அனைவரும் உணர்வார்கள். தடைபட்ட உரிமைகளும், சலுகைகளும் உடனே கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பரிசு, பாரட்டுகள் குவியும். சம்பள உயர்வு அதிகரிக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் கேது பயணம் செய்யும் காலத்தில் பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். விபரீத ராஜ யோக அடிப்படையில் உங்களுக்கு எதிர்பாராத தீடீர் பணவரவு கிடைக்கும். உங்களின் திடீர் வளர்ச்சியால் திருஷ்டி அதிகரிக்கும். உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுவார்கள். வாகனங்களில் பயணிக்கும் போதும், இயக்கும் போதும் கவனம் தேவை. வழக்குகளில் வெற்றி உண்டாகும். இந்த ஆண்டு அதிக சுப பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே..கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் ராகுபகவான் பயணம் செய்யப்போகும் இந்தக் காலகட்டத்தில் மன உளைச்சல், காரியத்தடை, பேச்சால் பிரச்னை, உடல்நலக்குறைகள் வரக்கூடும். அரசாங்கல் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். எவரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்காதீர்கள். சிலருக்கு சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்; கவனம் தேவை. ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, வேலை விசயமாகவோ பிரிந்து வாழலாம். தொழில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு அல்லது பிரியும் நிலை ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்க வேண்டும். கேது தான் நின்ற பாவக பலனை சுருக்குவார் என்பதால் எதிரி, கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுவிப்பார். நாள்பட்ட வியாதிகள் மறையும். வாடகை வீட்டு தொல்லை, தாய், தந்தை வழி உறவுகளிடம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு குடும்பத்தில் இணைவீர்கள். பகைமை மறந்து உறவுகள் ஆறுதலாக இருப்பார்கள். செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்தவர்கள் நன்னடத்தையால் விடுபடுவார்கள். கடன் வாங்குவதை தவித்து நம்பிக்கையோடு உழைக்க நல்லதே நடக்கும்.

மிதுனம்
கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்யும் காலத்தில் அதிக கவனம் தேவை; குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படலாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். ராகு ஆசையை தூண்டும் கிரகம். கேது சட்டம், நேர்மை, நியாயம் என்று பேசும் கிரகம். ராகுவும் கேதுவும் தங்களின் நட்சத்திரத்தை பரிமாறிக் கொண்டு சஞ்சாரம் செய்யும் காலம் என்பதால் தார்மீக உணர்வோடு உழைத்து முன்னேறியவர்களுக்கு சிறிய பேராசை துளிர் விடும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்காதீர்கள். சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டு சிக்கலில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதிர்ஷ்டத்தை நம்பி பணத்தை பெரிய அளவில் முதலீடு செய்து சிக்கிக்கொள்ளாதீர்கள். செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் கேது பயணம் செய்யும் போது சிலருக்கு சிறுநீரக கோளாறு, சிறுநீரக கல் பிரச்சினை உண்டாகும். கணையம் சிறுநீரகம் சம்பந்தமான உடல் உபாதைகள் தோன்றும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். கடன் பிரச்சினை அதிகரிக்கும் பூர்வீக சொத்துக்களை விற்று கடன்களை அடைக்க நேரிடும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே.. அக்டோபர் மாதம் வரைக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்யும் காலத்தில் அதிக கவனம் தேவை. ராகுவும் கேதுவும் தங்களின் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணம் காலத்தில் மன குழப்பம் அதிகரிக்கும். உங்கள் அறியாமை மற்றும் அவசர புத்தியால் சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம். சொத்து வாங்கும் போது கவனம் தேவை. வாகனங்கள் மின்சாதனங்கள், அடிக்கடி பழுது ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். ஜூன் முதல் அக்டோபர் வரை கேதுவின் சித்திரை நட்சத்திர கேது பயணம் செய்யும் போது வேலை, தொழில் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். சிலருக்கு கௌரவப் பதவி கிடைக்கும். புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். எதிர்பாராத பதவிகள் தேடி வரும். செல்வாக்கு உயரும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.













Click it and Unblock the Notifications