சனிப்பெயர்ச்சி 2020 : கண்டகச்சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி காலத்தில் என்ன பாதிப்பு - பரிகாரம்
சனி பகவான் இப்போது மகரம் ராசியில் உத்திராடம் நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளும் சில ராசிக்காரர்களுக்கு யோகமும் சிலருக்கு பாதிப்பும் ஏற்படும்.
சென்னை: சனி பகவான் இப்போது மகரம் ராசியில் குரு உடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த கிரகங்களின் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு அதிக நன்மையும் யோகங்களும் கிடைக்கும். சில ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும். சனிபகவான் நான்காம் வீட்டில் சஞ்சரிப்பது அர்த்தாஷ்டம சனி காலமாகும். சனிபகவான் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பது கண்டகச்சனி காலமாகும். சனி எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பது அஷ்டம சனி காலமாகும். ஏழரை சனி போல அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி காலத்திலும் சில சங்கடங்கள் வரும். நல்லது நினைத்து நல்ல செயல்களை செய்பவர்களுக்கு நல்லதே நடக்கும்.
சனிபகவான் இப்போது மகரம் ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் கோச்சார ரீதியாக 3,6,9,10,11 ஆகிய இடங்களில் அமரும் போது அற்புதமான பலன்களை தருவார். அதே நேரம் ஏழரை சனி காலமான ஜென்ம சனி, பாத சனி, விரைய சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி காலகங்களில் சில கஷ்டங்களை கொடுத்து உலகம் இப்படித்தான் இதுதான் வாழ்க்கை என்று புரிய வைப்பார்.
அஷ்டம சனியாலும் அர்த்தாஷ்டம சனியாலும் என்னென்ன பாதிப்புகள் வரும் அதற்கான பரிகாரம் என்ன என்ற பார்க்கலாம். உங்களின் சுய ஜாதகத்தில் சனிபகவான் எப்படி எந்த இடத்தில் இருக்கிறார் என்று பார்த்து உங்களுக்கு என்ன தசாபுத்தி நடக்கிறது என்பதைப் பொருத்து பலன்கள் மாறுபடலாம்.

அர்த்தாஷ்டம சனியில் என்ன பாதிப்பு
துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி காலமாகும். சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை ஏற்படும். உங்களின் சுகம் கெடும். கொஞ்சம் எச்சரிக்கை தேவை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வரும் இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு சில படிப்பினைகளை தந்து விட்டு கடந்து செல்வார் சனிபகவான். குருவுடன் சனிபகவான் இணைந்திருப்பதால் உங்களுக்கு பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் எனவே கவலைப்பட வேண்டாம்.

ஆரோக்கியத்தில் கவனம்
சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். இந்த கால கட்டத்தில் கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். அதற்கான கடன்களை அள்ளிப்போட்டுக்கொள்ளாதீர்கள். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும். பங்குச்சந்தை முதலீடுகள் முதலில் லாபம் கொடுத்தாலும் பின்னர் நஷ்டத்தில் விட்டு விடும் எச்சரிக்கையாக இருங்கள்.

ஏழாம் இடத்து சனி
கடகம் ராசிக்காரர்களுக்கு இது கண்டகச் சனி காலமாகும். கணவன் மனைவி உறவில் கவனம் தேவை. சனி பார்வை கடகத்தின் மீது விழுவதால் பாதிப்பு குறையும். இந்த கால கட்டத்தில் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளுங்கள் ஏமாற்றங்கள் வராது. யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் மன அமைதி குறையும். கண்ட சனி கால கட்டத்தில் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும்.

அஷ்டம சனி என்ன செய்யும்
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் மிதுன ராசிக்கு எட்டில் சனி அதாவது அஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார். கண்டச்சனியை இரண்டரை ஆண்டு காலம் அனுபவித்த மிதுன ராசிக்காரர்கள் இப்போது அஷ்டம சனியில் அடி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் இரண்டரை வருடம் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணர வைத்து விடுவார். சொந்த பந்தங்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்த வைப்பார் சனிபகவான். உண்மையான உறவுகளை இந்த கால கட்டத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

பணம் விசயத்தில் கவனம்
கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கணும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் சந்தேகங்கள் வரலாம். அதே போல தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். எந்த காரியத்திலும் யாரை நம்பியும் பணம் கடன் வாங்கி கொடுக்க வேண்டாம். முக்கியமாக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அதிகம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வயிறு பிரச்சினைகள் வரலாம். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். கடவுள் கைவிட மாட்டார்.

சனியை சரணடையுங்கள்
சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க சனிக்கிழமை எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். சனி பகவான் மங்கள சனீஸ்வரராக, பாதாள சொர்ண சனீஸ்வரராக அருள்பாலிக்கும் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் சென்று அங்கு நடைபெறும் சனிதோஷ நிவர்த்தி யாகங்களில் பங்கேற்கலாம். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் ரொம்ப அமைதியாக இருங்க இதுவும் கடந்து போகும் கவலை வேண்டாம். பல பரிகாரங்கள் இருந்தாலும் ஆஞ்சநேயர், விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்க பாதிப்புகள் நீங்கும்.












Click it and Unblock the Notifications