சனி பெயர்ச்சி பலன் 2023: கும்பத்தில் சனி வக்ரம்.. 4 மாதத்திற்கு வெற்றி நடை போடும் ராசிக்காரர்கள்
மதுரை: சனி பெயர்ச்சி என்றாலே பலருக்கும் பயம்தான். பரிகாரம் செய்ய சனி பகவானை தேடு ஓடுவார்கள். சனிபகவான் இப்போது கும்ப ராசியில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்புகளும் உண்டாக வாய்ப்புகள் அதிகம். யாருக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.
சனி பகவான்: ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி. இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்கும் சனி ஆண்டுக்கு ஒருமுறை வக்ரமடைகிறார். சனிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று ஒன்பதாம் வீட்டிற்கு சூரியன் வரும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு வக்ர காலத்தில் தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் காலமாக இந்த மாதங்கள் அமையும். சனி வக்ரத்தினால் பாதிப்பு குறைய சனிக்கிழமையன்று எள் தீபம் ஏற்றி வழிபடலாம்.

மேஷம்: லாப சனியால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்து வருகிறது. தொட்டதெல்லாம் துலங்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். வீடு மாற வாய்ப்பு உள்ளது. புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். சுய தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. பற்களில் பாதிப்பு ஏற்பட்டு பிடுங்க வேண்டியிருக்கலாம். மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.
ரிஷபம்: சனி பகவான் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வக்ர மடைந்துள்ள இந்த கால கட்டத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சோம்பேறித்தனத்தை விட்டு ஒழியுங்கள். உடன் பிறந்தவர்களால் மன வருத்தங்கள் எற்படும். தடைகள் நிவர்த்தியாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் எற்படலாம். உயர்கல்வி பயில்பவர்களுக்கு சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் நிவர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள்.
மிதுனம்: சனிபகவானால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை நன்மையே அதிகம் நடக்கிறது. புதிய வேலை கிடைக்கும். சுபகாரியங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். நண்பர்களால் நன்மைகள் அதிகம் நடக்கும். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். ஒருமுறை குச்சனூர் சென்று சனிபகவானை தரிசனம் செய்து வாருங்கள்.
கடகம்: சனியின் சஞ்சாரத்தினால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய செயல்களை செய்யும் போது எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும். கோவில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் கஷ்டங்கள் காணாமல் போகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள்
சிம்மம்: உடம்பிலும் மனதிலும் உற்சாகம் அதிகரிக்கும் சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். காதல் கைகூடும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். வேலை மாற்றம் ஏற்படும் யோசித்து செயல்படுங்க. இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க. பொன், பொருள், ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உல்லாச பயணம் செல்வீர்கள். சுப விரையம் ஏற்படும். பிள்ளை இல்லையே என்று கவலைப்பட்டவர்களின் மனக்கவலை தீரும். ஆன்மீக பயணம் மனதிற்கு அமைதியை தரும்.
கன்னி: சனி வக்ரமாகும் இந்த கால கட்டத்தில் சொந்த வீடு, வண்டி வாகனங்கள் வாங்கலாம். சக ஊழியர்களால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் சில வில்லங்கம் வரும் கவனம் தேவை. படிப்புக்காக குழந்தைகளை விட்டு பிரியும் காலம் இது. குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும். சனிபகவானை சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வணங்கலாம்.
துலாம்: குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உல்லாச பயணங்களினால் மனதில் நிம்மதி அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும். உறவினர்களால் இருந்து வந்த உபத்திரவங்கள் நீங்கும். சின்னச்சின்ன மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.
விருச்சிகம்: வக்ர சனியால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பீர்கள். கொடுத்த பணம் வராது என்று நினைத்த நிலையில் உங்களுக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும். சிலருக்கு படிப்பு, வேலைக்காக வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் அமையும். பாஸ்போர்ட் , விசா கிடைக்கும். காதல் விவகாரங்களால் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்.
தனுசு: கடன் கொடுத்து பணத்தை தராமல் இழுத்தடித்தவர்கள் பணத்தை தேடி வந்து கொடுப்பார்கள். எதிர்பாராத பணவரவு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. உடல் உழைப்பு கூடும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. காதலிப்பவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்ட காலம்தான். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
மகரம்: ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. உடல் நிலையில் பாதிப்பு அதிகம் இருந்தது. இந்த நான்கு மாத காலம் உடல் நிலைபாதிப்புகள் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தேவையற்ற விசயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். வேலைகளில் இழுபறி ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படும் அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம்.
கும்பம்: ஜென்ம சனி காலம் நெருக்கடி மிகுந்த கால கட்டங்களை எல்லாம் தாண்டி வந்திருப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் இதுநாள் வரை இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். புதிய சொத்துக்கள், வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்கள் ஆடைகள், பொன் நகைகள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு நல்ல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு தேடி வரும். பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடி வரும்.
மீனம்: உங்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும் அரசு வழியில் நன்மைகள் நடைபெறும். பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். விரைய செலவுகளை தவிர்த்து சுப செலவுகளாக மாற்றுங்கள். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள்.












Click it and Unblock the Notifications