எத்தனால் 20% போட்டதற்கே வண்டி திணறுதே.. 27% ஆக உயரும் பெட்ரோல் - எத்தனால் கலப்பு? ஷாக்கிங்
சென்னை: இந்திய சர்க்கரைத் தொழில் சங்கம் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் இலக்கை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. E20 இலக்கை அடைந்த பிறகு, எத்தனால் கலப்பு அளவை 27% (E27) ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. அரசும் இது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் எத்தனால் உற்பத்தியாளர்கள் 2025-26 ஆம் ஆண்டுக்கான எத்தனால் விநியோகத்திற்கு 17,760 மில்லியன் லிட்டர்களை வழங்க முன்வந்துள்ளனர். இது எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் (OMC) ஆண்டுத் தேவையான 10,500 மில்லியன் லிட்டர்களை விட அதிகமாகும்.

எத்தனால் கலப்பு
அதிகரிக்கும் எத்தனால் உற்பத்தி திறனை முழுமையாகப் பயன்படுத்த, இந்திய சர்க்கரைத் தொழில் சங்கம் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் இலக்கை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. E20 இலக்கை அடைந்த பிறகு, எத்தனால் கலப்பு அளவை 27% (E27) ஆக உயர்த்துவதற்கான ஒரு தெளிவான திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் (FE) தெரிவித்துள்ளது.
இந்திய சர்க்கரை மற்றும் உயிர்சக்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ISMA) இயக்குநர் ஜெனரல் தீபக் பல்லானி, 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுடனும், கரும்பிலிருந்து ஆண்டுக்கு 9,000 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான உற்பத்தி திறனுடனும் நாங்கள் எத்தனால் தயாரித்து வருகிறோம். ஆனால் நாங்கள் தயாரிக்கும் இந்த எத்தனால் பயன்பாடு இல்லாமல்.. கிடங்கில் இருக்கிறது. இதை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதற்காக E20 மட்டுமன்றி E27 மற்றும் அதற்கும் அதிகமான கலப்பு விகிதங்களை ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.. அதாவது இப்போது 20 சதவிகிதம் எத்தனால் சேர்க்கிறார்கள்.. இதை வரும் நாட்களில் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
எத்தனால் மொபிலிட்டி திட்டம்
17,760 மில்லியன் லிட்டர் எத்தனாலில், கரும்பு சார்ந்த உற்பத்தியாளர்கள் சுமார் 4,710 மில்லியன் லிட்டர்களையும், தானிய அடிப்படையிலான அலகுகள் 13,040 மில்லியன் லிட்டர்களையும் வழங்குகின்றன. E20 இலக்குக்கு அப்பால் ஒரு தெளிவான திட்டம் இல்லாவிட்டால் மேற்கண்ட இந்த உற்பத்தி எல்லாம் பயன்பாடு இல்லாமல் போய்விடும்.
ஏற்கனவே 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு கவலைகள் எழுந்துள்ளன. எரிபொருள் செலவு அதிகரிப்பது, வாகனத்தின் செயல்திறன் மந்தமாவது, பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பது போன்ற புகார்களைப் பலர் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக பலரும் மைலேஜ் குறைந்துவிட்டது.. வண்டி திடீர் என்று பவர் இல்லாமல் குறைந்துவிட்டது என்று விமர்சனங்கள் வைக்கின்றனர். பெரும்பாலான இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்கள் இன்னும் E20 ஏற்றவை அல்ல என்பதால், சேவை மையங்கள் இயந்திர தேய்மானம் மற்றும் கேஸ்கெட் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் கூறுகின்றன. இதனால் நுகர்வோர் பாகங்களை மறுசீரமைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
20% எத்தனால் கலந்த பெட்ரோல்
20% எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக காரின் மைலேஜ் 11-12 கிமீ/லிட்டரில் இருந்து 7-8 கிமீ/லிட்டராகக் குறைந்ததாக பலரும் தெரிவித்துள்ளனர். 20% எத்தனால் கலந்த பெட்ரோல் எடை கூடுதலாக உள்ளது. அதோடு பவர் இல்லை. மைலேஜ் குறைந்துவிட்டது என்று கூறுகின்றனர்.
பலரும் தங்கள் காரின் மைலேஜ் 20% குறைந்ததாகவும், அத்துடன் வாகனம் தடுமாறுவது மற்றும் வேகம் குறைவாக இருப்பதையும் தெரிவித்துள்ளனர். E20 அல்லாத வாகனங்களில் எரிபொருள் சிக்கனம் சுமார் 7% குறையலாம் என்று தொழில்துறை நிர்வாகிகள் மதிப்பிடுகின்றனர். இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆய்வுகள் 1-6% மைலேஜ் குறைவதைக் காட்டுகின்றன.
எத்தனால் பெட்ரோல் கலப்பு - மத்திய அரசு விளக்கம்
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் (E20) மைலேஜ் குறையும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனால் வாகனத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக பழைய வாகனங்கள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் தொடர்பான பல கவலைகள் ஊடகங்களில் எழுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கவலைகள் பெரும்பாலும் அறிவியல் ஆதாரங்கள் அல்லது நிபுணர் ஆய்வுகளால் ஆதரிக்கப்படாத, அடிப்படையற்ற கூற்றுகள் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications