சென்னை வளரவே கூடாதுனு முடிவு பண்ணிட்டாங்களா? பெரிஃபெரல் ரிங் ரோடு கடைசி டெண்டர் ரத்து! போச்சு!
சென்னை: சென்னை வளரவே கூடாது என்று புதிய விஜய் அரசு முடிவு செய்துவிட்டது போல. ஏற்கனவே பல வளர்ச்சி திட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது பெரிஃபெரல் ரிங் ரோடு திட்டத்தின் கடைசி கட்ட பணிகளும் ரத்தாகி உள்ளது.
சிங்கபெருமாள்கோவிலில் தொடங்கி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரி (மாமல்லபுரம் அருகே) வரையிலான சாலையை அமைக்கும் பணிக்காகக் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC) அறிவித்துள்ளது. சுமார் 8 முதல் 9 மாதங்களாக நிறுவனங்களை ஆய்வு செய்து, இறுதி ஒப்பந்தம் வழங்கப்பட இருந்த கடைசி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை திட்டம் ஏன் முக்கியமானது?
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி வரை மொத்தம் 133 கி.மீ தூரத்திற்கு இந்த பிரம்மாண்ட புறவழிச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
நகரத்திற்குள் வராமல் லாரிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் எளிதாகப் பயணிக்க இது மிகப்பெரிய அளவில் உதவும். இந்த 133 கி.மீ சாலை மொத்தம் 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் 5-வது மற்றும் இறுதிக் கட்டப் பகுதிதான் சிங்கபெருமாள்கோவில் டூ பூஞ்சேரி வழித்தடம். இதன் நீளம் சுமார் 27.34 கி.மீ ஆகும்.
என்னென்ன வசதிகளுடன் அமைய இருந்தது?
இந்த 27 கி.மீ தூரச் சாலை மிக நவீன முறையில் 10 வழிச்சாலையாக அமைய இருந்தது.
6 முதன்மை வழிகள்: அதிவேகமாக வாகனங்கள் செல்வதற்கான வழித்தடம்.
4 சர்வீஸ் வழிகள்: இருபுறமும் தலா 2 வழிகள் கொண்ட சர்வீஸ் சாலைகள்.
மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள்: பெருமாள் ஏரியைக் கடந்து செல்லும் வகையில் 1.8 கி.மீ தூர மேம்பாலம், கிராம மக்கள் தடையின்றி செல்ல 8 சுரங்கப்பாதைகள், பெரிய வாகனங்களுக்கு 4 சுரங்கப்பாதைகள் மற்றும் ஏரிகள் மீது 6 பெரிய பாலங்கள் ஆகியவை திட்ட வரைபடத்தில் இடம்பெற்றிருந்தன.
இதற்காகக் கடந்த ஆண்டு இறுதியில் நான்கு தனித்தனி தொகுப்புகளாக டெண்டர் கோரப்பட்டது. பல முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.
டெண்டர் ரத்து பின்னணி என்ன?
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், முந்தைய அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள், அவற்றின் மதிப்பீடு, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தீவிரமாக மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
திட்டத்தின் செலவு மதிப்பீடு, ஒப்பந்த விதிகள் மற்றும் நடைமுறைகளைச் சீரமைக்கும் நோக்கிலேயே இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, பணிகள் தொடங்குவது மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. வேகமாக முடிவுக்கு வர வேண்டிய பணிகள் விஜய் அரசின் முடிவால் தற்போது தாமதம் ஆகி உள்ளது.
சாமானிய மக்களுக்கு இதனால் என்ன பாதிப்பு?
ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சிங்கபெருமாள்கோவிலில் இருந்து ஈ.சி.ஆர் சாலையை இணைக்கும் இந்த வழித்தடம் அமைந்தால், தென் மாவட்டங்களில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிக்கு மிகக் குறுகிய நேரத்தில் சென்றுவிட முடியும்.
செங்கல்பட்டு, ஒரகடம் மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் சரக்கு போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறையும். தற்போது இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த வழித்தடத்தின் பயன்பாடு மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் கிடைக்க இன்னும் கூடுதல் காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விரைவில் திருத்தப்பட்ட புதிய மதிப்பீட்டுடன் அல்லது புதிய விதிகளுடன் இதற்கான மறு டெண்டர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
