சென்னையில் பல லட்சம் பேர் பயணிக்கும் சாலை.. தடம் தெரியாமல் மாறப்போகுது.. அரசின் மாஸ்டர் பிளான்!
சென்னை: சென்னையில் பல லட்சம் ஊழியர்கள் பயணம் செய்யும் சர்தார் படேல் சாலையை அகலப்படுத்தும் திட்டத்திற்காக, மாநில நெடுஞ்சாலைத் துறை விரைவில் டெண்டர்களை வெளியிடவுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ₹45 கோடி ஆகும். இதில் இரு கூடுதல் பாதைகள் அமைத்தல், பாதசாரிகளுக்கான நடைபாதைகளை மேம்படுத்துதல், மற்றும் ஐஐடிக்கு அருகே உள்ள புற்றுநோய் மையத்தை சுற்றி ஒலி தடுப்புச் சுவர் கட்டுதல் ஆகிய பணிகள் அடங்கும்.
இந்த சாலை, ஆறு வழித்தடங்களைக் கொண்ட ஐடி காரிடர் மற்றும் அண்ணா சாலை ஆகிய இரு முக்கிய சாலைகளை இணைக்கிறது. "கல்வி நிறுவனங்கள் மற்றும் நினைவிடங்கள் பல அமைந்துள்ள இந்த சாலை, அதே அகலத்தைக் கொண்டிருப்பது முக்கியம். ஏற்கெனவே, மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டதால், அதன் கீழ் உள்ள சாலை சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு அகலப்படுத்தப்பட்டுள்ளது," என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

ஐஐடி மெட்ராஸ் அருகே உள்ள சாலை பணிகள்
அவர் மேலும் கூறுகையில், "ஐஐடி மெட்ராஸ் முதல் அண்ணா சாலை வரையிலான மீதமுள்ள பகுதி விரிவுபடுத்தப்பட்டு, அதிக வாகனங்களைச் செல்ல அனுமதிக்கும்" என்றார். இந்தப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டமாக, ஐஐடி மெட்ராஸ் முதல் ராஜ்பவன் வரையிலான 1.70 கி.மீ தூரப் பணிகள் முதலில் தொடங்கும்.
அதன்பிறகு, ராஜ்பவன் முதல் அண்ணா சாலை வரையிலான 0.80 கி.மீ தூரம் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். சில மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மேம்பால ஆய்வுப் பணிக்குப் பிறகு சாலையின் அகலத்தை நேரில் ஆய்வு செய்திருந்தார்.
அகலமான நடைபாதைகள்
காந்தி மண்டபம் அருகில் அகலமான நடைபாதைகள் உள்ளன. இது நினைவிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் பாதசாரிகளுக்கு வசதியாக உள்ளது. இருப்பினும், மருத்துவமனை மற்றும் ஐஐடி மெட்ராஸ் அருகிலுள்ள நடைபாதைகளை அகலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவை மிகவும் குறுகலாக இருப்பதால், ஒற்றை வரிசையில் நடந்தாலும் சாலையில் இருந்து விலகி நடப்பது கடினம் என்று அரசு தரப்பு நினைக்கிறது.
நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் போக்குவரத்து நிறைந்த சாலையில் நடப்பதைக் காண்கிறோம். அந்தப் பகுதியில் நடைபாதை அகலப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும். இதனால் அங்கே தற்போது நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. கேன்சர் மருத்துவமனை இருக்கும் பகுதியும் திட்டத்தின் கீழ் உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
வேளச்சேரி பாலம்
இன்னொரு பக்கம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, கிண்டி முதல் வேளச்சேரி வரையில் குருநானக் கல்லூரி சந்திப்பில் ₹310 கோடி மதிப்பில் 3 கிலோமீட்டர் நீள மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை அன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்கான பணிகள் அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ளது.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரும் தகவலின்படி, குருநானக் கல்லூரி சந்திப்பு (ஃபீனிக்ஸ் மால் சந்திப்பு) மற்றும் ஃபைவ் ஃபர்லாங் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. ஆய்வுப் படி, ஃபைவ் ஃபர்லாங் சாலை சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு 7,459 பயணிகள் கார்களும், குருநானக் கல்லூரி சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு 7,742 பயணிகள் கார்களும் பயணம் செய்கின்றன. கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் இங்கே பயணம் செய்கிறார்கள்.
இந்த நெரிசலைக் குறைக்கும் வகையில் ஒரு மேம்பாலம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலங்கள் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த இரண்டு வழிப்பாதை மற்றும் 12 மீட்டர் அகல மேம்பாலம், வேளச்சேரி பிரதான சாலையில் சர்தார் படேல் சந்திப்பிற்குப் பின் தொடங்கி, வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு அப்பால் நீளும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications