சென்னை டூ திருச்சி.. அதிரடியாக களமிறக்கப்படும் MLFF சிஸ்டம்.. இனி வாகன ஓட்டிகள் பறக்கலாம்!
சென்னை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியிலும், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சென்னசமுத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி) சுங்கச்சாவடிகளிலும் multi lane free flow போக்குவரத்து எனப்படும் பலவழி தடையில்லாப் போக்குவரத்து (MLFF) அமைப்பிற்கான சோதனைப் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.

பலவழி தடையில்லாப் போக்குவரத்து (MLFF) என்றால் என்ன?
இந்த MLFF முறை வாகனங்கள் நிற்காமல் விரைந்து கடந்து செல்வதை உறுதி செய்யும். போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதும், காத்திருப்பு நேரத்தை பூஜ்ஜியமாக்குவதும் முக்கிய இலக்குகள் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சுங்கச்சாவடிகளில் நிறுவப்படும் உயர் வளைவு (Gantries) அமைப்புகளில், RFID ரீடர்கள், ரேடார் ஸ்கேனர்கள், தணிக்கைக் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டேக் - தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகார (ANPR) அமைப்புகள் பொருத்தப்படும். இவை அனைத்தும் இணைந்து வாகனங்கள் தடையின்றி கடந்து செல்வதை உறுதி செய்யும்.
டிராபிக் ஏற்படாது
இதன் மூலம் டிராபிக் ஏற்படாமல் தடுக்கப்படும். வாகனங்கள் பிளாக் ஆவதை பொறுத்து அதன் பயணம் மாற்றி அமைக்கப்படும். டிராபிக் நேரங்களுக்கு ஏற்றபடி வாகனங்கள் செல்லும் லேன்கள் விரிவாக்கப்படும்.
பரனூர் சுங்கச்சாவடி தினமும் சுமார் 46,500 வாகனங்களையும், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி தினமும் 33,500 க்கும் மேற்பட்ட வாகனங்களையும் கையாள்கின்றன. இந்த அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதால், தடையில்லாப் பலவழி போக்குவரத்து முறை இத்தகைய இடங்களில் மிகவும் அவசியமாகிறது.
MLFF சுங்கச்சாவடி அமைப்பை வடிவமைத்து, உருவாக்கி, செயல்படுத்தும் நிறுவனமே அதை இயக்கி பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் விரைவாக சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிற்குச் சென்று சேருவதை அந்நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம்
இந்த அமைப்பை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்காக, இணைய அடிப்படையிலான செயலி அல்லது ஒரு தளம் வழங்கப்படும். இத்தளம் மூலம் பரிவர்த்தனைகள், தள்ளுபடி பாஸ்கள், சுங்க வரி வருவாய், சரிபார்ப்பு அறிக்கைகள் மற்றும் மின் அறிவிப்புகள் போன்ற தகவல்களை எளிதாக அணுக முடியும்.
MLFF அமைப்பை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு ஐந்து மாதங்களும், அதனை இயக்குதல் மற்றும் பராமரிப்பு கட்டத்திற்கு மேலும் ஐந்து மாதங்களும் என ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு சுங்கச்சாவடி ஊழியர் கூறுகையில், ஒரு வாகனம் சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் வேகம், வாகனத்தில் உள்ள ஃபாஸ்டேக் அட்டையை ஸ்கேன் செய்யும் ஆப்டிகல் ரீடரின் திறன் மற்றும் சர்வரின் வேகத்தைப் பொறுத்தது. "டேக்கில் சற்றே தூசி படிந்திருந்தாலோ அல்லது அது சேதமடைந்தாலோ ரீடர் செயல்படாது. அனைத்துக் காரணிகளும் சரியாக இருந்தால், ஒரு வாகனம் கடந்து செல்ல 15 வினாடிகளுக்கும் குறைவாகவே ஆகும்" என்று அவர் விளக்கினார்.
மேலும் அவர், வாகன ஓட்டிகள் தங்கள் டேக்குகள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். MLFF முறை வாகன இயக்கத்தை மேலும் விரைவுபடுத்தும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதல் கட்டமாக சென்னசமுத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி) சுங்கச்சாவடிகளிலும் multi lane free flow போக்குவரத்து எனப்படும் பலவழி தடையில்லாப் போக்குவரத்து (MLFF) அமைப்பிற்கான சோதனைப் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.












Click it and Unblock the Notifications