இந்தியாவின் மிகப்பெரிய ரிங் ரோடு! சென்னையை சுற்றி வரும் ராட்சச சாலை.. நிலம் எடுக்கும் பணிகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மிக முக்கிய திட்டமான சென்னை புற எல்லை சுற்றுச்சாலை பணிகளில் நெடுஞ்சாலைத்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சுமார் 17,958 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 133.64 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆறு வழித்தட பசுமை விரைவுச் சாலையாக இந்த பிரம்மாண்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.

automobile chennai

சென்னையின் பிரதான நுழைவு வாயில்களான ஜி.எஸ்.டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலை ஆகியவை தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. சென்னைக்குள் செல்லாமல் புறநகர் வழியாக வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கனரக வாகனங்களும் நகருக்குள்ளேயே நுழைய வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வாக எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களை இணைக்கும் வகையில் இந்த புறவழிச்சாலை அமையவுள்ளது.

மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிவிரைவுச் சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை, சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலை, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலை ஆகியவற்றை நேரடியாக இணைக்கிறது.

இதன் மூலம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் நுழையாமல் நேரடியாக தென் மாவட்டங்களுக்கும் எண்ணூர் துறைமுகத்திற்கும் விரைவாகச் செல்ல முடியும். குறிப்பாக, மீஞ்சூர் மற்றும் பொன்னேரி பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் துறைமுக சரக்கு வாகனங்கள் எளிதாகச் செல்ல வழிவகுக்கும்.

மொத்தம் 5 கட்டங்களாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காட்டுப்பள்ளி முதல் தச்சூர் வரை 25 கி.மீ, தச்சூர் முதல் திருவள்ளூர் வரை 26 கி.மீ, திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 24 கி.மீ, ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கபெருமாள்கோவில் வரை 27 கி.மீ, சிங்கபெருமாள்கோவில் முதல் மாமல்லபுரம் வரை 30 கி.மீ என பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் மூன்று பிரிவுகள் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் OPEC நிதியுதவியுடன் 12,375 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

தச்சூர் - திருவள்ளூர் பைபாஸ் இடையிலான சாலை அமைக்கும் பணிகள் முடிவுற்ற சூழலில், இரண்டாம் கட்டத்திற்காக எக்காடு கண்டிகை பகுதியில் நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ கிளை அலுவலகத்தில் நில உரிமையாளர்கள் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கலாம் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. மின் கோபுரங்கள் மற்றும் நீர்நிலைகள் காரணமாக முதல் கட்ட நிலமெடுப்பில் தாமதம் ஏற்பட்டாலும், அடுத்தடுத்த கட்டங்கள் வேகமெடுத்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் - சிங்கபெருமாள்கோவில் பகுதி பணிகள் முழுமையாக நிறைவடைந்து, சர்வீஸ் சாலைகளுக்கான நிலமெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இச்சாலை பயன்பாட்டுக்கு வரும்போது, படப்பை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைகள் கிழக்கு கடற்கரை ஓ.எம்.ஆர் ஐடி காரிடாருடன் நேரடியாக இணையும். மேலும் பக்கிங்ஹாம் கால்வாய் மீது அமையவுள்ள புதிய இரும்பு பாலம் வழியாக இ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலைகள் இணைக்கப்படவுள்ளன. 8 பெரிய பாலங்கள், 7 சிறிய பாலங்கள், 2 ரயில்வே பாலங்கள், 76 சிறு பாலங்கள் மற்றும் பாதசாரிகள், வாகனங்களுக்கான 15 சுரங்கப்பாதைகள் அமையவுள்ளன.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது வாகனங்களின் பயண நேரம் பெருமளவு குறைவதோடு, எரிபொருள் விரயமும் காற்று மாசுபாடும் வெகுவாகக் குறையும். 133 கி.மீ நீள சாலையின் இருபுறமும் புதிய குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உருவாகி, சென்னை பெருநகரப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் CPRR ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+