ஒரு டோல் கேட்டில் எஸ்கேப் ஆனாலும்.. இனி என்ஓசி கிடைக்காது.. வாகன ஓட்டிகளே கவனம்! அமலுக்கு வந்த விதி
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் (NH) சுங்கக் கட்டணம் அல்லது பயன்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், வாகனப் பதிவு மற்றும் காப்பீட்டுப் புதுப்பித்தல், உரிமை மாற்றம், பரிமாற்றம் மற்றும் தகுதிச் சான்றிதழ் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான தடையில்லாச் சான்றிதழ் (NOC) மறுக்கப்படும் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, பலவழி தடையில்லாப் போக்குவரத்து (MLFF) எனப்படும் தடையில்லா சுங்கச்சாவடி வசூல் முறை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையின் மனோஹர்பூர், ஷாஜஹான்பூர் பகுதிகள், தேசிய நெடுஞ்சாலை 48-ன் சூரத்-வதோதரா வழித்தடத்திலுள்ள சோராசி மற்றும் டெல்லி-சண்டிகர் நெடுஞ்சாலையின் கரோண்டா ஆகிய இடங்களில் MLFF பணிகளின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

டோல் கேட் விதிகள் மாற்றம்
மத்திய மோட்டார் வாகன விதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங்கள், டிஜிட்டல் சுங்கக் கட்டண வசூலை அதிகரிக்கும் என்றும், தடையில்லா சுங்கச்சாவடி அமல்படுத்தப்படும்போது கட்டணம் செலுத்தாமலிருப்பதை தடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
MLFF வழித்தடங்களில், சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக வாகனங்களை நிறுத்த எந்தவித உடல்சார்ந்த தடையும் இருக்காது. அறிவிப்பின்படி, "செலுத்தப்படாத பயன்பாட்டுக் கட்டணம்" என்பது வாகனச் சேவை மற்றும் பரிவர்த்தனைகளுக்கான தடையில்லாச் சான்றிதழ்களுடன் இணைக்கப்படும். ஒரு தேசிய நெடுஞ்சாலைப் பிரிவைப் பயன்படுத்த ஒரு வாகனத்தால் செலுத்தப்பட வேண்டிய கட்டணம், மின்னணு சுங்கக் கட்டண வசூல் அமைப்பால் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதற்கான கட்டணம் பெறப்படாமல் இருந்தால் அது 'செலுத்தப்படாத பயன்பாட்டுக் கட்டணம்' என விளக்கப்பட்டுள்ளது.
விரைவில், மக்கள் தங்கள் புகார்களைப் பதிவு செய்து தகராறுகளைத் தீர்த்துக்கொள்ள ஒரு இணையதளம் உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது போக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), பிப்ரவரி 1, 2026 முதல் புதிய ஃபாஸ்டேக் ரிலீஸ்களுக்கு (கார், ஜீப், வேன் ஆகிய வாகன வகைகளுக்கு) 'உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள்' (KYV) செயல்முறையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைப் பயணிகளுக்குச் சிரமமில்லா அனுபவத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஃபாஸ்டேக்கைச் செயல்படுத்துவதற்கு முன்பு, வாகனச் சரிபார்ப்புப் பொறுப்பை வெளியிடும் வங்கிகளிடம் முழுமையாக ஒப்படைத்துள்ளது.
தற்போது, வாடிக்கையாளர் குறித்த தகவல்களை (KYC) அவ்வப்போது புதுப்பிக்க வேண்டியது பல பிரிவுகளில் கட்டாயமாக உள்ளது. இந்த வரிசையில், 'வாகனம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளும்' (KYV) என்ற புதிய நடைமுறையும் அமலுக்கு வந்துள்ளது. ஃபாஸ்டேக் (FASTag) முறைகேடுகள் அதிகரித்ததே இந்த புதிய நடைமுறைக்குக் காரணமாகும்.
சில லாரி ஓட்டுநர்கள், கார்களுக்கான ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் குறைவான கட்டணத்தைச் செலுத்தி வந்தனர். இது போன்ற சிக்கல்களைச் சமாளிக்க, ஒரு நாடு தழுவிய பாதுகாப்பை உருவாக்குவது அவசியமானது. இதன் விளைவாகவே KYV அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் இனி அவசியம் இல்லை
ஏற்கனவே கார்களுக்கு வழங்கப்பட்ட ஃபாஸ்டேக்குகளுக்கு, கேஒய்வி (KYV) இனி வழக்கமான தேவையாக இருக்காது. இருந்தாலும், ஃபாஸ்டேக் கழன்று தவறுவது, தவறான வழங்கல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் போன்ற புகார்கள் எழும்பும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டும் கேஒய்வி கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கூறுகையில், "இந்தச் சீர்திருத்தம், செல்லுபடியாகும் வாகன ஆவணங்கள் இருந்தபோதிலும், ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பிறகு கேஒய்வி தேவைகளால் சிரமங்களையும் தாமதங்களையும் சந்தித்த லட்சக்கணக்கான சாதாரண சாலைப் பயனர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணத்தைக் கொண்டுவரும்" என்று குறிப்பிட்டது.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), பயனர்களுக்கான செயல்முறையை எளிதாக்குவதோடு, துல்லியம், இணக்கம் மற்றும் அமைப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதி செய்ய, வெளியிடும் வங்கிகளுக்கான ஃபாஸ்டேக் முன்-செயலாக்க சரிபார்ப்பு விதிமுறைகளை வலுப்படுத்தியுள்ளது. வஹான் (VAHAN) தரவுத்தளத்திலிருந்து வாகன விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே ஃபாஸ்டேக் செயல்படுத்த அனுமதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications