தடம் தெரியாமல் மாறும்.. தமிழக நெடுஞ்சாலைகள்.. சென்னை டூ திருச்சி போறீங்களா? நோட் பண்ணுங்க!
சென்னை: சென்னை - திருச்சி மார்க்கத்தில் உள்ள பரனூர் மற்றும் சென்னை - பெங்களூரு பாதையில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி), சென்னசமுத்திரம் ஆகிய சுங்கச்சாவடிகளில் 'மல்டி லேன் ஃப்ரீ ப்ளோ' (MLFF) எனப்படும் நவீன தடையில்லாப் போக்குவரத்து முறை விரைவில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட உள்ளது.

பலவழி தடையில்லாப் போக்குவரத்து (MLFF) - விளக்கம்
வாகனங்கள் எங்கும் நிற்காமல் பயணத்தைத் தொடர்வதே இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் நெரிசல் பெருமளவு குறைக்கப்பட்டு, காத்திருப்பு நேரத்தை முழுமையாகத் தவிர்க்க முடியும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.
இந்த புதிய முறையில் அமைக்கப்படும் உயர் வளைவுகளில் (Gantries), ரேடார் ஸ்கேனர்கள், அதிநவீன கேமராக்கள், RFID ரீடர்கள் மற்றும் தானியங்கி எண் பலகை கண்டறியும் (ANPR) கருவிகள் பொருத்தப்படும். இவை அனைத்தும் ஒன்றிணைந்து வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்யும்.
பலவழி தடையில்லாப் போக்குவரத்து (Multi-Lane Free Flow - MLFF) என்பது சுங்கச்சாவடிகளில் (Toll Gates) வாகனங்கள் வரிசையில் நிற்காமல், தடையின்றி அதிவேகமாகச் செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நவீன தொழில்நுட்ப முறையாகும்.
தற்போதுள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் ஒவ்வொன்றாக 'பூம் பேரியர்' (Boom Barrier) முன்னால் நின்று, ஃபாஸ்டேக் ஸ்கேன் ஆன பிறகுதான் செல்ல முடியும். ஆனால், MLFF முறையில் அத்தகைய தடைகள் ஏதும் இருக்காது. சாலைக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உயரமான வளைவுகளில் (Gantries) பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மற்றும் கேமராக்கள், வாகனம் வேகமாகச் செல்லும்போதே கட்டணத்தைக் கழித்துவிடும்.
நெரிசல் இல்லாத பயணம்
வாகனங்கள் வரிசையில் நிற்பது இதன் மூலம் தவிர்க்கப்படும். வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணப்பாதைகள் மாற்றி அமைக்கப்படுவதுடன், நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் லேன்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தினமும் பரனூர் வழியாக 46,500 வாகனங்களும், ஸ்ரீபெரும்புதூரில் 33,500-க்கும் மேற்பட்ட வாகனங்களும் செல்வதால், இந்தப் பகுதிகளில் இத்தகைய தடையில்லா போக்குவரத்து நுட்பம் மிகவும் தேவையாக இருக்கிறது.
இத்திட்டத்தை வடிவமைக்கும் நிறுவனமே அதன் செயல்பாட்டிற்கும் பராமரிப்பிற்கும் பொறுப்பேற்கும். பயணிகளிடமிருந்து பெறப்படும் சுங்கக் கட்டணம் உரிய வங்கி கணக்கிற்கு விரைவாகச் சென்றடைவதையும் அந்நிறுவனம் கண்காணிக்க வேண்டும்.
கட்டண வசூல் முறை
இணைய செயலி அல்லது தனித் தளம் மூலம் இந்த அமைப்பு நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும். கட்டணப் பரிவர்த்தனைகள், சிறப்புச் சலுகைகள், வருவாய் விபரங்கள் மற்றும் அறிக்கைகளை இதன் மூலம் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு 5 மாதங்களும், அதைத் தொடர்ந்து இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு 5 மாதங்களும் ஒப்பந்த காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில், தற்போதைய நிலையில் ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யும் வேகம் மற்றும் சர்வர் இணைப்பைப் பொறுத்தே வாகனம் கடக்கும் நேரம் அமைகிறது. "டேக் சேதமடைந்தால் ரீடர் வேலை செய்யாது. எல்லாம் சரியாக இருந்தால் 15 வினாடிகளுக்குள் வாகனம் கடந்துவிடும்" என அவர் தெரிவித்தார்.
எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் ஃபாஸ்டேக் அட்டையைச் சரியாகப் பராமரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். MLFF முறை வந்த பிறகு வாகனங்களின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக, சென்னசமுத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி) ஆகிய டோல்கேட்களில் இந்த தடையில்லாப் போக்குவரத்து சோதனை ஓட்டம் மிக விரைவில் தொடங்க உள்ளது.












Click it and Unblock the Notifications