சீனாவிற்கு செக் வைத்த இந்தியா.. உள்ளே வரும் அர்ஜெண்டினா.. கையெழுத்தான மிகப்பெரிய ஒப்பந்தம்
டெல்லி: மின்சார வாகனங்கள், செல்போன்கள் மற்றும் லேப்டாப்களில் லித்தியம் பேட்டரிகளே பயன்படுத்தப்படும் நிலையில் அர்ஜென்டினா - இந்தியா இடையே மிகப்பெரிய லித்தியம் சுரங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் காரணமாக இனி சீனாவில் இருந்து இந்தியாவிற்கு லித்தியம் இறக்குமதி செய்வது குறையும் என்று வணிகர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை அதிக அளவு உற்பத்தி செய்ய ஆயத்தமாகி வருகிறது. இந்தியாமுழுவதும் மின்சார வாகனகள் எண்ணிக்கை இதனால் மின்னல் வேகத்தில் உயரப்போகிறது. காற்றாலை, சோலார் பேனல் உள்ளிட்ட மரபுசார மின்சக்திகளை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியும். இந்தியாவில் காலநிலை சூரிய மின்சக்திக்கு உகந்ததாக உள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் மின்உற்பத்தி சோலாரில் சாத்தியம் என்கிற நிலை உள்ளது.

இதன் காரணமாக பல லட்சம் கோடிகளை கொட்டி பெட்ரோல் டீசலை இறக்குமதி செய்வதற்கு பதில் மின்சார வாகனங்களை அதிகரிக்கவும், மின் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. மின்சார வாகங்களுக்கு முக்கியமான பொருள் என்றால் அது லித்தியம் பேட்டரிகள் தான். மின்சார வாகனங்கள், செல்போன்கள் மற்றும் லேப்டாப்களில் லித்தியம் பேட்டரிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா, கடந்த 2020-21 ஆண்டில் ரூ.6,000 கோடிக்கும் மேல் லித்தியம் இறக்குமதி செய்திருந்தது. குறிப்பாக சீனாவில் இருந்து மட்டும் ரூ.3,500 கோடிக்கு இறக்குமதி செய்திருக்கிறது. இந்நிலையில் லித்தியம் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் அமெரிக்கா தலைமையில் தாது பாதுகாப்பு கூட்டு அமைப்பு (எம்எஸ்பி) கடந்த 2021-ம் ஆண்டே அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பின்லாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், கொரியா, ஸ்வீடன் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த அமைப்புகளுக்குள் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில இந்தியாவின் கானிஜ் பிதேஷ் இந்தியா நிறுவனம் (கபில்) மற்றும் கேம்யென் என்ற நிறுவனமும் கூட்டாக இணைந்து அர்ஜென்டினாவின் கேட்டமர்கா மாகாணத்தில் 15,703 ஹெக்டேரில் உள்ள 5 லித்தியம் சுரங்கத்தில் ஆய்வு மற்றும் லித்தியம் எடுக்கும் ஒப்பந்தத்தை ரூ.200 கோடி மதிப்பில் செய்திருக்கின்றன.
இந்த ஒப்பந்தம் லித்தியம் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பத்தை பெறுவதற்கு நிச்சயம் உதவும் என்றும், இந்த ஒப்பந்தம் லித்தியம் விநியோகத்தை வலுப்படுத்த இந்தியாவுக்கு உதவும் என்றும் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா - இந்தியா இடையே மிகப்பெரிய லித்தியம் சுரங்க ஒப்பந்தம் நேற்று தான் கையெழுத்தாகி உள்ளதுது. இந்த ஒப்பந்தம் காரணமாக கணிசமாக இனி அர்ஜென்டினாவில் இருந்து லித்தியம் இறக்குமதியாகும். இதன் மூலம் சீனாவில் இருந்த லித்தியம் இறக்குமதி குறையும்.












Click it and Unblock the Notifications