நினைக்க முடியாத பிரம்மாண்டம்.. வருது சென்னை பெரிபெரல் ரிங் ரோடு.. நிறைவு பெறப்போகும் பணிகள்?
சென்னை: சென்னை பெரிபெரல் ரிங் ரோடு திட்டத்தின் 3ஆம் கட்டப் பணிகள் 80% நிறைவடைந்து, எதிர்பார்த்ததைவிட வேகமாக நடைபெற்று வருகின்றன. இச்சாலையின் ஒரு பகுதி ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன், எண்ணூர் துறைமுகத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் கனரக வாகனப் போக்குவரத்தை எளிதாக்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் கீழ், எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் வரை சுமார் 132.87 கி.மீ தூரத்திற்குப் பல கட்டங்களாக இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. இத்திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை மற்றும் சித்தூர்-தச்சூர் விரைவுச் சாலைத் திட்டங்களுடன் இணைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரிபெரல் ரிங் ரோடு
சென்னை பெரிபெரல் ரிங் ரோட்டின் 3ஆம் கட்டப் பணிகளைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூரில் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் வெங்கத்தூர் (10.4 கி.மீ), வெங்கத்தூர் முதல் செங்காடு (10 கி.மீ), மற்றும் செங்காடு முதல் திருப்பெரும்புதூர் (9.7 கி.மீ) வரையிலான சுமார் 30 கி.மீ தூரத்திற்கு 2,689.74 கோடி ரூபாய் செலவில் ஆறுவழிப்பாதை மற்றும் இருவழி சேவைச் சாலை அமைக்கப்படவுள்ளது. இத்திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இச்சாலைப்பணி நிறைவுபெறும்போது, தமிழ்நாட்டின் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், தொழில்துறை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA) ₹2,784 கோடி வெளிநாட்டு நிதியை இத்திட்டத்திற்காக வழங்கியுள்ளது. சிங்கப்பெருமாள்கோயில் முதல் பூஞ்சேரி (மாமல்லபுரம் அருகே) வரையிலான சென்னை பெரிபெரல் ரிங் ரோடு பிரிவு 5-க்கு நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் (TNRDC) ஆலோசகர்களை நியமித்துள்ளது.
பெரிபெரல் ரிங் ரோட்டின் 3ஆம் கட்டப் பணிகள்
சென்னை பெரிபெரல் ரிங் ரோடு திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ₹12,301 கோடி. இதன் நீளம் சுமார் 132.87 கி.மீ ஆகும். இச்சாலையில் ஆறு பிரதான பாதைகளும், இருபுறமும் இரண்டு சேவைப் பாதைகளும் என மொத்தம் 10 பாதைகள் அமையவுள்ளன. இச்சாலை 120 கி.மீ/மணி வடிவமைப்பு வேகத்துடன் கட்டப்படுகிறது. எண்ணூர்-தச்சூர் பிரிவு தற்போது கட்டுமானத்தில் உள்ளது, மேலும் இத்திட்டம் 2025ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிவுகள் 2 மற்றும் 3 (56.2 கி.மீ, தச்சூர் முதல் செங்காடு வரை) ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான OPEC நிதி (OFOD) ஆகியவற்றின் மூலம் முறையே USD 378 மில்லியன் மற்றும் USD 100 மில்லியன் கடன் உதவியுடன் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகத்தின் (TNRDC) கீழ் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) மாதிரியில் செயல்படுத்தப்படுகிறது.
எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம்
எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் வரையிலான 133 கி.மீ நீளமுள்ள சென்னை பெரிபெரல் ரிங் ரோட்டின் பெரும்பகுதி 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையால் 132.87 கி.மீ தூரத்திற்கு இந்தச் சாலை அமைக்கப்படவுள்ளது.
இந்த 10 வழி அணுகல் கட்டுப்பாடு விரைவுச்சாலை, எண்ணூர் துறைமுகம் மற்றும் மகாபலிபுரத்தை இணைக்கும். இது சென்னையின் நான்காவது ரிங் ரோடாக அமையும். சிங்கப்பெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவொயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ₹12,301 கோடி மதிப்பீட்டில் இது உருவாகிறது.
இந்த 10 வழிச்சாலை இந்தியாவில் மிகப்பெரிய சாலைகளில் ஒன்றாக இருக்கும். உலகிலேயே 132 கி.மீ நீளத்திற்கு ரிங் ரோடு அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் இந்த சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் இரண்டு கட்டங்களாக நிறைவடைந்து ஜனவரியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும். எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி, எல் அண்ட் டி போன்ற தனியார் துறைமுக நிறுவனங்கள் இத்திட்டத்தை விரைந்து முடிக்க தமிழக அரசை வலியுறுத்தி உள்ளன. இச்சாலை முடிந்தவுடன் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications